Tuesday, June 15, 2021

ஐம்பத்தி ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்குக! வைகோ வேண்டுகோள்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் கிராமப் பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா இரண்டாம் அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், அதனைக்  கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது. 

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை, கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழக அரசின் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் திரு.கே.எஸ்.பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார்கள். 

அதில்  சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்கள், சர்க்கரை மற்றும் இதயநோய் உள்ளவர்களை நூறு நாள் வேலைத்திட்டத்தில் பயன்படுத்தக் கூடாது, 55 வயதிற்கு மேற்பட்டவர்களை பணி செய்ய அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தால், கிராமப்புற ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றார்கள். பெரும்பாலும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் நூறு நாள் வேலை வாய்ப்பை நம்பியே உள்ளது. 

ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின்கீழ் பணியாற்ற முடியாது என்ற அறிவிப்பால், கணவன் மற்றும் குழந்தைகளை இழந்து வாழும் பெண்களும், வயதானவர்களும் வேலையில்லாமல் உணவுக்குக் கூட  வழியின்றி தவித்து வருகின்றார்கள். 

கொரோனாவால் ஏற்படும் மரணங்களை விட, உணவுக்கு வழியின்றி பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை நம்பித்தான் பெரும்பாலான கிராம மக்களின் வீட்டில் அடுப்பு எரிகின்றது. 

தற்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. 

ஆகவே, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ், ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடக்கூடாது என்ற விதியை தமிழக அரசு உடனடியாக தளர்த்த வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும்  அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். 

நூறு நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் வயதானவர்கள், முதியவர்கள் படும் துயரத்தை கணக்கில் கொண்டு, ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களையும் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.06.2021

No comments:

Post a Comment