Sunday, January 3, 2021

ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பணப் பலன்கள் பெற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி முக்கியப் பங்காற்றியுள்ளது. பொதுச்செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி அறிக்கை!

ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பணப் பலன்கள் பெற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி முக்கியப் பங்காற்றியுள்ளது. பொதுச்செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி அறிக்கை!

அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி, 2019 ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்புப் பணம், விடுப்பு ஒப்படைப்புப் பணம் போன்ற பணப் பலன்கள் எதுவும் வழங்காமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை நிர்வாகம் வஞ்சித்து வந்தது.

15.12.2020 அன்று தொழிலாளர் நல ஆணையத்தில், ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு சமரச கூட்டத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில், செயலாளர்கள்  து.வெங்கடேசன், ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பலன்கள் சம்மந்தமாக மிகத் தெளிவாக எடுத்துக் கூறியதன் அடிப்படையில், தொழிலாளர்களின் பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையர் கூறினார்.

நிர்வாக தரப்பில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூபாய் 1,555.57 கோடி கொடுக்க வேண்டி இருப்பதாகவும், அதில் 2019 ஏப்ரல் முதல் 2019 டிசம்பர் வரை உள்ள காலத்திற்கான 1109.61கோடி ரூபாயை ஒரு வாரத்திற்குள் விடுவிப்பதாக கூறினார்கள். அதன்படி 21.12.2020 அன்று அரசாணை எண். 148, 149 போடப்பட்டுள்ளது.

ஓய்வூதிதாரர்களுக்கு நிலுவையிலுள்ள 62 மாத அகவிலைப்படி உயர்வை 2021 ஜனவரி முதல் ஓய்வூதியத்தில் இணைத்து, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க ஆணையர் அவர்கள்  கூறியுள்ளார்.

பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்கும்படி கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பலன்களை நிர்வாகம் வழங்க இருப்பதில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் சு.துரைசாமி
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி
‘தாயகம்’
சென்னை -8
03.01.2021

No comments:

Post a Comment