Saturday, July 16, 2016

காமராஜர் பிறந்த நாளில் தமிழின முதல்வர் வைகோ உரை தொகுப்பு!

கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாளில் அவரது நினைவலைகள் - தமிழின முதல்வர் வைகோ அவர்களின் உரை தொகுப்பு!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு, 15.09.2013 அன்று, விருதுநகரில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில், இது தியாகப் பெருஞ்சுடர் காமராசரின் மண். எட்டு ஆண்டுகள் வெஞ்சிறையில் வாடிய, வீரத்திருமகனின் பூமி.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யாருக்கு ஓட்டு? நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கா? அல்லது மகாத்மா காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீதாராமையாவுக்கா? என்று, திரிபுராவில் நடைபெற்ற தேர்தலில், பசும்பொன் தேவர் திருமகனாரும், தியாகச்சுடர் காமராசரும் இணைந்து, நேதாஜிக்கு வாக்கு அளித்த வரலாறும் என் நினைவுக்கு வருகிறது.

52 தேர்தலில், திருவில்லிபுத்தூர் தொகுதியில், எம்.பி.யாக வெற்றி பெற்றார் காமராசர். குலக்கல்வித் திட்டத்தால், ராஜாஜி வெளியேறியபோது, தமிழ்நாடு முதல் அமைச்சராக முடிசூட்டியது காமராசருக்கு.

63 இல், சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருந்தும், நேருவின் கவலை போக்க, கட்சிக்குத் தொண்டு செய்ய முதல் அமைச்சர் பதவியை, தானாகவே ராஜினாமா செய்த தியாக மாமணி அல்லவா காமராசர்?

1985 இல், மும்பை நகரில், காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழா மலரை, ராஜீவ் காந்தி வெளியிட்டார். அந்த மலரில், பட்டாபி சீதாராமையா படத்தைப் போட்டு, அதற்குக் கீழே, கு. காமராஜ் நாடார் என்று எழுதி இருந்தார்கள். நான் எரிமலையாகச் சீறினேன் நாடாளுமன்றத்தில். சித்தரஞ்சன் தாசை அவமானப் படுத்தினால், நீ வங்காளத்தில் நுழைய முடியுமா? திலகரைக் கொச்சைப்படுத்தி விட்டு, மராட்டியத்திலே கால் வைக்க முடியுமா? எங்கள் தென்னகம் நாட்டுக்குத் தந்த, காமராசரை அவமரியாதை செய்த, இந்த நூற்றாண்டு விழா மலரைத் தீ வைத்துக் கொளுத்த வேண்டும் என்றேன்.

1999. குமரி முனையில் காமராசருக்கு மணி மண்டபம் கட்ட அனுமதி இல்லை. நாஞ்சில் நாடு கோபத்தால் கொந்தளித்தது. டெல்லி அரசியலில் இக்கட்டான நிலைமை. அண்ணா தி.மு.க. தலைமை, சோனியா காந்தியோடு சேர்ந்து போட்ட திட்டத்தால், ஒரேயொரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

அந்த நெருக்கடியான நேரத்திலும், பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து, அதுவரை மத்திய அரசு அனுமதி மறுத்ததைச் சுட்டிக் காட்டி, நிலைமையை எடுத்துச் சொல்லி, அடுத்த 48 மணி நேரத்துக்குள், கன்னியாகுமரியில் காமராசருக்கு மணி மண்டபம் கட்ட அனுமதியைப் பெற்றுத் தந்தவன் அடியேன் என்ற தகுதியோடு இந்த மண்ணில் நிற்கிறேன் என்றார்.

செய்தி: இணையதள நேரலை அம்மாபேட்டையார்

ஓமன் மதிமுக

No comments:

Post a Comment