Tuesday, July 31, 2018

இரா.முத்தரசன் அவர்களுக்கு முப்பெரும் மாநாட்டிற்கு வைகோ அழைப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திரு.இரா.முத்தரசன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, முப்பெரும் விழாவுக்கான அழைப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 31-07-2018 வழங்கினார்கள்.

உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, July 30, 2018

விசிக தலைமையகத்தில் வைகோ! திருமாவிற்கு மாநாட்டு அழைப்பு!

ஈரோடு முப்பெரும்விழா மா நாட்டிற்கான அழைப்பிதழை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேற்று 30-07-2018 விசிக தலமையகம் சென்று விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் கொடுத்து அழைப்பு விடுத்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தா.பாண்டியன் அவர்களை நலம் விசாரித்த வைகோ!

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வரும் இ.கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.தா.பாண்டியன் அவர்களை இன்று 30-07-2018 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.

உடன் மதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, July 29, 2018

தாயகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி மாநிலத் துணைச்செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று (29.07.2018) காலை 11 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன் தலைமையில்நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா கருத்துரை வழங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம்:1
ஈரோடு முப்பெரும் விழா மாநாட்டில் பத்தாயிரம் இளைஞர்கள் கலந்துகொள்வது

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை பறைசாற்றப் போவதும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எழுச்சியும், புத்துணர்ச்சியும் தரப்போவதும், கழகப் பொதுச்செயலளார் வைகோ அவர்களின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வில் அவரின் ஈடு இணையற்ற உழைப்பையும், தியாகத்தையும் போற்றுகின்ற விழாவாகவும் அமைய இருக்கிற ஈரோடு முப்பெரும் விழா மாநாட்டில் கழக இளைஞர் அணியின் சார்பில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொள்வது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 2
5 இலட்சம் பேர் கலந்துகொள்ளும் மாவட்ட அளவிலான மராத்தான் போட்டி

மதிமுக இளைஞர் அணியின் சார்பாக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தலா 10,000 மாணவ - மாணவிகள் கலந்துகொள்ளும் வகையில் மதுவிலக்கு மராத்தான் போட்டிகளை நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 3
உலகத்தரப் பல்கலைக் கழகங்களை புதிய அரசு பல்கலைக் கழகங்களாகவே அமைத்திடுக!


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 14 இடங்களில் மத்திய அரசின் நிதியில் உலகத்தரப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என 2008 ஆம் ஆண்டு அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு அர்ஜூன்சிங் அவர்கள் அறிவித்தார்.

மத்திய அரசு அறிவித்ததைப் போல ஒவ்வொரு இடத்திலும் 500 ஏக்கர் பரப்பளவில் தலா 3,000 கோடி மத்திய அரசு நிதியில் புதிய உலத்தரப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டிருந்தால் இந்தியாவின் உயர்கல்வித்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கும்.

ஆனால் அதனைக் கைவிட்டுவிட்டு, நீண்ட கால இழுத்தடிப்புக்குப் பின்பு ஏற்கனவே இயங்கி வருகிற பழைய கல்வி நிறுவனங்களில் அரசு நிறுவனங்கள் 10க்கும், தனியார் நிறுவனங்கள் 10க்கும் தலா 1000 கோடி நிதி அளிக்க தற்போதைய மத்திய அரசு முடிவு செய்து 6 நிறுவனங்களின் பெயரும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதுவரை தொடங்கப்படாத ஜியோ நிறுவனத்தையும் மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இதனால் இதன் அடிப்படை நோக்கம் சிதைந்துபோய்விட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அர்ஜூன்சிங் அவர்கள் அறிவித்ததைப் போல் மத்திய அரசின் முழுநிதியில் புதிய உலகத்தரப் பல்கலைக் கழகம் அமைக்கக வேண்டும் என மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 4
தமிழக அரசே தண்ணீரை வர்த்தகப் பொருளாக்கும் முயற்சியை கைவிடுக!


தண்ணீரை வர்த்தகப் பொருளாக்கும் தமிழக அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஏழை மக்களுக்கு அடிப்படை தேவைக்கான தண்ணீர் இலவசமாக வழங்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.


தீர்மானம்:5
நீர்நிலைகளை மேம்படுத்தவும், புதிய நீர் மேம்பாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்க


தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்த நிலையிலும், வெள்ள நீரைச் சேமிக்கப் போதுமான கட்டமைப்புகள் உருவாக்காத காரணத்தால் நீரை முறையாக பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது.


தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தவும், புதிய நீர் மேம்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் 29-07-2018 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் கலந்துகொள்ள திருநாவுக்கரசருக்கு வைகோ அழைப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் அவர்களை, இன்று (29.07.2018) அவரது இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15 அன்று ஈரோட்டில் நடைபெறும் மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

திருநாவுக்கரசர்  அவர்கள் அவசியம் வருவதாக கூறினார்.

இணையதள செய்தி

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

பொய்க் குற்றச்சாட்டினால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி டாக்டர் ராஜமார்த்தாண்டத்தின் நண்பர்கள், உறவினர்கள் வைகோவுக்கு நன்றி!

அசாம் மாநிலத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த டாக்டர் ராஜமார்த்தாண்டன் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் அம்மாநில காவல்துறை அதிகாரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கவனத்திற்கு வந்ததையடுத்து அசாம் மாநிலத்தின் முதலமைச்சரை தொடர்பு கொண்டு ராஜமார்த்தாண்டத்தை மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொண்டார்..

தன்னை பணியில் அமர்த்த உரிய நடவடிக்கை மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவர்களை, 28.07.2018 சனிக்கிழமை கலிங்கப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறை உயர் அதிகாரி ராஜமார்த்தாண்டத்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சந்தித்து அசாம் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற வகையில் நினைவுப் பரிசு வழங்கி தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, உலகத்தில் எந்த தமிழனுக்கும் துன்பம் நேர்ந்தாலும் தன்னால் இயன்ற அளவுக்கு உதவி செய்வேன் என கூறினார்.

உலகத்தில் தமிழனுக்கு எங்கு துன்பம் நேர்ந்தாலும் முதலில் குரல் கொடுப்பவர் வைகோதான் என ராஜமார்த்தாண்டத்தின் உறவினர்களும் நண்பர்களும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Saturday, July 28, 2018

அண்ணா பெரியார் பேச்சு போட்டிக்கு ₹10000 வழங்கிய ஓமன் மதிமுக!

ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஓவ்வொரு தமிழக மாவட்டமாக மதிமுக‌ மாணவரணி நடத்தும் அண்ணா பெரியார் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றிய அண்ணா பெரியார் பணிகளை உலகறிந்திட செய்யும் நிகழ்விற்கு ஊக்கமளிக்கும் விதமாக ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ₹ 10000 த்தை‌ இந்த‌ பேச்சு போட்டிகளை தலைமையேற்று நடத்தும் மதிமுக மாணவரணி செயலாளர் அண்ணன் மணவை தமிழ் மாணிக்கம் அவர்களிடத்தில், மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில‌துணை அமைப்பாளர் தமிழருண் மூலம்‌ திருச்சியில் கையளிக்கப்பட்டது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மண்டல, மாநில‌ அளவில் வெற்றி வாகை சூட ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, July 25, 2018

நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கக் கோரி கேரள முதல்வர் பினராய் விஜயன் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோருடன் வைகோ சந்திப்பு!

இன்று 2018 ஜூலை 25 ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களை கேரள அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தார்.

தமிழ்நாட்டில் - தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் இந்திய அரசு அமைக்க முனைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகம் தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் பெரும் நாசத்தை ஏற்படுத்தும். இந்த ஆய்வகத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவும், அதற்கு அருகில் இடுக்கி அணையும் இருக்கின்றது.

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க 12 இலட்சம் டன் பாறைகளை உடைக்கப் போகிறார்கள். அப்படி இடிக்கும்போது இடுக்கி அணையிலும், பென்னிக் குயிக் முல்லைப் பெரியாறு அணையிலும் விரிசல்கள் ஏற்பட்டு அணைகள் உடையும் பேராபத்து ஏற்படும்.

அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் மத்தியில் ஆளும் மோடி அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறது. அணுக்கழிவுகளைக் கொண்டுவந்து இந்த ஆய்வகத்தில் கொட்டுவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.


எதிர்காலத்தில் உலகத்தின் எப்பகுதியில் உள்ள அணு ஆயுதங்களையும் செயல் இழக்கவோ, வெடிக்கவோ செய்வதற்கான திட்டமும் இதில் அடங்கி இருக்கிறது.

இத்திட்டத்திற்கு தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்பு இருக்கிறது.

கடந்த ஆண்டு உங்களிடம் நியூட்ரினோ திட்ட ஆபாயம் குறித்து விளக்க மடல் தந்தேன். கேரள அரசினுடைய வனத்துறையும், சுற்றுச் சூழல் துறையும் நியூட்ரினோ திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துவதற்காகவே இன்று இந்தக் கடிதத்தைத் தருகிறேன் என்று வைகோ கூறினார்.

அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து தக்க முடிவு எடுப்பேன் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்.

அதற்கு முன்னர் காலை 9.30 மணி அளவில், கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா அவர்களை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, 2018 செப்டம்பர் 15 இல் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்புக் கடிதம் தந்தார். அவசியம் கலந்துகொள்வதாக ரமேஷ் சென்னிதலா ஒப்புதல் அளித்தார்.

நியூட்ரினோ திட்ட அபாயம் குறித்த விளக்கக் கடிதத்தை ரமேஷ் சென்னிதலாவிடம் வைகோ தந்தார்.

தற்போது உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் அவர்களை சந்திக்காவிடினும், அவரது இல்ல அலுவலகத்தில் நியூட்ரினோ குறித்த கடிதத்தைத் தந்ததோடு, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் இல்லத்திலும் அக்கடிதத்தை வைகோ சேர்ப்பித்தார். உம்மன்சாண்டி அவர்கள் வெளிமாநிலத்தில் இருக்கிறார்.

அதன்பின்னர் கேரள மாநில தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முதல்வரிடம் கொடுத்த கடித நகல்களை வைகோ வழங்கினார்.

மேற்கண்ட தகவல்களை மதிமுக தலைமை நிலையம் தாயகம் செய்தியில் இன்று 25-07-2018 வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.ரமேஷ் சென்னிதாலா வைகோ சந்திப்பு!

கேரள காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.ரமேஷ் சென்னிதாலா அவர்களை இன்று 25-07-2018 காலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தார்.

அப்போது செப் 15 ல் ஈரோட்டில் நடக்க இருக்கிற முப்பெரும் விழா மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

உடன் குமரி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், குமரி மாவட்ட மதிமுக தொண்டரணியினர் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

கல்குவாரியை மூடவேண்டும்-வைகோ வேண்டுகோள்!

ராஜபாளையம் அருகே சிவலிங்கபுரத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. அங்கு வெடி வைத்ததால் அதிர்வு காரணமாக பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளி கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து இரு மாணவர்க்க்ளுக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது.

இதையறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 24-07-2018 அன்று பள்ளி சென்று மாணவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் கல் குவாரிக்கு சென்று பாரவையிட்டு அங்கு கல் வெட்டி எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டதையும், அதிர்வுகளால் கட்டடங்கள் பாதிக்கப்படுவதையும் அறிந்துகொண்டு மக்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு கல்குவாரியை மூட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

உடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்சி பேரவை

சொத்து வரி உயர்வு, வைகோ கண்டனம்!

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலும், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் அலட்சியப் போக்கில் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் சொத்து வரியை நூறு விழுக்காடு உயர்த்துவது கண்டனத்துக்கு உரியது ஆகும்.

அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வருவதால் நகராட்சி நிர்வாகத்தில் தேக்க நிலைமை உருவாகி உள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய ரூ.3500 கோடி நிதி உதவியும் தடைப்பட்டுள்ளது.

உள்ளாட்சி நிர்வாகம் சீரழிந்துள்ளதால்தான் சொத்துவரி வசூலிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும். உயர்நீதிமன்றத்தின் உத்தரவைக் காரணமாகக் காட்டி, சொத்து வரியை ஒரேயடியாக நூறு விழுக்காடு உயர்த்துவதை நியாயப்படுத்த முடியாது.

1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொத்துவரி உயர்த்தப்படவில்லை என்று அரசு கூறுவதும் ஏற்கக் கூடியது அல்ல. ஏனெனில் 2011 ஆம் ஆண்டிலிருந்து எட்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிமுக அரசுதான் பொறுப்பில் இருக்கிறது. மக்களைப் பாதிக்காத வகையில் அவ்வப்போது சொத்து வரியை மாற்றி அமைத்திருக்கலாம். அதைவிடுத்துவிட்டு, தற்போது ஒரே சமயத்தில் சொத்து வரி உயர்த்தப்படுவது மக்களுக்கு பெரும் சுமையாகும்.

எனவே தமிழக அரசு உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதுடன், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து, அதன் பின்னர் உரிய வகையில் சொத்து வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 25-07-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை.

Tuesday, July 24, 2018

இலங்கை அரசிடம் சலுகைகள் பெற்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்! இலங்கை அரசுக்கு  கடுமையான தண்டனை பெற்றுத் தர உலகெங்கும் வாழும் தமிழர்கள் உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும்-வைகோ அறிக்கை!

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போது அதில் இருந்து பிரித்தானியாவை பின்வாங்க வைக்கும் நோக்கில், இலங்கையின் அன்றைய மகிந்த அரசு, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களை தம் வலையில் வீழ்த்தியது. அதில் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர்தான் வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக தொழிலாளர் கட்சியின் 50 வயது நிரம்பிய முக்கிய தலைவர் இயன் பேர்ஸ்லி.

இதற்காக இவர் குடும்பத்துடன் இரண்டு முறை இலங்கைக்கு உல்லாசப் பயணம் சென்றுள்ளார். முதல் முறை 2013 ஏப்ரலிலும், அதே ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது முறையாகச் சென்றுள்ளார். முதல்தர விமான இருக்கைப் பயணம், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பது என இவர்களின் அனைத்துச் செலவுகளுக்கும் இலங்கை அரசே பொறுப்பேற்றுக் கொண்டது.

அச் செலவு பிரித்தானிய பவுண்ட்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது இலங்கை பணத்தில் 1 கோடியே 4 லட்சத்தில் இருந்து 2 கோடியே 8 லட்சம் வரையாகும். இதற்கு பின்னரான காலப்பகுதியில் அதாவது 2013 நவம்பர் கடைசிப் பகுதியில் அன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் இலங்கைக்குப் பயணம் செய்து, யாழ்ப்பாணம் சென்றதும், போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெற வேண்டும் எனவும் இலங்கையில் வைத்து வலியுறுத்தினார். பின்னர் 2014 மார்ச்சில் ஜெனிவா கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மார்ச் 19ஆம் நாள் ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டு அன்றைய பிரதமர் டேவிட் கேமரனுக்கு பேர்ஸ்லி கடிதம் எழுதியுள்ளார்.

இயன் பேர்ஸ்லியின் இத்தகைய செயல்கள் குறித்து கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் பிரித்தானியப் பத்திரிகை டெய்லி ரெலிகிராப் ஆதாரப் பூர்வமாக வெளியிட்டது. தான் தவறு இழைக்கவில்லை எனவும், விசாரணைக்கு தயார் என்றும் பேர்ஸ்லி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பாராளுமன்ற விசாரணைகளில் முடிவு 2018 ஜூலை 18இல் வெளியிடப்பட்டுள்ளது. இவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டு, அதிகபட்ச தண்டனையாக 30 பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளார்.

புதிய பாராளுமன்ற ஒழுக்ககோவை நடைமுறைகளின் படி 10 நாட்களுக்கு மேல் ஒருவர் பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டால் இவரது தொகுதி வாக்காளர்களில் 10 சதவீதமானோர் இவரை திரும்பப் பெறவேண்டும் எனக்கோரி கையொப்பம் இட்டு ஒரு மனுவை கையளித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதுடன், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும். இதற்கான பணிகளில் மற்ற கட்சிகள் இறங்கியுள்ளதால், இவர் பதவியை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

இவர் மகிந்த அரசால் பணிக்கு அமர்த்தப்பட்டாலும், தற்போதை ரணில் அரசின் கையாளாகவும் செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதும், வட அயர்லாந்து - இலங்கை வர்த்தக உடன்பாடுகள் குறித்து தான் இலங்கை தூதுவர் அமரி விஜயவர்தனாவுடள் பேசியதாக அவருடன் எடுத்த படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்.

தமது அரசிற்கு துரோகம் இழைக்கும் வகையில் அந்நிய அரசு ஒன்றிற்கு ஒடிக்கொடுக்கும்

இவரைப் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பல நாடுகளில் உள்ளனர். இவ்வாறானவர்களுக்கான அச்சுறுத்தலாகவே இப்பிரித்தானிய ஒழுங்கு நடவடிக்கை அரங்கேறியிருக்கிறது. இது புலம்பெயர் தமிழர் கைக்கொள்ள வேண்டிய ஒரு பொறிமுறை என்பதை புலம்பெயர் தமிழினம் ஒரு பாடமாக கொள்ளுமா? என்பதை வரும் காலம் சொல்லும்...

மக்கள் போராட்டத்தில் பலமாக உள்ள நாட்டை அடையாளப்படுத்தி இப்படியான சிலரை தங்களுக்கு சார்பாக மாற்ற இலங்கை அரசாங்கம் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றது.

இதை தமிழ் மக்கள் புரிந்துகொண்டு, மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, அவர்கள் மூலமாக  வெளிவிவகார அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் .

வரும் மார்ச் மாதத்தில் இருந்து ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் முற்றாக வெளியே போவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அப்படி வெளியே போகும் பட்சத்தில் இலங்கையைக் கட்டுப்படுத்துவதற்கான  அனைத்துப் பிடிகளும்  தளர்ந்துவிடும்.

இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்ற இலங்கை அரசுக்கு  கடுமையான தண்டனை வழங்க, புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 24-07-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Saturday, July 21, 2018

வழக்கறிஞர் வீரபாண்டியன் நூல் வெளியீட்டு விழா!

மதிமுக உயர்நிலை குழு உறுப்பினர் செ.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா திருச்சி பெமினா ஹோட்டலில் 21-07-2018 நடந்தது.

நிகழ்வு தொடக்கத்தில் சிலம்பாட்டம் நடந்தது. சிறு வயதில் சிலம்பம் ஆடிய சிறுமிக்கு தலைவர் வைகோ அவர்கள் அழைத்து பாராட்டினார்.

வரவேற்புரை நிகழ்த்திய லலிதா வீரபாண்டியன் கூறுகையில், கடமையை செய், பலனை எதிர்பாராதே! என்ற வார்த்தைக்கு ஏற்ப நடப்பவர் தலைவர் வைகோ. அவர்தம் தம்பிகளின் மீது வைத்திருக்கும் பாசத்தை பட்டா போட இயலாது என்று பெருமை பட கூறினார்.

திரு.செ.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய நூல்களை தலைவர் வைகோ வெளியீட்டார்கள். இன்றைய நூல் வெளியீட்டு விழாவில் வசூலான ரூபாய் 2.5 லட்சம் கழகத்திற்காக உயிர் நீத்த சிவகாசி ரவி அவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவியாக வழங்க படுகிறது.

தலைவர் வைகோ அவர்கள் பேசும்போது, தமிழ் தேசிய வாதிகள் எங்கள் விரோதிகள் அல்ல. அதில் உள்ள போலிகள் தான் எங்கள் எதிரிகள் என பேசினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, July 20, 2018

மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களிடம் நலம் விசாரித்தார் வைகோ!

கால் மூட்டு அறுவை செய்து கொண்டுள்ள, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை, இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆர்த்தோமெட் மருத்துவமனையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப்பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (20.07.2018) சந்தித்து நலம் விசாரித்தார்.

உடன் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் அ.இரகுமான்கான், அவரது மகனும் ஆர்த்தோமெட் மருத்துவமனை நிறுவனருமான மருத்துவர் சுபேர்கான் உள்ளனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, July 19, 2018

சரத்பவார், யஷ்வந்த் சின்கா ஆகியோருடன் வைகோ சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவார் அவர்களை இன்று 19.07.2018 காலை 9.30 மணி அளவில் அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15 ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

சரத்பவார் அவர்கள் வருவதாகக் கூறி வைகோ அவர்களிடம் ஒப்புதல் தந்தார்.

18.07.2018 இரவு 8 மணி அளவில், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்கா அவர்களை அவரது இல்லத்தில் வைகோ அவர்கள் சந்தித்து, செப்டம்பர் 15 ஈரோடு மாநாட்டுக்கு வருமாறு அழைத்தபோது, வருவதாக ஒப்புதல் தந்தார்.

மேற்கண்ட தகவலை மதிமுக தலைமை நிலையம் தாயகம் இன்று 18-07-2018 செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, July 18, 2018

வைகோ மனுவை ஏற்கக் கூடாது ஸ்டெர்லைட் கடும் எதிர்ப்பு!

இன்று (18.7.2018) தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணையை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடுத்து இருந்தது. அந்த வழக்கு இன்று நீதிபதி ரகுவேந்திர ரத்தோர், நிபுணர் சத்யவான் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதனும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் திவிவேதியும் ஆஜர் ஆனார்கள். வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டவுடன், இந்த வழக்கில் தன்னையும் ஒருமனுதாரராக இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என்று, ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆனால், வைகோ போல் தாக்கல் செய்துள்ள மற்ற இருவரின் மனுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவிலலை.

எனவே, ‘வைகோ மனுவை மட்டும் ஏன் எதிர்க்கின்றீர்கள்?’ என்று நீதிபதி ரகுவேந்திர ரத்தோர் கேட்டார்.

‘முடிந்து போன பழைய விஷயங்களை எல்லாம் வைகோ கிளறுவார்’ என்றார் அரிமா சுந்தரம்.

உடனே வைகோ நீதிபதியைப் பார்த்து,

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 96 முதல் போராடி வருகின்றேன்; 97 ல் நான் தொடுத்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூடுவதற்கான தீர்ப்பை 2010 செப்டெம்பர் 28 இல் வழங்கியது.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மேல் முறையீட்டில், அத்தனை அமர்வுகளிலும் நான் பங்கெடுத்து இருக்கின்றேன்; தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்திலும் நான் மனுதாரராகச் சேர்க்கப்பட்டு, 2013 இல் விசாரணை நடந்தது. 


அந்த விசாரணை, தில்லியில் உள்ள தலைமைத் தீர்ப்பு ஆயத்திற்கு வந்தபோது, அங்கும் நான் வாதங்களை வைத்தேன். எனது மனு தலைமை தீரப்பு ஆயத்தில் தள்ளுபடியானபின் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவுடன், எனது மேல் முறையீட்டு மனுவும் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அண்மையில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கில்தான் தமிழக அரசு, ஆலையை மூடுவது அரசாங்கத்தின் முடிவு என்று அறிவித்துள்ளது. எனவே, இந்த விசாரணையில் பங்கேற்க எனக்குத் தகுதியும் உரிமையும் உள்ளது என்றார்.

இதன்பிறகும் ஸ்டெர்லைட் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்ததால், ‘உங்கள் எதிர்ப்பை எழுத்து மூலம் தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறிய நீதிபதி ஜூலை 30 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். 


நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
நான் நீதிமன்ற வளாகத்தில் ஆலைத்தரப்பு வழக்கறிஞரிடம், ‘என்னை மட்டும் ஏன் எதிர்க்கின்றீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘ஆலை நிர்வாகம் கூறியவாறு நாங்கள் எதிர்க்கின்றோம்’ என்று சொன்னார்.


ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில், எனது ஆணித்தரமான வாதங்களை எதிர்கொள்ள அஞ்சித்தான், ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் எனக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றது என்றார் வைகோ.

மேற்கண்ட தகவலை மதிமுக தலைமை நிலையம் நேற்று 18-07-2018 செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, July 11, 2018

மூலக்கொத்தளம் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம்: சட்டமன்ற உறுதிமொழிக்கு மாறான நடவடிக்கை! வைகோ கண்டனம்!

சென்னை மாநகரத்தில், வண்ணார்பேட்டையில், சென்னை 21, மண்டலம் 5, வார்டு 53 ல், மூலக்கொத்தளம் பகுதியில், 20 ஏக்கர் பரப்பில் உள்ள மயானத்தில், உயிர் இழந்தோரின் உடல்கள், கடந்த 120 ஆண்டுகளாக எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வருகின்றது.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் விடியலுக்காகவும், செந்தமிழ் மொழியின் தனித்தன்மையை, உரிமையைப் பாதுகாக்கவும், சமூக நீதியைக் காக்கவும், சமதர்ம சமுதாயம் காணவும் போராடிய மாவீரர்களின் உடல்கள், மூலக்கொத்தளம் மயானத்தில்தான் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்துள்ளன.

இந்தி எதிர்ப்பு முதல் போரில் சிறை சென்று மடிந்த வீரத் தியாகிகள் தாளமுத்து, நடராசன் இருவரின் நல்லுடல்களும் இங்குதான் எரிக்கப்பட்டன. இராஜா சர் முத்தையச் செட்டியாரும், மேயர் பாசுதேவும், அவ்வுடல்களைச் சுமந்து வந்தனர். பேரறிஞர் அண்ணா அவர்கள், மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரிகின்ற நெருப்பு, தமிழர்கள் நெஞ்சில் ஒருபோதும் அணையாது என்று உருக்கமாக உரை ஆற்றினார். தமிழ் மொழி உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய டாக்டர் தர்மாம்பாள் கல்லறையும் இங்குதான் உள்ளது.

ஈழத்தமிழ் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த, 2009 ஜனவரி 29 இல், தன் மேனியில் பெட்ரோலை ஊற்றித் தன் உடலைத் தீயின் நாக்குகளுக்கு அர்ப்பணித்த உத்தமத் தியாகி முத்துக்குமார், அவரது உயிர்த்தியாகத்தைச் சுட்டிக்காட்டி, தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி எரித்து உயிர் நீத்த அமரேசன் ஆகியோரது உடல்களும் இந்த மயானத்தில்தான் எரியூட்டப்பட்டன. இப்படி, நூற்றாண்டுக்காலத் தமிழர்களின் தியாக வரலாற்றின் அடையாளச் சின்னம்தான் மூலக்கொத்தளம் சுடுகாடு ஆகும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், 1938 ல் தனது உரையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நடராசனுக்கும், நாடார் சமூகத்தில் பிறந்த தாளமுத்துவுக்கும் சிலைகள் எழுப்பி, நாம் வீர வணக்கம் செலுத்த வேண்டும் என்றார்.

மூலக்கொத்தளம் மயானத்தில் குடிசைமாற்று வாரிய வீடுகள் கட்டும் தமிழக அரசின் திட்டத்தை வகுத்த அதிகாரிகள், தங்கள் குடும்பத்துடன் மயானத்தில் வீடுகள் கட்டி வசிக்க முன்வருவார்களா? தமிழகத்தில் உள்ள இதர நகரங்கள், கிராமங்களில் சுடுகாடுகளில் வீடுகளைக் கட்டி மக்களைக் குடி அமர்த்த முடியுமா? எந்த ஊரிலாவது இதை அனுமதிப்பார்களா?

இந்த மயானத்தைச் சுற்றிப் புதிதாக உருவாகி இருக்கின்ற அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர், இந்தச் சுடுகாட்டை அகற்றுவதற்காக, அதிகாரிகளைச் சரிக்கட்டி, ஏன் தமிழக அரசையும் சரிக்கட்டி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளனர். இது ஆதி திராவிட மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய அநீதி ஆகும்.

மூலக்கொத்தளம் மயானத்தை சிதைக்கக்கூடாது என்று 06.03.2018 இல் ஈரோடு மாநகரில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 26 ஆவது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றும் தமிழக அரசின் முடிவை மாற்ற வேண்டும் என்று அரசியல் எல்லைகளைக் கடந்து, ஆளும் கட்சி தவிர்த்த தமிழ் உணர்வுகொண்ட அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வு அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்ட அறப்போர் ஆர்ப்பாட்டம் அரசுக்கு விடும் முதல் எச்சரிக்கையாக எனது தலைமையில் 13.03.2018 செவ்வாய்க்கிழமை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இந்த அறப்போர் ஆர்ப்பாட்டம் குறித்து, 22.03.2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது கல்லறை அமைவிடத்தில் இருந்து 300 மீட்டர் இடைவெளிக்கு அப்பாலும், மொழிப்போர் தியாகி தருமாம்மாள் அம்மையாரின் கல்லறை அமைவிடத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பாலும் மட்டுமே திட்டப் பகுதிக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகளுக்கு எந்த ஊறும் விளைவிக்காமல் இருப்பதே எங்கள் கடமை என்று சட்டமன்றத்தில் கூறிவிட்டு, மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது கல்லறைக்கு மிக அருகாமையில் பகுதி 1இல், மூன்று மீட்டர்கூட இடைவெளி விடாமல், கல்லறை அமைந்துள்ள பகுதியிலேயே திட்டப் பணிகளைத் தொடங்கி உள்ளது சட்டமன்றத்தில் அளித்த உறுதிமொழிக்கு எதிரான மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.

திட்டப் பகுதி குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண். 249, நாள் 04.08.2017 (வருவாய்த்துறை நில அகற்றுப் பிரிவு LD 5(2) பிரிவு) சிறப்பு நிபந்தனைகளான 1.காற்று மாசு ஏற்படாமல் அப்பகுதியைக் காத்தல், 2. மயானத்தில் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்களுக்கு காப்புறுதி அளித்தல், 3.மயானப் பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாத்தல், 4. சாலை, பொதுக் கழிப்பிடம், பூங்கா, விளையாட்டுத் திடல்கள் தொடர்ந்து இயங்குவதற்கு உத்தரவாதம் அளித்தல், 5. பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும், சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுக்கழிபபிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு இடையூறு செய்யாமல், மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருக்க உத்தரவாதம் அளித்தல் ஆகிய சிறப்பு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியரின் புலதணிக்கைக் குறிப்பு, நாள் 15.12.2016 இன் படி நடைபெற்ற புலதணிக்கை ஆய்வில் திட்டப் பகுதி 1 இல், புல எண்.1802/1இல், 2 ஏக்கர் 58 சென்ட் பயன்பாட்டில் உள்ள மயானம் என்றும், திட்டப் பகுதி 2 இல் புல எண்.1802/1இல், வடக்கில் ஒரு ஏக்கர் 96 சென்ட் மயானம் மற்றும் கல்லறைகளாக பயன்பாட்டில் உள்ளது என்றும், கிழக்கில் ஒரு ஏக்கர் 55 சென்ட் இறந்தவர்களைப் புதைக்கும் மயானமாக இருந்து, தற்போது புதர்களாக உள்ள பகுதி என்றும், பகுதி 3 இல் ஒரு ஏக்கர் 43 சென்ட் பழைய சமாதிகள் மற்றும் கல்லறைகள் உள்ள பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கொத்தளம் மயான பூமியில் 2016 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத பிணங்கள் 315, மற்றும் 2417 பிணங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டதாகவும், 2017 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத பிணங்கள் 448 மற்றும் 2500 பிணங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டதாகவும், நடப்பு 2018 ஆம் ஆண்டில் மே மாதம் வரை அடையாளம் தெரியாத பிணங்களாக 250 மற்றும் 954 பிணங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டதாகவும் கோட்டம் 53, மண்டலம் 5, பொது சுகாதாரத்துறை மண்டல நல அலுவலர் தகவல் அளித்துள்ளார்.

ஆனால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அந்த 11 ஏக்கர் இடத்தில் எந்த ஒரு நினைவுச் சின்னமும் கிடையாது. அந்த இடங்களில் இதுநாள்வரை ஒரு பிணம்கூட புதைக்கப்படவில்லை என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டு, நிலைமைகளை திசை திருப்பி, பண்நெடுங்காலமாக பயன்பாட்டில் இருக்கும் மயானப் பகுதியை சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், பழக்கம் மற்றும் வழக்காறுகளுக்குப் புறம்பாகவும், மாவட்ட ஆட்சியர் புலதணிக்கைக்கு மாறான தகவல்களை அளித்திருக்கிறார்.

அரசாணை மற்றும் புலத்தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி 1, பகுதி 2, பகுதி 3 ஆகிய இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லறைகள் மற்றும் உறைவிடங்களை சட்டத்துக்குப் புறம்பாகவும், அரசாணைக்குப் புறம்பாகவும் அகற்றி, திட்டப் பணிகளை தமிழக அரசு அவசர கதியில் செய்து வருகிறது. சட்ட விதிகளுக்கும், சட்டமன்ற அறிவிப்புக்கும் எதிராக பணிகளைத் தொடங்கி இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகளை மதிக்க வேண்டிய அதிமுக அரசு, திராவிட இயக்கக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் செயலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயமானதாகும்?

தில்லியில் அமைந்துள்ள, இந்தி வெறி பிடித்த அரசு, தமிழர் பண்பாட்டின் அடித்தளத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு, பல முனைகளிலும் தாக்குதல் தொடுத்து வருகின்ற வேளையில், தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அண்ணா தி.மு.க. அரசு, மத்திய அரசின் கைக்கூலியாகச் செயல்படுவதால்தான் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள மூலக் கொத்தளம் மயானத்தை இடித்து அகற்ற முடிவு செய்துள்ளது.

மூலக்கொத்தளம் சுடுகாட்டை இடித்து, குடியிருப்புகள் கட்டும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட்டு, மக்கள் வாழும் தகுதியான பகுதியில் நல்ல தரமான குடியிருப்புகளை அமைத்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், உணர்ச்சிக் கொந்தளிப்பான அறப்போரைச் சந்திக்க நேரிடும். அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழ்நாடு அரசுதான் பொறுப்பு ஆகும் என்று எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 11-07-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை