Wednesday, January 18, 2017

ஜல்லிகட்டு தடையை நீக்க உடனடி அவசரச்சட்டம் தேவை! பிரதமருக்கு வைகோ மின்னஞ்சல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று (18.1.2017) காலை 11.00 மணிக்கு, பின்வருமாறு மின் அஞ்சல் கடிதம் அனுப்பி உள்ளார்.

அன்பிற்குரிய பிரதமர் திருமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு,

வணக்கம். தைப்பொங்கல் விடுமுறை நாளைக் கட்டாய விடுமுறை நாள் பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசு ஆணையை ரத்து செய்து, மீண்டும் முன்பு இருந்தது போலவே விடுமுறைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று, ஜனவரி 10 ஆம் தேதியன்று நான் உங்களுக்கு அனுப்பிய மின் அஞ்சல் கடிதம், அன்று குஜராத் மாநிலத்தில் உங்களுக்கு இருந்த பணி நெருக்கடிகளுக்கு இடையிலும், உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டபோது, நீங்கள் உடனடியாக தைப்பொங்கல் நாளை, முன்பு இருந்தது போல் கட்டாய விடுமுறைப் பட்டியலில் சேர்த்து அறிவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு, என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று தமிழ்நாடு எங்கும் கொழுந்து விட்டு எரிகின்ற பிரச்சினையாக உருவெடுத்து விட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் கள நிலைமையைத் தங்கள் உடனடி கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

கடந்த ஒரு மாத காலமாகவே, தமிழ்நாட்டில் விவசாயிகள், குறிப்பாக இளைஞர்கள், அதிலும் குறிப்பாக மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டியின் மீது உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்குத் தக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2016 டிசம்பர் 15 ஆம் தேதியன்று, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தங்களைச் சந்தித்து, ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு குறித்து விரிவாக விளக்கினேன். இந்த விளையாட்டு, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்களின் கலாச்சார நிகழ்வாக நடத்தப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டுக் காளைகளை வீடுகளில் விவசாயிகள், தங்கள் பிள்ளைகளைப் போலப் பராமரிக்கின்றார்கள். ஜல்லிக்கட்டு நடக்கின்றபோது, தோற்றப் பொலிவான வீரமிக்க காளைகள், தங்கள் அருகில் வந்து, திமிலைத் தழுவ நெருங்குகின்றவர்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடும். அதனால்தான், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழ் இலக்கியத்தில் ‘ஏறு தழுவுதல்’ எனக் குறிப்பிட்டனர்.

இந்த நிகழ்வின்போது, காளை மாடுகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவது இல்லை. ஆனால், மாடுகளைத் தழுவ முனைகின்ற இளைஞர்களுக்குச் சில நேரங்களில் காயம் ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் ஆண்கள், பெண்கள் குடும்பத்தோடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்வார்கள். வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டைப் பார்க்க வருவார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது? இதில் உண்மைக் குற்றவாளிகள் யார்?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கிய காங்கிரÞ கட்சியும், அக்கூட்டணி அரசில் இடம் பெற்று இருந்த தி.மு.க.வும்தான் உண்மைக் குற்றவாளிகள். 2011 ஜூலை 11 ஆம் நாள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, வீடுகளில் விவசாயிகள் வளர்க்கின்ற காளை மாடுகளை, காடுகளில் உலவுகின்ற கொடிய விலங்குகளின் பட்டியலில் இணைத்தது. இந்த விலங்குகளை, காட்சிப் பொருளாக நிகழ்ச்சிகளில் அனுமதிக்கக்கூடாது என்பதற்கான பட்டியல் அது.

அப்பொழுது மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இதனை நியாயப்படுத்தி, ‘ஜல்லிக்கட்டு என்பது காட்டுமிராண்டி நிகழ்ச்சி’ என்றார்.

இந்தப் பிரச்சினையில் உண்மைக் குற்றவாளியான தி.மு.க., தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக் களத்தில், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பழியை இன்றைய மத்திய-மாநில அரசுகள் மீது போட்டு, தனக்கு அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றது.

ஸ்பெயின் நாட்டில் காளைச் சண்டை பல ஆண்டுகளாக நடைபெறுகின்றது. அதில், காளை மாடுகளின் கழுத்தில் குத்தீட்டிகளைச் சொருகுகின்றனர்; அதனால் காளை மாடுகள் படுகாயமுற்று இறந்து போகின்றன. ஸ்பெயின் நாட்டில் உள்ள கேடலோனியா மாநில அரசு காளைச் சண்டைக்குத் தடை விதித்தபோது, ஸ்பெயின் நாட்டின் உச்சநீதிமன்றம் அந்தத் தடையை ரத்து செய்தது.

இதுகுறித்துத் தங்களிடம் நேரடியாக விளக்கியபோது, ஜல்லிக்கட்டை நடத்துவதில் நியாயம் இருக்கிறது என்று கருதிய நீங்கள், தடையை நீக்குவதற்கு ஆவன செய்வதாக என்னிடம் கூறினீர்கள்.

இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட பிறகும், தீர்ப்பை வெளியிடாமல் நிறுத்தி வைத்து இருக்கின்றது. அதனால், மத்திய அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்க அவசரச் சட்டம் கொண்டு வருவதற்குத் தயங்குவதாக அறிகின்றேன்.

ஆனால், ஜல்லிக்கட்டுப் பிரச்சினை தமிழ்நாட்டில் தற்போது விசுவரூபம் எடுத்து விட்டது. தைப்பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு தடை நீக்கப்படவில்லை என்பதால், தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும் விரக்திக்கும் ஆளாகி விட்டனர். இதன் விளைவாகப் பல இடங்களில் இளைஞர்கள் தாங்களாகவே காளைகளைக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த முற்பட்டனர். இது இயல்பாகக் கிளர்ந்து எழுந்த உணர்ச்சி. ஆனால் பல இடங்களில் அந்த இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் காவல்துறையின் தடியடிப் பிரயோகத்திற்கும் ஆளாகினர்.

தைப்பொங்கலுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற போராட்டம் நீடிக்காது என்று அரசு அதிகாரிகள் நினைத்தார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரும் போராட்டம் தமிழகம் எங்கும் காட்டுத்தீயெனப் பரவி வருகின்றது. குறிப்பாக இலட்சக்கணக்கான மாணவர்கள் அறப்போர்க்களத்தில் குதித்துவிட்டனர். அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள்அல்ல. அம்மாணவர்கள், பெண்களும் ஆண்களும் வகுப்புகளுக்குச் செல்லாமல், தாங்களாக முன்வந்து, இடைவிடாது தொடர்ந்து அறவழிப்போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

தமிழர்களின் பண்பாட்டின் மீதும் நாகரிகத்தின் மீதும் ஜல்லிக்கட்டுத் தடையின் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டு விட்டதாகவே மாணவர் சமுதாயம் நியாயமான ஆத்திரம் அடைந்து இருக்கின்றது.

இப்போது நடக்கின்ற அமைதிப்போராட்டம், 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போல ஒரு போர்க்களமாக வெடிக்கக்கூடும் என நான் கருதுகின்றேன். நான் மாணவர் இயக்கத்தில் இருந்து அரசியலுக்கு வந்ததால், மாணவர்களின் நாடித்துடிப்பை நன்றாக அறிவேன்.

இத்தகைய சூழ்நிலையில், தாங்கள் சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து, உடனடியாக ஒரு அவசரப் பிரகடனத்தின் மூலம், கொடிய விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இந்தப் பிரச்சினையில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நிலைமை விபரீதமாகி, பின்னர் நடைபெறும் போராட்டம் அரசாங்கத்தால் அடக்க முடியாத அளவுக்கு எல்லை மீறி விடும் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டியது என்னுடைய கடமை என்பதால் இதனை எழுதி இருக்கின்றேன்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்வீர்களானால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் அல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள்.

மிக்க நன்றி,
தங்கள் அன்புள்ள, 
வைகோ


பெறுநர்:
மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள்,
இந்தியப் பிரதமர்,
இந்திய அரசு,
புது தில்லி.


என அந்த மின்னஞ்சலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment