Friday, February 16, 2018

காவிரி நதிநீர்ப் பங்கீடு உச்சநீதிமன்றத் தீர்ப்பு; தமிழகத்திற்கு அநீதி! வைகோ அறிக்கை!

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கி உள்ள தீர்ப்பு, தமிழக விவசாயிகளையும், பொதுமக்களையும் கடும் அதிர்சிக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கி இருக்கின்றது. காவிரிப் பாசனப் பகுதிகளில் 13 இலட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுப் பயிர்கள் கருகி அழியும் நிலையில் இருக்கும்போது, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பேரிடியாக உள்ளது.

காவிரி நடுவர் மன்றம் 1990 ஜூன் 2 ஆம் தேதி அமைக்கப்பட்டது.

1991 ஜூன் 25 ஆம் தேதி, நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில், ‘தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என்று கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.

காவிரிப் பிரச்சினை குறித்த அனைத்து விபரங்களையும், சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே ஏற்பட்ட 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் பாசனப் பரப்பு, நீர்த் தேவை, பருவ மழையின் அளவு, காவிரியில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் காலம் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் காவிரி நடுவர் மன்றம் விசாரணை நடத்தியது.

1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு அளித்த புள்ளி விபரங்களின்படி, கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழகம் பெற்று வந்தப் பாசன நீரின் அளவு சராசரியாக 573.4 டி.எம்.சி. ஆகும்.

சுமார் 17 ஆண்டுகள் முழு விசாரணைக்குப் பின்னர் பிப்ரவரி 5, 2007 இல் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 205 டி.எம்.சி. நீரை, 192 டி.எம்.சி. யாகக் குறைத்துவிட்டது.

இதில் சுற்றுச் சூழலுக்கு 10 டி.எம்.சி., கடலில் விழுந்து ஆவியாதல் நீருக்காக 4 டி.எம்.சி. ஆகமொத்தம் 14 டி.எம்.சி. கழிக்கப்பட்டு, 178 டி.எம்.சி.யாக குறைந்தது. இதிலும் 7 டி.எம்.சி. நீரை புதுச்சேரிக்கு வழங்க வேண்டும். ஆக கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் பாசன நீர் வெறும் 171 டி.எம்.சி. மட்டுமே.

இந்த அளவு நீரைக்கூடத் திறக்க முடியாது என்று கர்நாடகம் அடாவடித்தனம் செய்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் மேலும் 14.75 டி.எம்.சி. தண்ணீரைக் குறைத்து இருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி ஆகும். இதன்படிப் பார்த்தால், இனி தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 156.25 டி.எம்.சி. மட்டுமே ஆகும்.

கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளுக்குக் கூடுதல் நீர் தேவைப்படுவதாலும், பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து இருப்பதாலும் கர்நாடாகாவுக்குக் கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் தெரிவித்து இருக்கின்றார்.

அது மட்டும் அல்ல; தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருப்பதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கூறி இருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது. பல ஆண்டுகளாகக் காவிரியில் தண்ணீர் இல்லாமல் தமிழகத்தின் நிலத்தடி நீர் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களிலேயே 500 முதல் ஆயிரம் அடி வரை கீழே போய்விட்டது.

1990-இல் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 11.2 இலட்சம் ஏக்கர் இருந்ததை விரிவுபடுத்தக் கூடாது என்று நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில் கூறியது. ஆனால், கர்நாடகம் காவிரிப் பாசனப் பரப்பை தற்போது 22 இலட்சம் ஏக்கர் அளவுக்கு அதிகரித்து விட்டது. தமிழ்நாட்டில் 25.80 இலட்சம் ஏக்கராக இருந்த பாசனப் பரப்பு தற்போது 24.05 இலட்சம் ஏக்கராகச் சுருங்கி விட்டது.

இந்த உண்மை நிலையைக் கருத்தில் கொள்ளாமல், கர்நாடக மாநிலத்தின் அக்கிரமமான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டுக்கு நீரின் அளவைக் குறைத்து இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

உச்ச நீதிமன்றம் 2016-இல் உத்திரவிட்டும்கூட, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் அளித்த இறுதி உத்திரவைச் செயற்படுத்த முடியாது என்றும், உச்ச நீதிமன்றம் உத்திரவிட முடியாது; நாடாளுமன்றத்திற்குத் தான் அதிகாரம் உண்டு எனவும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது உச்ச நீதிமன்றம் காலக்கெடு எதுவும் விதிக்காமல், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது வெறும் கண்துடைப்பு ஆகும்.

காவிரி நதி எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்று கூறுவதையும் ஏற்க முடியாது. நதிநீர்ப் பங்கீடு குறித்த ஹெல்சிங்கி விதியின்படி (Riparian State) வடிநிலப் பகுதிக்குத்தான் ஆற்று நீரில் அதிக உரிமை உண்டு. அந்த வகையில், தமிழ்நாட்டின் உரிமையைத் தட்டிப் பறிப்பதை ஏற்கவே முடியாது.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் காவிரி வழக்கில் வாதாடத் தவறியதால் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டுக்குப் பாதகமான தீர்ப்பை அளித்து விட்டது. தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, காவிரி நீர்ப் பங்கீடு பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்வது குறித்து விவாதிக்க வேண்டும். தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 16-02-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment