Wednesday, June 30, 2021

குழந்தை மித்ராவை காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ MP வேண்டுகோள்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, இன்று (30.06.2021) எழுதியுள்ள கடிதம்: 

அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, 

வணக்கம். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா,Autosomal Recessive Spinal Muscular Atropy (SMA)) என்ற, அரிய வகை மரபு அணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே, நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் கேடு நேரும். 

இதற்கான ஒரே மருந்து zolgensma ஆகும். அதன் விலை ரூ 16 கோடி ரூபாய் ஆகும்.  அதற்கு மேல், இந்திய அரசின் வரிகள் தனி. அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்.

இந்த மருந்தை, குழந்தை இரண்டு வயது நிறைவு செய்வதற்குள் வழங்க வேண்டும். குழந்தையின் தந்தை சதீஷ், சிறுதொழில் செய்து வருகின்றார். இவ்வளவு பெரிய தொகையை, அவரால் திரட்ட இயலாது. 

இரண்டு வாரங்களுக்கு முன்பு, இதே நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற, உத்தரப் பிரதேசம், மீரட்டைச் சேர்ந்த இஷானி என்ற பெண் குழந்தைக்கு, சுவிட்சர்லாந்து நாட்டின் நோவார்டிஸ் மருந்து நிறுவனம், இந்த மருந்தை, லாட்டரி குலுக்கலில் தேர்வு செய்து, எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாகத் தருவதாக அறிவித்து இருக்கின்றது.  அந்தக் குழந்தை, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவம் நடைபெற்று வருகின்றது. 

எனவே, அதே நோவார்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, zolgensma மருந்தை, தமிழ்நாட்டுக் குழந்தை மித்ராவுக்கும் பெற்றுத் தந்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுமாறு, தங்களை அன்புடன் வேண்டுகிறேன். 

இவ்வாறு, வைகோ தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.06.2021

No comments:

Post a Comment