Sunday, January 22, 2017

கொடிய காட்டுவிலங்குகளின் பட்டியலில் இருந்து வீட்டுக் காளை மாடுகளை நீக்கி மத்திய அரசு அவசர சட்ட பிரகடனம் செய்ய வேண்டும்-வைகோ அறிக்கை!

2016 டிசம்பர் 15 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை நான் விளக்கிச் சொல்லிவிட்டு, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2011 ஜூலை 11 இல் கொடிய விலங்குகள் பட்டியலில் வீட்டுக் காளை மாடுகளையும் சேர்த்ததால்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தது என்பதால், அந்தப் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்க தேவையான சட்டபூர்வ நடவடிக்கைளை மேற்கொள்ளுங்கள் என்று விவரித்ததோடு, அதனை எழுத்து மூலமாகவும் எனது கோரிக்கை கடிதத்தில் கூறி இருந்தேன்.

இந்த ஆண்டு தைப் பொங்கலிலும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால், ஜனவரி 18 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களுக்கு நான் அனுப்பிய மின்அஞ்சல் கடிதத்தில் 1965க்குப் பிறகு வரலாற்றை திகைக்க வைக்கும் மாணவர் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் அறவழியில் நடைபெறுகிறது. இலட்சோப இலட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்கிறார்கள், எனவே நீங்கள் உடனடியாக கொடிய விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் ஜனவரி 19ஆம் தேதி அன்று உங்களைச் சந்தித்த போது, தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதாக நீங்கள் கூறி, மத்திய அரசு தற்போது எதுவும் செய்ய இயலாது என்றும், தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் கூறியதை அடுத்து தமிழக அரசு மிருகவதை தடைச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்து அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்திருக்கிறார்.

2017 ஜனவரி 21 ஆம் தேதி மாலையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்காக தமிழக அரசின் அவர சட்டத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்த உடன் நான் தமிழக அரசை பாராட்டி வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்றம் அடுத்து என்ன செய்யும் என்று யூகிக்க இயலாது என்பதையும் குறிப்பிட்டு, கொடிய விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு, இந்தியாவில் மும்பை மாநகரில் தலைமையகம் அமைத்துள்ள பீட்டா அமைப்பும், இந்தியாவின் விலங்குகள் நல வாரியமும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்கவும் கூடும். எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர உத்தரவாதம் இல்லை என்பதால் இலட்சோப இலட்சம் மாணவர்களும், கோடிக்கணக்கான தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போராட்டத்தைத் தொடர்வது நியாயமானது.

2009 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டபோது அன்றைய திமுக அரசு தீக்குளித்த வீரத்தமிழர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தியும், காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டும் அன்றைய போராட்டத்தை நசுக்குவதற்கு பல வழிகளிலும் முயன்றது. ஆனால், இன்றைய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அத்தகைய அராஜக அடக்குமுறையில் ஈடுபடவில்லை.

இன்றைய மாணவர் போராட்டக் களத்திற்கு வெறும் ஜல்லிகட்டு தடை மாத்திரம் காரணம் அல்ல. ஈழத் தமிழர் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாக செயல்பட்ட இந்திய அரசு, நாள்தோறும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை வேட்டையாடுவதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு, காவிரி பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த உச்சநீதிமன்ற ஆணையையே உதாசீனம் செய்த மத்திய அரசு, ஷேல் எரிவாயு, மீத்தேன் எரிவாயு, தேனி மாவட்டத்தை அழிக்கும் மத்திய அரசின் நியூட்ரினோ திட்டம், தென்தமிழ்நாட்டையே சுடுகாடாக்கும் அபாயமான கூடங்குளம் அணுஉலை பூங்கா திட்டம், மொழிப் பிரச்சினையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயலும் அநீதி இவை அனைத்தும் ஒன்றன் மீது ஒன்றாக தமிழர்களின் நெஞ்சில் சம்மட்டி அடிகளாக விழுந்து இன்று அமைதி எரிமலையின் சீற்றம் என மாணவர் கிளர்ச்சி வெடித்திருத்திருக்கிறது. தொடரும் மாணவர்கள் போராட்டம் தானாக கலைந்துவிடும் என்று மத்திய அரசு கருத வேண்டாம்.

அனைத்து உலகத் தமிழர்களும் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து பல்வேறு நாடுகளில் குரல் கொடுத்து வருகிறார்கள். எந்த அரசியல் கட்சியினுடைய ஊடுருவலும் இன்றி மகத்தான அறப்போராட்டத்தை நடத்தி வருகின்ற தமிழக மாணவர் சமுதாயம் இதே போன்ற ஒழுங்கையும், அறவழியையும் கடைபிடித்து இந்தியாவின் பிற மாநில மாணவர்களுக்கும், உலக நாடுகளின் மாணவர்களுக்கும் வழிகாட்டும் போராட்டமாகவே தொடர வேண்டும் என வேண்டுகிறேன். இதே கருத்துக்களை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அவசர கவனத்திற்கும் மின்னஞ்சல் கடிதத்தை அனுப்பி உள்ளேன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment