Friday, July 6, 2018

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய இலங்கை அரசின் பெண் அமைச்சர் ராஜினாமா - விடுதலைப் புலிகள் மீள் வருகையே ஈழத்தமிழரைப் பாதுகாக்கும் வைகோ அறிக்கை!

இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான விஜயகலா  அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மகேஷ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் 2008 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் பின்வருமாறு பேசினார்:-
“இலங்கைத் தீவில், வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. சான்றாக, அண்மையில் ஒரு ஆறு வயதுக் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளது. கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலைகள், நடைபெறுவதால் தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து வந்தால்தான் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும்” என்று அமைச்சர் பேசியதுதான் உண்மை நிலை ஆகும்.

ஆனால் நாடாளுமன்றத்தில் சிங்கள வெறியர்கள் அமைச்சருக்கு எதிராக கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கூச்சலிட்டனர்.

இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள், அமைச்சர் விஜயகலா பேசியதில் தவறு இல்லை. அதுதான் உண்மை.  இங்கு கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதால்தான் அவ்விதம் பேசினார் என்று விளக்கம் அளித்தார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியினர், தங்கள் கட்சியின் சார்பில் அமைச்சர் பொறுப்பில் இருந்த ஒரே ஒரு தமிழரான விஜயகலாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததால், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதிலிருந்து தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், தரணிவாழ் தமிழர்களும் ஒரு உண்மையை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய நேரடிக் கண்காணிப்பில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் தமிழர் தாயகம் இருந்தபோது, மக்களுக்கு எதிராக கிரிமினல் குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை. களவு, திருட்டு, மது, போதை, விபச்சாரம், கொலைகள், எதுவும் நடைபெறாமல் தமிழர்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ்ந்தனர். கலாச்சாரமும், பண்பாடும் பாதுகாக்கப்பட்டது.

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சிங்கள இராணுவத்தினரும், போலிசாரும் இளைய தலைமுறையைப் பாழாக்க மதுவையும், போதைப் பொருளையும் திணிக்கின்றனர். கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் வாடுகின்றனர்.

அமைச்சர் விஜயகலா பேசியதுதான் அங்குள்ள ஈழத்தமிழர்களின் எண்ணமும், உணர்வும் ஆகும்.
கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்தது போல், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துக்கள் விருட்சமாவதைப் போல இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள்.
சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம். வரலாற்றில் எழுதப்படப் போகும் பாடம் ஆகும் என மதிமுக‌ பொதுச் செயலாளர் வைகோ‌‌ தனது அறிக்கையில் இன்று 7-7-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment