Wednesday, January 13, 2021

பொங்கல் வாழ்த்து - வைகோ!

உயிர்களை வாழ வைக்கும் உணவுத் தானியங்களைத் தன் மேனி சிந்திய வியர்வைத் துளிகளால் விளைவித்துத் தரும் வேளாண் பெருங்குடி மக்கள், தாம் தாயாகப் போற்றும் நிலத்துக்கும், கால்நடைச் செல்வங்கட்கும், நன்றி காட்டும் உன்னதப் பெருவிழாதான் தைப்பொங்கல் திருவிழா ஆகும். இதுவே தமிழர்களின் புத்தாண்டின் முதல் நாளும் ஆகும்.

கோவிட்-19 கொரோனா எனும் கொள்ளை நோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்ததோடு, அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையை முடக்கிப் போட்டுவிட்டது. தமிழகத்தைத் தாக்கிய நிவர் புயலால் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்துவிட்டன.
நாசகார வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, விவசாயப் பெருமக்களின் வாழ்வையே நரேந்திர மோடி அரசு சூறையாடிவிட்டது. தமிழ்நாட்டில் வரலாறு காணாத ஊழல் செய்து, அண்ணா தி.மு.க. ஆட்சி தமிழகத்தைப் பாழ்படுத்தி விட்டது. வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றிபெறச் செய்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி அமைய தமிழக மக்கள் தீர்ப்பளிக்க வேண்டுகிறேன்.
மரண இருளில் பரிதவித்துத் துடித்துக் கொண்டு இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், தமிழினப் படுகொலை செய்த சிங்களப் பேயாட்சிக்கு அனைத்துலக மக்கள் மன்றமும், ஐ.நா.வின் மனித உரிமை மன்றமும் நீதி வழங்கிட கூண்டில் நிறுத்தவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் முன்வர வேண்டும்.
இருள் விலகி தமிழகத்திற்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்ப் பெரும் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.01.2021

No comments:

Post a Comment