Friday, February 16, 2018

கார்த்திகேயன் பாண்டியன் ஐஏஎஸ் மீது ஒடிசாவில் பா.ஜ.க. கும்பல் தாக்குதல் வைகோ கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் - மேலூரில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது கடும் உழைப்பால் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர் கார்த்திகேயன் பாண்டியன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்த இவர், தற்போது ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களின் தனிச் செயலாளராகப் பணி ஆற்றுகின்றார். நேர்மையான அதிகாரியாக இருப்பதால், ஒடிசா மாநில அரசில் தனிக்கவனம் பெற்றுள்ளார்.

கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள இவரது வீட்டின் மதில் சுவரைத் தாண்டிக் குதித்த கொண்டு வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி இருக்கின்றது. பூந்தொட்டிகளை உடைத்துள்ளனர்; சாணத்தைக் கரைத்து வீட்டுச் சுவர்களின் மீது ஊற்றியுள்ளனர். பாரதிய ஜனதா கொடியுடன் வந்த புவனேஸ்வரம் நகர பா.ஜ.க. தொண்டர்கள்தான் இந்தக் கொலைவெறித் தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்துத்துவக் கும்பலின்இந்த வன்முறை கடும் கண்டனத்துக்கு உரியது.

19 ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல்வராக பணி ஆற்றும் நவீன் பட்நாயக் அவர்கள் மீது ஒடிசா மாநில மக்கள் அளவற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்து இருக்கின்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், முதல்வரின் தனிச் செயலர் கார்த்திகேயன் பாண்டியன் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல்பாடுகள்தான் என்பதால் பா.ஜ.க. தலைவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டு இருக்கின்றது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவரான மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், “ஒடிசா மக்களின் வரிப்பணத்தில் இருந்து மாத ஊதியம் பெறும் அரசு ஊழியரான பாண்டியன், ஒடிசா மக்கள் போராடத் தயங்க மாட்டார்கள் என்று கருதிவிட வேண்டாம்” என்று கூறி இருக்கின்றார். இதிலிருந்து அவர்தான் இந்தத் தாக்குதலை நடத்தத் தூண்டி இருக்கின்றார் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

எப்படியாவது ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கின்ற காரணத்தால், நவீன் பட்நாயக் அவர்களை வீழ்த்த நினைக்கும் பா.ஜ.க., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வன்மம் கொண்டு இருப்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் வேற்று மாநிலத்தவர் என்று அடையாளம் கூறப்பட்டு, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதும், பா.ஜ.க. மத்திய அமைச்சர் ஒருவரே இதனைக் கண்டிக்காமல் நியாயப்பபடுத்திப் பேசி இருப்பதும், இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில்பாதுகாப்பு இல்லை என்பதைக் காட்டுகின்றது.

தமிழர்களுக்கு வெளிநாட்டிலும், ஈழத்திலும் பாதுகாப்பு இல்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் ஐ.ஏ.எஸ். போன்ற உயர் அலுவலர்களாகப் பதவியில் இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

இதுதான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கும் இலட்சணமா?

ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சிறந்த வரலாற்று ஆய்வாளர். ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்னும் ஆய்வு நூலை வழங்கியவர். மேலும் ஒடிசா மாநில வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராகப் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ.மதிவதனன், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர். இதுபோன்ற 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒடிசாவில் சிறப்பான பதவிகளில் இருக்கின்றார்கள்.

வெளி மாநிலங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட தமிழர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமை ஆகும்.

கார்த்திகேயன் பாண்டியன் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பலைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஒடிசா அரசையும், இந்தத் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசி வருகின்ற தர்மேந்திர பிரதானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசையும் வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 16-02-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment