Monday, February 5, 2018

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகில் செல்லத் தடை-வைகோ கண்டனம்!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பங்கேற்குமாறு தமிழக மீனவர்களுக்கு யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று தமிழ்நாட்டிலிருந்து 60 விசைப் படகுகளில் 1800க்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள்.


கடந்த 2017 ஆம் ஆண்டு திருவிழா நடைபெறும் காலத்திற்கு முன்பாக தமிழக மீனவர் பிரிட்ஜோ, இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து மீனவர்கள் திருவிழாவில் பங்கேற்வில்லை. இந்த ஆண்டு விழாவில் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசைப் படகுகளில் செல்லும் மீனவர்களோடு, பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகிலும் கச்சத் தீவு சென்று இத்திருவிழாவில் பங்கேற்பதை வாழ்வின் தலையாயக் கடமைகளுள் ஒன்று என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கருதுகின்றனர். இவர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுப் படகில் சென்றுதான் வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள்.

1974 ஆம் ஆண்டு கச்சத் தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், புனித அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு நடத்திட மீனவர்களுக்கு உரிமை உண்டு; இந்திய - இலங்கை கச்சத் தீவு ஒப்பந்தம், தமிழக மீனவர்களின் வழிபாட்டு உரிமையை தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தத்தின் பிரிவுகள் 3, 4 மற்றும் 5 ன் படி, இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை; எவ்வித ஆவணமும் இன்றி அந்தோணியார் திருவிழாவுக்குச் செல்லும் உரிமை ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆனால், ‘வல்லம்’ எனப்படும் நாட்டுப் படகில் கச்சத் தீவு செல்லும் பாரம்பரிய மீனவர்களுக்கு இலங்கை அரசு உள்நோக்கத்துடன் தடை விதித்து, அனுமதி மறுப்பது கச்சத் தீவு ஒப்பந்தத்தைச் செயல் இழக்கச் செய்வதற்கான சதி ஆகும்.

இலங்கை அரசின் மோசடித் திட்டத்தை அறிந்தும், அறியாதது போல இந்திய அரசு செயல்படுவதுதான் மீனவர்களைக் கொந்தளிக்கச் செய்கிறது. இலங்கை அரசுக்கு துணைபோகக்கூடிய வகையில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், “ கச்சத் தீவில் நடக்கும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகில் போகக் கூகூடாது, விசைப்படகில்தான் செல்ல வேண்டும்” என்று தடை பிறப்பித்து இருக்கும் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது.

காலம் காலமாக பாரம்பரிய மீனவர்கள், நாட்டுப் படகில் கடலுக்குச் சென்று வாரக் கணக்கில் அங்கேயே தங்கி மீன்பிடித் தொழில் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டுப் படகுகளும் இயந்திரத்தின் மூலமாகத்தான் இயக்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்து இருப்பது நகைப்பிற்கு உரியதாகும்.

பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் தேவையில்லை என்றாலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசின் அனுமதி பெற்றவர்கள்தான் கச்சத் தீவு திருவிழாவுக்குச் செல்ல முடியும்.

இலங்கைக் கடற்படையினர்தான் கச்சத் தீவுக்கு யார் வரவேண்டும் என்பதை முழுக்க முழுக்கத் தீர்மானிக்கிறார்கள். விசைப்படகில் செல்லும் மீனவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிச் சீட்டு வழங்கி வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் இந்திய -இலங்கை கச்சத் தீவு ஒப்பந்தத்தை, இலங்கை அரசு செயலற்றதாக ஆக்குவதற்கு வழி வகுக்கும்.

கச்சத் தீவைத் தாரை வர்த்ததன் மூலம் இந்திய அரசு, தமிழக மீனவர்களின் மரபு உரிமையைப் பறித்துவிட்டது. புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்கும் தமிழக மீனவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம், இருக்கின்ற சொற்ப உரிமையையும் இழக்க நேரிடும்.

எனவே, தமிழக அரசு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகுகளில் சென்று புனித அந்தோணியார் ஆலய வழிபாட்டில் கலந்துகொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் இன்று 05-02-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment