ஈழத் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, சிங்கள இராணுவத்தை அங்கே குவித்துள்ள சிங்களப் பேரினவாத அரசு, தமிழ் இனத்தையே நிரந்தர அடிமைகளாக்கி அழித்தொழிக்கும் அக்கிரமத்தை தொடர்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாகும்.
உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் கூறிய, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மண்ணில் புதைத்தாய்; இந்த மண்ணை எங்கே கொண்டுபோய் புதைப்பாய்? என்பதை நினைவில் கொள்வோம்.
ஈழத்தமிழர்கள், தாய்மார்கள், வயோதிகர்கள், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்த கொடுமையும், ஈழத் தமிழ்ப் பெண்களை பாலியல் நாசமாக்கிக் கொலை செய்ததும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகத்தை சிங்கள அரசு செய்துள்ளது. இந்திய அரசு, கொலைகார சிங்கள அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார்? என்ற மமதையும், திமிரும் தலைக்கு ஏறி உள்ளது.
தமிழர்கள் சிந்திய இரத்தம் ஈழ மண்ணோடு கலந்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் எலும்புகள் அந்த மண்ணோடு சேர்ந்துள்ளன. மடிந்த மாவீரர்களின் மூச்சுக் காற்று அங்குதான் உலவுகிறது. ஈழத்தழர்களுக்கு நீதி கிடைக்காது; நடத்திய இனப் படுகொலைக்கும் எந்தக் கேள்வியும் இருக்காது என்று கொலைபாதக கோத்தபய ராஜபக்சே அரசு மனப்பால் குடிக்கிறது.
அனைத்துலகத்தின் மனசாட்சி செத்துப்போய் விட்டதா? கண்கள் குருடாகி, செவிகள் செவிடாகி விட்டதா? நடந்த அக்கிரமத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காவிடில் கூட்டுக் குற்றவாளியாகவே தொடர்கிறது எனக் குற்றம் சாட்டுவோம்.
சுதந்திரத் தமிழ் ஈழத்திற்குத் தீர்மானம் போட்ட அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது?
யாழ் பல்கலைக் கழகத்தில் மீண்டும் நினைவு முற்றமும் - நினைவுத் தூணும் அமைக்கப்பட வேண்டும். சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழர்கள் தீக்குளித்து மாண்டனரே, அந்த நெருப்பு நம்முடைய நெஞ்சிலே பற்றட்டும்.
இலங்கைத் தீவில் கோத்தபய ராஜபக்சேவின் கொலைகார அரசு, அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டித்து சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
நெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், கழகக் கண்மணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
09.01.2021
No comments:
Post a Comment