Monday, February 26, 2018

முடங்கிக் கிடக்கின்ற அறிவியல் தமிழ் மன்றத்தை இயக்கிடுக! வைகோ அறிக்கை!

உலகம் முழுவதும் கணினி, இணையம் வழியிலான தகவல் தொடர்புகள் விரிவு அடைந்து கொண்டே போகின்றன. பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அதற்கு ஏற்ற வகையில், அறிவியல் தமிழ் வளரவில்லை.

ஜப்பான் நாட்டில் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், அயல்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை ஜப்பானுக்குள் கொண்டு வந்து விற்பதாக இருந்தாலும், முதலில் அதற்கான விளக்கங்களை ஜப்பானிய மொழியில் அச்சிட்டுத் தர வேண்டும். அங்கே அனைத்து நிலைகளிலும் ஜப்பானிய மொழியே கோலோச்சுகின்றது. அதுபோலவே, சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் தாய்மொழியிலேயே அறிவியலைப் பயில்கின்றார்கள்.

அதுபோல, அறிவியல் தமிழை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக ஆகி இருக்கின்றது.

அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் 2006 ஆம் ஆண்டில் ‘அறிவியல் தமிழ் மன்றம்’ அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பின் முதல் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டார். துணைத்தலைவராக பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர், செயலராகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக, ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், டாக்டர் காந்தராஜ், சாரதா நம்பி ஆரூரன், டாக்டர் சாமுவேல் ரைட் ஆகியோர்நியமிக்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டில் மணவை முஸ்தபா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் பதவியில் இருந்து விலகிக் கொள்ள விரும்பிய நிலையில், அப்பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, கவிஞர் கா. வேழவேந்தன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு இம்மன்றம் செயல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது.

கணினி, இணையம் வழியிலான தகவல் தொடர்பில் பல்வேறு புதிய ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு இணையான நல்ல தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். தகவல் தொழில் நுட்பத்தினைத் தமிழ் மொழியிலேயே படித்துத் தெரிந்து கொள்வதற்கு ஏற்ற பல்வேறு அறிவியல் தமிழ் நூல்கள் வெளியிட வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளிலான உயர்கல்வியில் தமிழ் மொழிப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அறிவியல் பயன்பாட்டில் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இச்சூழலில் அனைத்து வகையான அறிவியல் தமிழ் தொடர்பான பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டி இருக்கின்றது.

இனி தமிழில் மாதந்தோறும் 1000 புதிய சொற்கள் சேர்க்கப்படும் என்று, சில மாதங்களுக்கு முன்பு தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். ஆனால், அறிவியல் தமிழ் தொடர்ந்து தேக்க நிலையில் இருந்து வருகின்றது. துறைசார் இதழ்கள், ஆய்வு ஏடுகள் தமிழில் கிடைக்காத நிலையே இருக்கின்றது. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை என்ற குறைபாடும் இருக்கின்றது.

இந்த நிலையினைப் போக்கிட, முடங்கிக் கிடக்கின்ற அறிவியல் தமிழ் மன்றத்தினை மீண்டும் இயங்கிடச் செய்ய வேண்டும்; அதன் வழியாக அறிவியல் தமிழை வளர்த்திடத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 26-02-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment