Saturday, January 21, 2017

தடை உடைந்தது; வாடிவாசல் திறந்தது! மெரினா புரட்சி வென்றது; இந்தியாவுக்கே வழி காட்டிய தமிழக மாணவர்களைப் பாராட்டுகிறேன்! வைகோ அறிக்கை!

தடை உடைந்தது; வாடிவாசல் திறந்தது! மெரினா புரட்சி வென்றது; இந்தியாவுக்கே வழி காட்டிய தமிழக மாணவர்களைப் பாராட்டுகிறேன்! வைகோ அறிக்கை!

காங்கிரஸ் தலைமையிலான, திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,  2011 ஜூலை 11 ஆம் நாள், விவசாயிகள் தங்கள் வீடுகளில் பிள்ளைகளைப் போல வளர்த்த காளை மாடுகளைக் கொடிய காட்டு விலங்குகளின் பட்டியலில் சேர்த்து, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் பண்பாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வந்த ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டை, 2014 மே 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை செய்ய வழி வகுத்தது.

அதனை எதிர்த்து ஜூலை 19 ஆம் தேதி, தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை, 2016 நவம்பர் 16 இல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு தைப்பொங்கலின்போதும் நடத்த முடியவில்லை. தமிழர்களின் நெஞ்சில் இது பேரிடியாக விழுந்தது.

கந்தகக் கிடங்கில் பொறி விழுந்தது போல், தமிழக மாணவர்கள் , மாணவிகள் இலட்சோபலட்சம் பேர் அறப்போர்க் களம் அமைத்தனர். வாட்டும் குளிரில், நடுக்கும் பனியில், கொளுத்தும் வெயிலில், கொட்டும் மழையில் மெரினா கடற்கரையில் பத்து இலட்சம் பேர், மதுரை தமுக்கம் மைதானத்தில், கோவை சிதம்பரம் பூங்காவில், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் எனத் தமிழகம் முழுமையும், மாணவ மாணவிகள் வாடிவாசலைத் திறக்காவிட்டால், வீடு வாசலுக்குச் செல்ல மாட்டோம் என முழங்கினர்.

போராட்டக் களத்தில் அரசியல் கட்சிகள் உள்ளே நுழைய அவர்கள் அனுமதிக்கவில்லை. 

ஒழுங்கையும் கண்ணியத்தையும் கடைப்பிடித்தனர். எந்த அசம்பாவிதமும் இல்லாத இப்படியொரு அறப்போராட்டம், இதுவரை இந்தியாவில் நடந்தது இல்லை. 

2016 டிசம்பர் 15 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, இருபது நிமிடங்கள் உரையாடிபோது, 15 நிமிடங்கள் ஜல்லிக்கட்டு பற்றியே விளக்கினேன். பிரதமர் அவர்கள், ‘ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தையும், தமிழர்களின் உணர்வுகளையும் மதிப்பதாகவும், தக்க நடவடிக்கை மேற்கொள்வேன்’ என்றும் உறுதி அளித்தார்.

இந்தத் தைப்பொங்கலிலும் ஜல்லிக்கட்டு நடக்காததால், ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் அனுப்பிய மின் அஞ்சல் கடிதத்தில், ‘தமிழக வரலாறு காணாத மாணவர் போராட்டம் வெடித்து விட்டது; அறவழியில் நடக்கின்றது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்காவிட்டால், 65 மொழிப்புரட்சி போல் வெடிக்கக்கூடும்; அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்த முடியாது’ என்று எழுதியதைப் பிரதமர் பார்வையிட்டதாக எனக்குத் தகவல் வந்தது. 

தமிழ்நாடு முழுக்கக் கொழுந்து விட்டு எரிந்த இந்தப் போராட்டத்தைத்  தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் உரிய முறையில் கையாண்டு, பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.  அதன் அடிப்படையில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு தமிழக ஆளுநரால் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

‘ஜனவரி 23 ஆம் தேதி கூடுகின்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில், இது மசோதாவாக முன்வைக்கப்பட்டுச் சட்டமாக ஆக்கப்படும்’ என்று முதல்வர் அறிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தின் போக்கு எப்படி இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. 

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கொடிய விலங்குகள் பட்டியலில் சேர்த்த காளை மாடுகளை அப்பட்டியலில் இருந்து நீக்கி, ஜல்லிக்கட்டை நடைபெறுவதை நிரந்தரமாகப் பாதுகாக்க மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். 

இந்தியாவையே உலுக்கிய இந்தப் போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே மாணவர்கள் நடத்தியதாகக் கருத முடியாது. 

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர் இனப்படுகொலையில் இந்திய அரசு கூட்டுக்குற்றவாளியாகச்  செயல்பட்டதும், தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை நாளும் தாக்குவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதும், காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக அக்கிரமம் செய்யும் கர்நாடக அரசைக் கட்டுப்படுத்தும் கடமையைச் செய்யாததும், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் தமிழக மக்கள் மீது திணிப்பதும் இவை எல்லாம் தமிழக மக்கள் மனதில், குறிப்பாக மாணவர்கள் மனதில் முள்ளின் மேல் முள்ளாகத் தைத்து, அது மொத்தமாக ஜல்லிக்கட்டுத் தடையில் பெரும் அறப்போராட்டமாக வெடித்தது. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டை ஆதரித்துப் போராடினார்கள்.

இனிமேலாவது, தமிழகத்தின் உரிமைகளை, தமிழ் இனத்தின் தனித்தன்மைகளை நசுக்குகின்ற எந்த முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ள போராட்டம்தான், இந்த மெரினா புரட்சி ஆகும். 

உலகத்தின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்த்த மாணவர் சமுதாயத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்  தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாணவர்களை வாழ்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment