Friday, July 1, 2016

பாலாற்றில் தடுப்பு அணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திராவின் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்! வைகோ அறிக்கை!


கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் சென்னகேசவ மலைத்தொடர் நந்தி துர்கத்தில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடக மாநிலத்தில் 90 கி.மீ தூரமும், ஆந்திராவில் 45 கி.மீ தூரமும் கடந்து தமிழ்நாட்டில் 225 கி.மீ தூரம் பாய்ந்தோடுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் வழியாகச் சென்று வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. 

1892 ஆம் ஆண்டில் சென்னை மாகாணமும், மைசூர் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியில் உள்ள மாநிலம், கீழ்பகுதியில் உள்ள மாநில அரசின் அனுமதி இன்றி புதிய அணை கட்டவோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானங்களையோ, அல்லது நீரைத் திருப்புதற்கான அணையையோ கட்டக் கூடாது.

ஆனால் ஆந்திர மாநில அரசு, 2006 ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 2 டி.எம்.சி. அளவு நீரைத் தேக்கும் வகையில் தடுப்பு அணை கட்டுவதற்குத் திட்டமிட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஆந்திர அரசு 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம், குப்பம் பகுதியை அடுத்த கணேசபுரத்தில் தடுப்பு அணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

2011, ஜூலை 4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட முயற்சித்த ஆந்திர அரசின் திட்டம் நிறுத்தப்பட்டது. எனவே தற்போது ஆந்திர அரசு, தனது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், தமிழக - ஆந்திர எல்லையில் வாணியம்பாடிக்கு அருகே புல்லூர் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையின் உயரத்தை அதிகரிக்கும் வேலையில் இறங்கி உள்ளது. புல்லூரில் 5 அடி உயரம் இருக்கும் தடுப்பு அணையை 10 அடி உயரம் உயர்த்திட சுமார் 45 இலட்சம் ரூபாய் மதிப்பில், தடுப்புச்சுவரை எழுப்பி வருகின்றது.

இதனால் பாலாற்றில் வழிந்தோடும் சிறிதளவு தண்ணீரும் நின்றுபோகும் நிலை ஏற்பட்டு, பாலாறு மொத்தமாக வறண்டு போகும். 

ஆந்திர அரசு ஒப்பந்தத்தை மீறிப் பாலாற்றில் பல தடுப்பு அணைகளைக் கட்டியதால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீர் தடுக்கப்பட்டு விட்டது. அது போதாது; இனி ஒரு சொட்டு நீர் கூடத் தமிழகத்திற்குச் செல்லக் கூடாது என்று ஆந்திர அரசு திட்டமிட்டுச் செயல்படுவது கண்டனத்திற்கு உரியது ஆகும். புல்லூரில் தடுப்பு அணையின் உயரத்தைக் கூட்டினால், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றிச் சாகுபடி பாதிக்கப்படும்; மக்கள் குடி நீருக்கு அலையும் நிலை உருவாகும்.

முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என்று தமிழகம் அண்டை மாநிலங்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகின்றது. 

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை உயரத்தை அதிகரிக்கும் திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment