Wednesday, July 18, 2018

வைகோ மனுவை ஏற்கக் கூடாது ஸ்டெர்லைட் கடும் எதிர்ப்பு!

இன்று (18.7.2018) தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணையை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடுத்து இருந்தது. அந்த வழக்கு இன்று நீதிபதி ரகுவேந்திர ரத்தோர், நிபுணர் சத்யவான் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதனும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் திவிவேதியும் ஆஜர் ஆனார்கள். வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டவுடன், இந்த வழக்கில் தன்னையும் ஒருமனுதாரராக இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என்று, ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆனால், வைகோ போல் தாக்கல் செய்துள்ள மற்ற இருவரின் மனுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவிலலை.

எனவே, ‘வைகோ மனுவை மட்டும் ஏன் எதிர்க்கின்றீர்கள்?’ என்று நீதிபதி ரகுவேந்திர ரத்தோர் கேட்டார்.

‘முடிந்து போன பழைய விஷயங்களை எல்லாம் வைகோ கிளறுவார்’ என்றார் அரிமா சுந்தரம்.

உடனே வைகோ நீதிபதியைப் பார்த்து,

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 96 முதல் போராடி வருகின்றேன்; 97 ல் நான் தொடுத்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூடுவதற்கான தீர்ப்பை 2010 செப்டெம்பர் 28 இல் வழங்கியது.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மேல் முறையீட்டில், அத்தனை அமர்வுகளிலும் நான் பங்கெடுத்து இருக்கின்றேன்; தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்திலும் நான் மனுதாரராகச் சேர்க்கப்பட்டு, 2013 இல் விசாரணை நடந்தது. 


அந்த விசாரணை, தில்லியில் உள்ள தலைமைத் தீர்ப்பு ஆயத்திற்கு வந்தபோது, அங்கும் நான் வாதங்களை வைத்தேன். எனது மனு தலைமை தீரப்பு ஆயத்தில் தள்ளுபடியானபின் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவுடன், எனது மேல் முறையீட்டு மனுவும் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அண்மையில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கில்தான் தமிழக அரசு, ஆலையை மூடுவது அரசாங்கத்தின் முடிவு என்று அறிவித்துள்ளது. எனவே, இந்த விசாரணையில் பங்கேற்க எனக்குத் தகுதியும் உரிமையும் உள்ளது என்றார்.

இதன்பிறகும் ஸ்டெர்லைட் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்ததால், ‘உங்கள் எதிர்ப்பை எழுத்து மூலம் தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறிய நீதிபதி ஜூலை 30 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். 


நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
நான் நீதிமன்ற வளாகத்தில் ஆலைத்தரப்பு வழக்கறிஞரிடம், ‘என்னை மட்டும் ஏன் எதிர்க்கின்றீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘ஆலை நிர்வாகம் கூறியவாறு நாங்கள் எதிர்க்கின்றோம்’ என்று சொன்னார்.


ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில், எனது ஆணித்தரமான வாதங்களை எதிர்கொள்ள அஞ்சித்தான், ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் எனக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றது என்றார் வைகோ.

மேற்கண்ட தகவலை மதிமுக தலைமை நிலையம் நேற்று 18-07-2018 செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment