Sunday, July 29, 2018

தாயகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி மாநிலத் துணைச்செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று (29.07.2018) காலை 11 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன் தலைமையில்நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா கருத்துரை வழங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம்:1
ஈரோடு முப்பெரும் விழா மாநாட்டில் பத்தாயிரம் இளைஞர்கள் கலந்துகொள்வது

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை பறைசாற்றப் போவதும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எழுச்சியும், புத்துணர்ச்சியும் தரப்போவதும், கழகப் பொதுச்செயலளார் வைகோ அவர்களின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வில் அவரின் ஈடு இணையற்ற உழைப்பையும், தியாகத்தையும் போற்றுகின்ற விழாவாகவும் அமைய இருக்கிற ஈரோடு முப்பெரும் விழா மாநாட்டில் கழக இளைஞர் அணியின் சார்பில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொள்வது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 2
5 இலட்சம் பேர் கலந்துகொள்ளும் மாவட்ட அளவிலான மராத்தான் போட்டி

மதிமுக இளைஞர் அணியின் சார்பாக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தலா 10,000 மாணவ - மாணவிகள் கலந்துகொள்ளும் வகையில் மதுவிலக்கு மராத்தான் போட்டிகளை நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 3
உலகத்தரப் பல்கலைக் கழகங்களை புதிய அரசு பல்கலைக் கழகங்களாகவே அமைத்திடுக!


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 14 இடங்களில் மத்திய அரசின் நிதியில் உலகத்தரப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என 2008 ஆம் ஆண்டு அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு அர்ஜூன்சிங் அவர்கள் அறிவித்தார்.

மத்திய அரசு அறிவித்ததைப் போல ஒவ்வொரு இடத்திலும் 500 ஏக்கர் பரப்பளவில் தலா 3,000 கோடி மத்திய அரசு நிதியில் புதிய உலத்தரப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டிருந்தால் இந்தியாவின் உயர்கல்வித்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கும்.

ஆனால் அதனைக் கைவிட்டுவிட்டு, நீண்ட கால இழுத்தடிப்புக்குப் பின்பு ஏற்கனவே இயங்கி வருகிற பழைய கல்வி நிறுவனங்களில் அரசு நிறுவனங்கள் 10க்கும், தனியார் நிறுவனங்கள் 10க்கும் தலா 1000 கோடி நிதி அளிக்க தற்போதைய மத்திய அரசு முடிவு செய்து 6 நிறுவனங்களின் பெயரும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதுவரை தொடங்கப்படாத ஜியோ நிறுவனத்தையும் மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இதனால் இதன் அடிப்படை நோக்கம் சிதைந்துபோய்விட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அர்ஜூன்சிங் அவர்கள் அறிவித்ததைப் போல் மத்திய அரசின் முழுநிதியில் புதிய உலகத்தரப் பல்கலைக் கழகம் அமைக்கக வேண்டும் என மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 4
தமிழக அரசே தண்ணீரை வர்த்தகப் பொருளாக்கும் முயற்சியை கைவிடுக!


தண்ணீரை வர்த்தகப் பொருளாக்கும் தமிழக அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஏழை மக்களுக்கு அடிப்படை தேவைக்கான தண்ணீர் இலவசமாக வழங்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.


தீர்மானம்:5
நீர்நிலைகளை மேம்படுத்தவும், புதிய நீர் மேம்பாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்க


தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்த நிலையிலும், வெள்ள நீரைச் சேமிக்கப் போதுமான கட்டமைப்புகள் உருவாக்காத காரணத்தால் நீரை முறையாக பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது.


தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தவும், புதிய நீர் மேம்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் 29-07-2018 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment