Wednesday, June 2, 2021

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கவும். வைகோ கோரிக்கை!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொறியியல் படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளின் காரணமாக, தேர்வுகள் ரத்துச் செய்யப்பட்டன. 

தற்போது, மறுதேர்வுகள்  நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நவம்பர்/டிசம்பரில்  நடைபெற இருந்த பருவத்தேர்வுகளுக்கு  விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதற்கு மே 23 ஆம் தேதி முதல் ஜூன் 3 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இணையத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், முன்மாதிரி பதிவு பக்கங்களில் (Registration preview page) குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி பெறாத (Arrear) பாடங்களில் ஏதேனும் மாற்றம் மற்றும் விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றிற்கு தீர்வுக் காண, அண்ணா பல்கலைக்கழகத்  தேர்வாணையத்தை தொடர்புக்கொள்ளும் வகையில் மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அஞ்சல் வழியில் கடிதம் வாயிலாக தொடர்புக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

முன்மாதிரி பதிவு பக்கத்தில் காட்டப்படும் தேர்ச்சி பெறாத பாடங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அதனைக் குறிப்புகளுக்கான இடத்தில் (Remarks  column) தெரிவிக்கவும், அதனையே கட்டாயமாக அலைபேசி மற்றும் அஞ்சல் வாயிலாக தெரிவிக்கவும் வழிமுறையாக கூறப்பட்டுள்ளது. 

கொரோனா பொது ஊரடங்கு அமலில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அஞ்சலகங்களை அணுகுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தற்போதைய சூழலில் அது பாதுகாப்பான வழிமுறையும் இல்லை. மேலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத்  தெரிவிக்கப்படும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் மற்றும் விளக்கங்களை உடனடியாகப் பெற முடியாததால் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். 

ஆகவே, அண்ணா பல்கலைக்கழக பருவத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மேலும் ஒரு வார  காலம் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசின் உயர்கல்வித் துறையை வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
02.06.2021

No comments:

Post a Comment