Thursday, July 14, 2016

கல்வித்துறையை வணிகமயமாக்கி சந்தைப் பொருளாக மாற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்பு அளிக்கக் கூடாது! வைகோ வலியுறுத்தல்!

மத்திய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிட மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஎஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய வரைவுக்குழு ஒன்றை 2015 ஆம் ஆண்டில் அமைத்தது. புதிய கல்விக் கொள்கை பற்றிய வரைவு அறிக்கையை இக்குழு, மே மாத இறுதியில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின் ஒரு பகுதியை இணையத்தில் வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை வடித்தெடுக்க பாஜக அரசு அமைத்தக் குழுவில் ஒருவர் கூட கல்வியாளர் இல்லை. வரைவுக்குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன், மத்திய அமைச்சரவை செயலாளராக இருந்தவர். மற்ற நான்கு உறுப்பினர்களும் அரசுத்துறை செயலாளர்களாக பணியாற்றியவர்களே தவிர எவரும் கல்வியாளர்கள் இல்லை. புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் அளவுக்கு இவர்கள் கல்வித்துறையில் கரைகண்டவர்கள் என்று கூற முடியாது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவரன ஜே.எஸ்.ராஜ்புத் என்பவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதிலிருந்தே, பாஜக அரசின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிட ஒரு புதிய அணுகுமுறையை, ‘கீழிருந்து மேல் திட்டமிடல்என்ற வகையில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் மக்களிடையே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவை முறைப்படி நடத்தபடவோ, மாநில அரசுகளின் கருத்துகளை அறியும் முயற்சியோ மேற்கொள்ளப்படவில்லை. உண்மைநிலை இவ்வாறிருக்க, பொதுமக்களின் கருத்துகள் இணையம் வாயிலாக பெறப்பட்டு புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு அளித்துள்ள புதிய கல்விக் கொள்கை பற்றிய பரிந்துரைகள் கல்வியை முழுக்க, முழுக்க சந்தைப் பொருளாக விற்பனை பண்டமாக மாற்றும் வகையில் இருக்கின்றன. உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO) சேவை வர்த்தக பொது ஒப்பந்தத்தை (GATS) நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கைக்கு வடிவம் தரப்பட்டுள்ளது.

நாட்டு விடுதலைக்குப் பின்னர் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆணையம், கோத்தாரி ஆணையம் போன்றவற்றின் கல்விக் கொள்கை பரிந்துரைகள், யஷ்பால் குழு அறிக்கை, ராஜீவ் காந்தி அரசு நடைமுறைப்படுத்திய கல்விக்கொள்கை, இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் அறிக்கைகள், பரிந்துரைகள் அனைத்தையும் டி.எஎஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளவில்லை.

தற்போதைய கல்விக் கட்டமைப்பு உழைப்புச் சந்தைக்கு தேவையான திறன் கொண்ட மனித வளத்தை தயாரித்து வழங்கும் திறனை இழந்து தோல்வி அடைந்துவிட்டது என்றும், கட்டமைப்பு ரீதியிலான சிந்தனை குறைபாடுகள் இருப்பதாகவும் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் கல்வித்துறை நிறுவனங்களை படிப்படியாக செயலிழக்கச் செய்து, அழிப்பதற்கான முயற்சியாகவே புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம், பயிற்றுவித்தல் ஆகியவற்றை மையப்படுத்துதல், கல்வித்துறையில் மாநிலங்களின் அதிகாரத்தை முற்றிலும் பறித்தல், நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்து பல்கலைக் கழக மானியக்குழுவை கலைத்தல், பல்கலைக் கழக சிண்டிகேட், செனட் அதிகாரத்தை இரத்து செய்தல், கல்லூரிகளை பல்கலைக் கழகங்களிடமிருந்து பிரித்து அவற்றை திறன்சார் சமூகக் கல்லூரிகளாக மாற்றுவது; திறமையானவர்கள் எனப்படும் ஒரு விழுக்காடு பிரிவினர், தேவைப்படுபவர்கள் எனப்படும் ஒரு விழுக்காடு பிரிவினர் மட்டுமே கட்டணமற்ற கல்வி பெறுதல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகளை தாராளமயமாக்குதல், கட்டுப்பாடுகள் அனைத்தையும் முற்றாக நீக்கப்பட்டு, பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் பட்டங்கள் வழங்க அனுமதித்தல், தொழிற்துறை மற்றும் வெளிநாட்டு கல்வித்துறை நிபுணர்களை இந்தியாவில் கற்பித்தல்மூலம் இறக்குமதி செய்தல், இணையத்தின் மூலம் பிரம்மாண்டமான முறையில் பாடங்களை வழங்குதல் (Massive open online courses - MOOC) உள்நாட்டு ஆசிரியர்களின் வேலை உரிமையைப் பறித்து வெளியேற்றுதல், கல்வியை கணினிமயமாக்கி, கல்வித்துறையின் பயனாளிகளாக இருப்பதை மாற்றி, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் பெருமுதலாளித்துவ தனியார் கல்வி நிறுவனங்களின் பயனாளிகளாக மாற்றுதல் போன்ற ஆபத்துகளை உள்ளடக்கியதாக புதிய கல்விக்கொள்கைவடித்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக் கல்வியை 8 ஆம் வகுப்பில் இருந்தே திறன் சார்ந்ததாக மாற்றி பெரும்பான்மை உழைக்கும் வர்க்கக் குழந்தைகளை முறைசாரா தொழிலாளர்களாக மாற்றி, மீண்டும் குலக்கல்வித் திட்டத்திற்கு உயிரூட்டுதல் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய கூறு ஆகும்.

அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள கல்வி அடிப்படை உரிமையை பறிப்பது மட்டுமின்றி, இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்து சமூக நீதியை குழிதோண்டி புதைத்தல், இந்தியவியல் ஆய்வுகள் என்ற பெயரால் செத்துப்போன சமஸ்கிருத மொழித் திணிப்பை சட்டப்பூர்வமாக்குதல் ஆகியவை புதிய கல்விக் கொள்கையின் பேராபத்துகள் ஆகும்.

நமது பாரம்பரிய கல்வியை பன்னாட்டு வர்த்தக விதிகளுக்கு உட்படுத்தி, காட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் பறிக்கப்படுவதுடன், கல்வித்துறையின் இறையாண்மை முற்றாக பலி கொடுக்கப்பட்டுவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே கல்வித்துறையை வணிகமயமாக்கி, பன்னாட்டுச் சந்தைப் பொருளாக மாற்றும் புதிய கல்விக் கொள்கை பற்றிய டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஏற்பு அளிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். மாநில அதிகாரத்தை பறித்து கல்வித்துறையை சீரழிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக

No comments:

Post a Comment