Thursday, January 12, 2017

தமிழ் அறிஞர் ச.வே.சு. மறைவுக்கு வைகோ புகழ் மாலை!

தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியம் (88) அவர்கள் இன்று 12-01-2017 காலை இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ஆங்கிலம், மலையாளம் உட்பட மொத்தம் 200 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தொல்காப்பியத்தில் முழுமையாக ஊறித் திளைத்து, அது தொடர்பாகப் பல நூல்கள் எழுதுவதற்கு அடித்தளம் அமைத்தவர். கவிக்கோ அப்துல் ரகுமான், க.ப. அறவாணன் உள்ளிட்ட 44 அறிஞர் பெருமக்கள் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டாலும் கூட, தென்காசி ஆலங்குளம் சாலையில், ‘தமிழூர்’ என்ற ஊரை உருவாக்கி, காலமெல்லாம் தமிழுக்கு அரும்பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். ‘உலகத் தமிழ்க் கல்வி இயக்ககம்’ என்ற அமைப்பை, இறுதி வரை நடத்திக் கொண்டு இருந்தார்.

31 டிசம்பரில் பிறந்த இவர், ஆண்டுதோறும் தாம் பிறந்த நாளை நெருங்கி வரும் சனி, ஞாயிறுகளில் தமிழூரில் கருத்து அரங்குகள் நடத்தி, தமிழ் விருந்தும் அறுசுவை விருந்தும் அனைவருக்கும் பரிமாறி விருந்தோம்பி வந்தார். 


தமிழ் ஆய்வு நூல்களை தம்முடைய கருத்து அரங்குக்கு அனுப்பச் செய்து இலவசமாகப் பதிப்பித்துக் கொடுத்தவர். கடைசியாக பாரதி முதல் தற்காலக் கவிஞர்கள் வரை என்கின்ற தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களைப் பற்றிய ஆய்வு நூலைத் தம் பிறந்த நாள் பரிசாக இலவசமாக வழங்கியவர். இளம் தமிழ் ஆர்வலர்கள் வளர்வதற்கு அளப்பரிய ஊக்கம் அளித்து வந்தார்.


தொடக்கக்கல்வியை விக்கிரமசிங்கபுரம் திரு இருதய நடுநிலைப்பள்ளியில் தொடங்கி, திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பை முடித்தவர். அருணாசலக் கவுண்டர், வித்துவான் சேது ரகுநாதன் போன்ற அறிஞர் பெருமக்களிடம் தமிழ் பயின்றவர். இவர் எழுதுவதை எல்லாம் வேதமாகக் கருதி அவருடைய நூல்கள் முழுமையும் மெய்யப்பர் பதிப்பகத்தார் அச்சிட்டு வந்தார்கள்.

தமிழ்ச் சித்தர்கள் போன்று, தம்முடைய இல்லத்திலேயே ஒரு கல்லறையை உருவாக்கி, தம்மை அடக்கி அதன்மேல் திருவள்ளுவர் சிலையை வைக்க வேண்டும் என உயில் எழுதி வைத்தவர்.

வீரகேரளம்புதூரில் பிறந்த ச.வே.சு. அவர்கள், உலகெங்கும் வாழும் தமிழர் உள்ளம் எல்லாம் நிறைந்தவர். அவரது பிரிவால் துயருறும் தமிழ் உணர்வாளர்களுக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவது இல்லை’ என்ற பாவேந்தர் கூற்றுக்கு ஏற்ப, ச.வே.சு. அவர்கள் தமிழில் சாகா வரம் பெற்றவராகத் திகழ்வார்! என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment