மாணவப் பருவத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டக் களங்களில் எல்லாம் பங்கேற்றுச் சிறை சென்றவர் உதயகுமார். அ.தி.மு.க. அரசு போட்ட பொய்வழக்கில், திருச்சி சிறையில் வாடினார்.
28 ஆண்டுகளாக, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்திற்கு ஒளிதரும் சுடராகத் திகழ்ந்தார்.
அண்ணா பிறந்த நாள் ம.தி.மு.க. மாநில மாநாட்டை, தஞ்சாவூரில் பிரமாண்டமாக வெகு சிறப்பாக நடத்திக் காட்டினார்.
துடிப்பான செயல்வீரர். எப்போதும் சுறுசுறுப்புடன், மாறாத புன்முறுவலோடு இயங்குவார்.
என் மனதில் கவலைகள் சூழும்போது, அவற்றைப் போக்குவதற்கு, ஊக்கம் அளித்துப் பேசுவார். நெருக்கடியான அரசியல் சூழ்நிலைகளில் உடனுக்குடன் என்னைத் தொடர்பு கொண்டு பேசுவார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டங்களில் எல்லாம் அவரது பேச்சு தனி முத்திரை பதித்தது. உயிருக்கும் மேலாகக் கழகத்தை நேசித்து, அரும்பாடுபட்டு உழைத்தார்.
அவர் உடல் நலம் இல்லை என்றவுடன், திருச்சி மருத்துவமனையில் சேர்த்து, உயர்ந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம்.
அந்த ஒளிச்சுடர் அணைந்து விட்டது. நெஞ்சிலே நெருப்பு விழுந்தது போல் துடிக்கின்றேன். இந்தத் துயரில் இருந்து நான் விடுபடுவது எளிது அல்ல.
எனக்கு மட்டும் அல்ல, ம.தி.மு.க. தோழர்கள் அனைவருக்குமே, உதயகுமார் மறைவு, மிகப்பெரிய இழப்பு ஆகும்.என் கண்ணீரைத் துடைக்க எனக்குச் சக்தி இல்லை.
அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தாங்க முடியாத வேதனையோடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.06.2021
No comments:
Post a Comment