Wednesday, January 11, 2017

வைகை கரை “கீழடி” அகழ்வாராய்வு குறித்து மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவை நேரில் சந்தித்து வைகோ கோரிக்கை மனு!

இன்று (2017 ஜனவரி 11 ஆம் தேதி) முற்பகல் 11.30 மணிக்கு மத்திய அரசின் சுற்றுலா கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களை சாஸ்திரி பவனில் உள்ள அவரது அலுவலகத்தில் வைகோ அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன் விவரம்:


“வைகை ஆற்றங்கரையில் மதுரை மாநகருக்கு அருகாமையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கீழடி கிராம எல்லையில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதில், உலகெங்கிலும் உள்ள தொல்லியல் நிபுணர்கள் திகைத்து வியக்க வைக்கும் எண்ணற்ற ஆதாரங்கள் கிடைத்தன.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் வைகை நதிக்கரையில் பழமையான தமிழ் நகரம் அமைந்திருந்தது இன்றைக்கு கண்டறியப்பட்டுள்ளது. சிந்துநதி வெளியில் மொகஞ்சதரோ, ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு ஆதாரங்களைப் போலவே இங்கும் அதிசயக்க வைக்கும் சாட்சியங்கள் கிடைத்தன.

தமிழ்நாட்டில் உள்ள வைகை, தாமிரபரணி, காவிரி நதிகளின் கரைகளில் பழமையான நகரங்களும், கிராமங்களும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் எங்கும் இல்லாத நாகரிகத்தோடு திகழ்ந்தன.

சோழ மண்டலத்தில் கடலுக்குள் ஆழ்ந்திருக்கின்ற காவிரி பூம்பட்டினம் என்னும் பழமையான நகரம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், அதுவரை பழமையான நகரம் என்று கருதப்பட்ட பாபிலோனைவிட முன்னய காலத்தைச் சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்ததை சேனல்-4 தொலைக்காட்சி ஒளிப்படமாக வெளியிட்டது.

கீழடியில் 2015 ஆம் ஆண்டு அகழ்வாய்வு நடத்தப்ட்டபோது மண் பானைகள், இரும்பு கருவிகள், முத்துக்கள், பளிங்குக் கற்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. பல பொருட்களில் சங்க காலத்து தமிழர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்தப் பகுதி 110 ஏக்கர் பரப்பளவில் அகழ்வு நடத்தப்பட்டால் பண்டைய நாகரிக அடையாளங்கள் பலவற்றை கண்டுபிடிக்க இயலும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொல்லியல் பரப்பாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணா என்பவர் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டார்.

இப்பகுதியில் தென்னந்தோப்புக்கள் உள்ளன. இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட பல பொருட்களின் கால வரையரையை கண்டுபிடிப்பதற்காக ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த பகுதியில் கீழடி அருங்காட்சியகம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கித் தருவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போது அகழ்வாய்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால், அகழ்வு செய்யப்பட்ட பகுதிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளன.

கீழடி பகுதியில் பூமிக்கு அடியில் பழந்தமிழர் நாகரிகத்தின் சாட்சியங்கள் இருப்பதை கண்டறிந்தவர் கீழடி உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் ஆவார்.

1978 ஆம் ஆண்டில் இதற்கான ஆதாரங்களை அவர் கண்டறிந்தார். 2014 ஆம் ஆண்டில் அமர்நாத் ராமகிருஷ்ணா, ஒரு குழுவினரோடு வந்து வைகை ஆற்றங்கரையில் 293 இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிக்கை தந்தார்.

2015 ஜனவரியில் கீழடி அகழ்வு தொடங்கியது. தலைமை ஆசிரியரான பாலசுப்பிரமணியம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 2016 செப்டம்பர் 19 ஆம் தேதி கீழடி குறித்து கடிதம் எழுதினார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2016 செப்டம்பர் 23 ஆம் தேதி பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், கீழடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் விளைவாக தமிழக அரசு அகழ்வாய்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்தது. கீழடி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர் வாழ்விடங்களில் செங்கல் கட்டிடங்கள், வட்ட கிணறுகள், நீண்ட சதுர குளங்கள் மற்றும் வாள்கள், கோடாரிகள், மண்வெட்டிகள், கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவை உலோக காலத்தைச் சேர்ந்தவை என அறியப்பட்டது.

இரட்டைச் சுவர்கள் உலைக்களம் இருந்துள்ளது. செங்கல் காளவாய் இருந்துள்ளது. மிகுந்த ஆச்சரியம் என்னவெனில், கழிவு நீர் சாக்கடை போக்கும் வடிகால்கள் அமைந்திருந்தன. உலகத்தின் மிகப் பழமையான நாகரிகம் தமிழ்நாட்டில் திகழ்ந்ததற்கு பூமிக்கடியில் நதிக்கரைகளில் அடுத்த பத்தாண்டு காலத்திற்கு இந்திய தொல்லியல் பரப்பாய்வுத் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே இதில் மிகுந்த அக்கறையோடு இருப்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் சுற்றலா கலாச்சார பண்பாட்டுத்துறை அமைச்சராகிய நீங்கள் தமிழர்களின் கலாச்சார தலைநகரமாகிய மதுரை மாநகரில், இந்திய தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் அதிகாரிகளும், தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்ளும் விதத்தில் ஒரு கூட்டத்தை உங்கள் தலைமையில் நடத்த முன்வர வேண்டும்” என்று வைகோ வேண்டுகோள் விடுத்திருந்த கோரிக்கை மனுவிலேயே அமைச்சர் மகேஷ் சர்மா அவர்கள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தபின், மத்திய-மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு தானே ஏற்பாடு செய்வதாக குறிப்பு எழுதியதோடு, வைகோவுக்கு நன்றியும் தெரிவித்தார். 

30 நிமிடம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்ததாக தாயகம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment