Tuesday, July 19, 2016

திருவள்ளுவருக்கு அவமரியாதை மன்னிக்கக் கூடியது அல்ல என வைகோ அறிக்கை!

மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிச்சுடர் உலகப் பொதுமறை திருக்குறளைத் தந்த செந்நாபோதார் திருவள்ளுவர் சிலை நெகிழி தாளால் சுற்றப்பட்டு, கங்கைக் கரையில் கேட்பாரற்றுக் கிடக்கும் புகைப்படத்தை நாளேடுகளில் பார்த்து தமிழினம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில், கங்கைக் கரை ஹரித்துவார் டாம்கோதி பகுதியில் திருவள்ளுவர் சிலையை நிறுவிட பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். இதற்காக 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தமிழகத்திலிருந்து தயாரித்து கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், திருவள்ளுவர் சிலை அங்கு நிறுவப்படுவதை எதிர்த்து மதவெறியர்கள் கூக்குரல் எழுப்பினர். “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று மனிதருள் பிறப்பால் வேற்றுமை இல்லை என்று பாடிய திருவள்ளுவருக்கு சாதி சாயம் பூசும் அவலமும் நடந்தது. திருவள்ளுவர் சிலையை ஹரித்துவாரில் உள்ள சங்கராச்சாரியார் சவுக் என்ற பகுதியில் நிறுவலாம் என்று உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்தது. ஆனால். அங்கு வள்ளுவர் சிலையை அமைக்கக்கூடாது என்று இந்துத்துவா கூட்டம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

கங்கைக் கரையில் கம்பீரமாக நிற்கப் போகிறது என்று தமிழ் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஹரித்துவார் பூங்காவில் ஒரு மூலையில் கிடக்கிறது. ஈறடியால் உலகளந்த திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை மன்னிக்கக் கூடியது அல்ல. தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு. திருவள்ளுவர் சிலையை உரிய முறையில் கங்கைக் கரையில் நிறுவிட உத்தரகாண்ட் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தமிழக அரசும் தலையிட்டு திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக

No comments:

Post a Comment