Wednesday, July 25, 2018

நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கக் கோரி கேரள முதல்வர் பினராய் விஜயன் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோருடன் வைகோ சந்திப்பு!

இன்று 2018 ஜூலை 25 ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களை கேரள அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தார்.

தமிழ்நாட்டில் - தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் இந்திய அரசு அமைக்க முனைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகம் தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் பெரும் நாசத்தை ஏற்படுத்தும். இந்த ஆய்வகத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவும், அதற்கு அருகில் இடுக்கி அணையும் இருக்கின்றது.

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க 12 இலட்சம் டன் பாறைகளை உடைக்கப் போகிறார்கள். அப்படி இடிக்கும்போது இடுக்கி அணையிலும், பென்னிக் குயிக் முல்லைப் பெரியாறு அணையிலும் விரிசல்கள் ஏற்பட்டு அணைகள் உடையும் பேராபத்து ஏற்படும்.

அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் மத்தியில் ஆளும் மோடி அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறது. அணுக்கழிவுகளைக் கொண்டுவந்து இந்த ஆய்வகத்தில் கொட்டுவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.


எதிர்காலத்தில் உலகத்தின் எப்பகுதியில் உள்ள அணு ஆயுதங்களையும் செயல் இழக்கவோ, வெடிக்கவோ செய்வதற்கான திட்டமும் இதில் அடங்கி இருக்கிறது.

இத்திட்டத்திற்கு தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்பு இருக்கிறது.

கடந்த ஆண்டு உங்களிடம் நியூட்ரினோ திட்ட ஆபாயம் குறித்து விளக்க மடல் தந்தேன். கேரள அரசினுடைய வனத்துறையும், சுற்றுச் சூழல் துறையும் நியூட்ரினோ திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துவதற்காகவே இன்று இந்தக் கடிதத்தைத் தருகிறேன் என்று வைகோ கூறினார்.

அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து தக்க முடிவு எடுப்பேன் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்.

அதற்கு முன்னர் காலை 9.30 மணி அளவில், கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா அவர்களை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, 2018 செப்டம்பர் 15 இல் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்புக் கடிதம் தந்தார். அவசியம் கலந்துகொள்வதாக ரமேஷ் சென்னிதலா ஒப்புதல் அளித்தார்.

நியூட்ரினோ திட்ட அபாயம் குறித்த விளக்கக் கடிதத்தை ரமேஷ் சென்னிதலாவிடம் வைகோ தந்தார்.

தற்போது உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் அவர்களை சந்திக்காவிடினும், அவரது இல்ல அலுவலகத்தில் நியூட்ரினோ குறித்த கடிதத்தைத் தந்ததோடு, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் இல்லத்திலும் அக்கடிதத்தை வைகோ சேர்ப்பித்தார். உம்மன்சாண்டி அவர்கள் வெளிமாநிலத்தில் இருக்கிறார்.

அதன்பின்னர் கேரள மாநில தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முதல்வரிடம் கொடுத்த கடித நகல்களை வைகோ வழங்கினார்.

மேற்கண்ட தகவல்களை மதிமுக தலைமை நிலையம் தாயகம் செய்தியில் இன்று 25-07-2018 வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment