Friday, January 27, 2017

பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்! வைகோ அறிக்கை!

திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கும், 30 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் பல இலட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாகத் திகழும் பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் பணியினை தொடங்கிவிட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

காவிரி நதிநீர் தீர்ப்பாய தீர்ப்பின் சில பகுதிகளை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி தீர்ப்பாய தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்படவில்லை. எந்த ஒரு நீர்ப்பாசன திட்டங்களை தொடங்குவது என்றாலும், அணைகள் கட்டுவதானாலும் அந்த நீர்ப்பாசனப் பகுதியைக் கொண்டிருக்கும் தமிழக அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்பதோடு, மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியையும் பெறவேண்டும் என்ற சட்ட நியதிகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழகத்தின் திருப்பூர், கரூர் மாவட்டங்களை அடியோடு பாலைவனமாக்கிடும் செயலில் கேரள மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து பாம்பாற்றின் குறுக்கே அiணை கட்டும் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரளா முயற்சித்து வந்ததை அறிந்து மறுமலர்ச்சி தி.மு.க. போர்க்குரல் எழுப்பியது.

இதே காலகட்டத்தில் தமிழக பாசனப் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாய அமைப்புகளும், அனைத்து அரசியல் கட்சிகளும் வெகுண்டு எழுந்து போராடியதன் விளைவாகவும், தமிழக அரசு முயற்சி மேற்கொண்டதன் விளைவாகவும் கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

2010 பிப்ரவரி 15 உடுமலைப்பேட்டையில் பல்லாயிரம் விவசாயிகள், வணிகப் பெருமக்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற இந்தஉண்ணாவிரத அறப்போர் மேடை சரிந்து விழுந்துதான் திருப்பூர் மாவட்டச் செயலாளரும், பாசன விவசாயிகள் சங்கத் தலைவருமான அன்புச் சகோதரர் ஆர்.டி.மாரியப்பன் அவர்களின் கால் எலும்பு முறிந்தது.

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்தும், 2010 மே 28 அன்று நேரடியாக சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த எனது தலைமையில் கேரளா நோக்கி பயணம் மேற்கொண்டபோது கேரள-தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, நானும் தோழர்களும் கைது செய்யப்பட்டோம்.

பாம்பாற்றின் குறுக்கே அணைகட்டும் ஆபத்தை உணர்ந்து, அதைத் தடுத்திடும் வகையில் மக்களைத் தயார் செய்திட 2012 ஜூன் 24 இல் அமராவதி அணையின் முக்கியப் பாசனப் பகுதியெங்கும் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொண்டேன்.

பல அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் கடுமையாகப் போராடின. தொடர்ந்து 2014 இல் கேரளா அடிக்கல் நாட்டியது என்றாலும், பாசனப் பகுதி எங்கும் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாகவும், தமிழக அரசு முயற்சியாலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இரண்டு டி.எம்.சி. நீரை தேக்குவதற்காக அணை கட்டுவதாக கேரள அரசு கூறுகிறது. அமராவதி அணையின் மொத்தக் கொள்ளளவே 4.டி.எம்.சி. தான் என்கிறபோது, அமராவதி அணை வறண்டு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் ஒட்டுமொத்தமாக 60 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை இழக்க நேரிடும். பல இலட்சம் மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும்.

தமிழக அரசின் அனுமதியோ, மத்திய சுற்றுச் சூழல்துறையின் முன் அனுமதியோ இன்றி தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தில் சட்ட விரோதமாக கேரள மாநில அரசு பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்திட முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழகத்திற்கு உரிமைப்பட்ட நீராதாரங்களைத் தடுக்கும் இதுபோன்ற போக்கைக் கண்டித்து தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் கொதித்து எழுந்து போராடும் நிலையை அண்டை மாநிலங்கள் வலிந்து உருவாக்கிடும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிகையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment