Friday, June 23, 2017

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானங்கள்!

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானங்கள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று 23.06.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு.
திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண். 1
பேரறிஞர் அண்ணா 109 ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டை செப்டம்பர் 15, 2017 அன்று தஞ்சாவூரில் மிகவும் சிறப்பாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண். 2
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தமிழ்நாடு முழுவதும் மறுமலர்ச்சி தி.மு.க., மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டங்களில் பங்கேற்க சுற்றுப் பயணம் விரைவில் தொடங்குவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண். 3
மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 10, 2017 இல் நடைபெற இருந்த நிலையில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜூன் 8 ஆம் தேதி இரவு விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு, 9 ஆம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் சென்று அடைந்தார்.
மலேசிய அரசின் குடிவரவுப் பிரிவு அதிகாரிகள் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்
மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். இந்தியாவின்
கடவுச் சீட்டு வைத்து இருந்த வைகோ அவர்களை, ‘நீங்கள் இலங்கைத் தமிழரா?’ என்றும், ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரா?’ என்றும் மலேசிய அதிகாரிகள் வினவி உள்ளனர். மேலும் பொதுச்செயலாளர் வைகோ அவர்களால் மலேசியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும்
அபாண்டமாகக் குற்றஞ் சாட்டினர்.
சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்தில் முறைப்படி விண்ணப்பித்து விசா பெற்றுக்கொண்டு, கோலாலம்பூர் சென்றடைந்த பொதுச்செயலாளர் வைகோ அவர்களை மலேசியாவுக்குள் அனுமதிக்காமல் 16 மணி நேரம், கைதியைப் போல் காவலில் வைத்து இருந்த மலேசிய அரசின் செயல் கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து இந்திய அரசு மலேசியாவுக்குக் கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். இந்தியக் குடிமகன் ஒருவருக்கு அயல்நாட்டில், பன்னாட்டுச் சட்ட விதிகளை மீறி அனுமதி மறுக்கப்பட்டதும்,
விமான நிலையத்தில் காவலில் வைத்து
இருந்ததைப் போல நடத்தியது குறித்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கதா? என்பதை இந்திய அரசு தெரிவிக்க வேண்டும். 
மலேசியாவில் நடந்த நிகழ்வுகளை விளக்கி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஜூன் 12 ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். இந்திய அரசு உரிய முறையில் மலேசிய அரசிடம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை மலேசியாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்துத் திருப்பி அனுப்பிய மலேசிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து வைகோ அவர்களுக்கு ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் எண். 4
நாடு முழுவதும் விவசாயிகளின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம்

இருக்கின்றது. தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சியால் வேளாண்மைத் தொழில் கடும்
நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கின்றது. பருவ மழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக மாநிலம்
மறுத்து தமிழகத்தை வஞ்சித்ததாலும், தமிழக
விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். கடன் சுமை நெருக்கியதாலும், சாகுபடி செய்த பயிர்கள் கருகியதாலும் தமிழ்நாட்டில் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, வங்கிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்காது என்றும், மாநில அரசுகளே நிதி ஆதாரத்தைத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரண நிதி 39595 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு தேசிய பேரிடர் உதவி நிதியில் இருந்து ரூ.1748.28 கோடி மட்டுமே தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தது.

வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல விவசாயிகளின் வங்கிக் கடனைத் தள்ளுபடி
செய்வதற்கு மத்திய அரசு உதவிட முடியாது என்று கைவிரித்து இருப்பது வேதனை
அளிக்கின்றது.

மாநில அரசுகளின் நிதிச் சுமையை மத்திய அரசும் பகிர்ந்துகொண்டு, தமிழக விவசாயிகள் பெற்றுள்ள வங்கிக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 5
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு ஜூன் 28, 2016 இல் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில் மார்ச் 31, 2016 வரையில் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும், ஐந்து ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அரசு ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 4, 2017 இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கி இருக்கின்றது.
மாண்பமை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பில், “ஐந்து ஏக்கருக்குக் குறையாமல் விவசாய நிலம் வைத்து இருப்போருக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை வழங்கியது என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல் ஆகும். தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி பிறப்பித்த அரசு ஆணையில், அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்கிற வகையில், அந்த அரசு ஆணையை மாற்றி அமைக்க வேண்டும்; இந்த உத்தரவை மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறவேண்டும்.

தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசு ஆணையின்படி 16 லட்சத்து 94 ஆயிரத்து 145 விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கிகளின் கடன் தொகை 5780 கோடி ரூபாய் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை ஏற்று மேலும் 3 இலட்சத்து 926 விவசாயிகளின் 980 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கி பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்யத் தமிழக அரசு, உரிய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 6
நிலத்தடி நீரை உறிஞ்சி, சுற்றுச் சூழலைச் சீர்கேடு அடையச் செய்யும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக செப்டம்பர் 9, 2015 இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ரிட் மனு தாக்கல் செய்தார்.
பல அமர்வுகளில் இந்த வழக்கின் விசாரணை நடந்த பின்னர், பிப்ரவரி 27, 2017 இல் மாண்பமை நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு சீமைக் கருவேல
மரங்களை அகற்றத் தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும், அவற்றை முழுமையாக அகற்றுவதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மே 11, 2017 இல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

தமிழ்நாடு வனத்துறை தலைமைப் பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்
குழு, சீமைக் கருவேல மரம் குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எதிர்கால நலனைக் ருத்தில்கொண்டு, வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கின்ற தமிழ்நாட்டின் நீராதாரத்தைப் பாதுகாக்க சீமைக் கருவேல மரம் அகற்றுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பின்படி சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்குத் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 7
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு ஜூலை முதல் தேதியில் இருந்து கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளது.
தற்போதுள்ள உற்பத்தி வரி, சேவை
வரி, விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வகையான வரி இனங்களை நீக்கி விட்டு, ஜி.எஸ்.டி. எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக இருக்கின்றது. 
தற்போதுள்ள வரி செலுத்தும் முறையில் இருந்து ஜி.எஸ்.டி. வரிக்கு உடனடியாக மாறுவதற்கு உரிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு இதை நடைமுறைப்படுத்தலாம்; அதற்கு உரிய கால அவகாசம் தேவை’ என்று இந்திய வர்த்தக கூட்டமைப்பு ‘அசோசம்’ மற்றும் வணிகர் சங்கங்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆனால், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, திட்டமிட்டவாறு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தே தீரும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நடைமுறையில் இருந்து வரி செலுத்தும் முறை மாற்றப்படும்போது, மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இதுவரையில் வரி இல்லாத பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படுகின்றது. தற்போது பருத்தி, பருத்தி நூல் இழை மற்றும் துணி வகைகளுக்கு வரி கிடையாது. ஒரு சில மாநில அரசுகள் மட்டும் 2 முதல் 4 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரி
விதிக்கின்றன. ஜி.எஸ்.டி.யில் பருத்தி நூல் மற்றும் துணி விற்பனை செய்பவர்களுக்கு 5 விழுக்காடும், பாவு எடுத்து ஒப்பந்த முறையில் வேலை செய்பவர்களுக்கு 18 விழுக்காடும் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு மற்றும் சங்கரன்கோவிலில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளன.

மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி.யில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும்
மூன்று சக்கர வண்டி, அவர்களைக்
கொண்டு செல்ல உதவும் கருவிகளுக்கு 5
விழுக்காடு வரி அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையற்றோர் பயன்படுத்தும் ப்ரெய்ல்
பேப்பர், ப்ரெய்ல் கடிகாரங்கள்
மற்றும் காது கேளாதோர் பயன்படுத்தும் கருவிகளுக்கு 12 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. 
இந்த வரிகளை நீக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் போராடி வருகின்றனர்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. 
ஜூன் 11 ஆம் தேதி டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 133 பொருட்கள் மீதான வரியை மாற்றக் கோரிய நிலையில், 66 பொருட்களுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி. வரி மாற்றி அமைக்கப்பட்டது. ஜூன் 18 ஆம் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் 17 ஆவது கூட்டத்தில், பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அவசர கதியில் ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்த முனையாமல் மாநில அரசுகள், தொழில் வர்த்தக சங்க கூட்டமைப்பு மற்றும் வணிகர் சங்கங்கள் போன்ற அமைப்புகளுடன் கலந்து பேசிச் செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய
-மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண். 8
காவிரி பாசனப் படுகையைப் பாலைவனம் ஆக்கும் வகையில் மத்திய அரசு மீத்தேன்,
ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் எரிவாயு
போன்ற திட்டங்களை செயல்படுத்தியாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. தமிழக
மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு புதுக்கோட்டை, மாவட்டம் -நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்திட கடந்த மார்ச் 26, 2017 இல் மத்திய
அரசு 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. 
தமிழகத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஜெம் லெபரட்டரீஸ் நிறுவனத்திற்கு பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பல நிறுவனங்களுடன் மத்திய அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு எதிர்க்கவில்லை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக மக்களிடம் திட்டம் குறித்து விரிவாக எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று தெரிவித்து இருக்கின்றார். எனவே, தமிழக அரசு, மத்திய அரசின் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களுக்கு உறுதியான எதிர்ப்பை தெரிவிப்பதுடன், எக்காரணம் கொண்டும் இவற்றுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 9
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் மதுக்கடைகளை மார்ச் 31, 2017 தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழ்நாட்டில் இயங்கி வரும் 5672 டாஸ்மாக் மதுக்கடைகளில் 3321 மதுக்கடைகளை மூடிவிட வேண்டிய நிலைமை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
அந்தக் கடைகளை வேறு இடங்களில் திறப்பதற்கு தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் சாமளாபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான இடங்களில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்துப் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைக் காவல்துறையினர் கண்மூடித் தனமாக தாக்கி போராட்டத்தை கைவிடுவதற்கு அச்சுறுத்தும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். 
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகத் தமிழகத்தில் மக்கள் வெகுண்டெழுந்து இருப்பதால், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 10
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில், மே 7, 2017 இல் இந்தியா முழுவதும் பத்து மொழிகளில் ‘நீட்’ தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
(சி.பி.எஸ்.இ.) நடத்தியது. ஆனால், நாடு
முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறிவிட்டு வெவ்வேறு மாநில மொழிகளில்
வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. குஜராத்தி, மொழியில் எளிமையாக இருந்ததாகவும், வங்க மொழி வினாத் தாள் கடினமாக இருந்ததாகவும் மேற்கு வங்க கல்வி அமைச்சர் புகார் கூறினார். தமிழகத்தில் ஆங்கில மொழி வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார்கள் எழுந்தன.

நீட் தேர்வு எழுதும் மையங்களில் சோதனை என்ற பெயரில் மாணவ -மாணவியர்களை சி.பி.எஸ்.இ., தேர்வு நடத்தும் அலுவலர்கள் நடத்திய முறை கடும் கண்டனத்துக்கு ஆளானது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன.
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் படிக்கும் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இதற்குக் காரணம், இளங்கலை மருத்துவ இடங்களில் 15 விழுக்காடு, முதுநிலை மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், நாம் வழங்கும் இடங்களின் அளவுக்கு அகில இந்திய தொகுப்பில் இடங்களைப் பெறுவது இல்லை.
மேலும் நமது உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்திலும் வடநாட்டினர் கணிசமான இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள். மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டின் டி.எம்., எம்.சிஎச். இடங்களை அகில இந்திய அளவில் பகிரங்கப் போட்டிக்கு விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டதன் விளைவு இது. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் இளநிலை மருத்துவக் கல்வி பயின்றவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் நிறுவன ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை உச்சநீதிமன்றமும் ஆதரிக்கின்றது. ஆனால் தமிழக அரசின் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் பறிக்கின்றது.

எனவே, தமிழக அரசின் மருத்துக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு
மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே கிடைக்கும் வகையில்
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைப் போன்று தமிழக அரசும் சட்டம் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாட்டில் மருத்துவ உயர்கல்வி படிப்புக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு வழங்கும் முறையை இருபது ஆண்டுகளாகத் தமிழக அரசு பின்பற்றி வந்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றம் இரத்து செய்து, அகில இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
இதனால் தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களுக்கு மருத்துவச் சேவை
புரியும் இளநிலை மருத்துவர்கள், மருத்துவ
உயர்கல்வி படிப்புக்குச் செல்லும் வாய்ப்பு பறிபோய் உள்ளது.

இத்தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக இருந்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் மருத்துவ உயர் படிப்புகளுக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் முறையை ஏற்றுக் கொள்ளுமா என்ற ஐயப்பாடு உள்ளது. எனவே, தமிழக அரசு, அரசு மருத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் வகையில்
மத்திய அரசு உடனடியாக ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்
என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண். 11 மிருகவதைத் தடுப்புச் சட்டம் 1960-இன்கீழ் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது வாங்குவது போன்றவற்றிற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ‘மிருகவதைத் தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள், 2017’ என்ற பெயரில் அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு இருக்கின்றது. இதன்படி காளைகள், பசு மாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசு மாடு, கன்று மற்றும் ஒட்டகம் போன்ற கால்நடைகள்,

சந்தைகளில் இறைச்சிக்காக வாங்கவோ,
விற்கவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத் தொழில் நாளுக்கு நாள் நலிவு அடைந்து வரும் நிலையில், விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் சந்தையில் விற்பனை செய்ய முற்பட்டால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் கடும் நிபந்தனைகளை விதிக்கிறது.
நடைமுறைக்கு ஒவ்வாத சட்டத் திருத்தங்களின் மூலம் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்க
மத்திய பா.ஜ.க. அரசு கடந்த மூன்று ஆண்டுகளாகவே பல விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் பசு மாட்டு இறைச்சி வைத்து இருந்ததாக இந்துத்துவ மதவெறிக் கூட்டம் தலித் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என்றும், கோவில்களில் பலியிடக் கூடாது என்றும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள சட்ட விதிகள் கடும் கண்டனத்துக்கு உரியதாகும். 
மக்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிப்பதும், உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதும் நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைத்து விடும். சகிப்பு இன்மையால் இந்தியாவின் மத, சமூக நல்லிணக்கம் பேராபத்தில் சிக்கி விடும். எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள “மிருகவதை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017” அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 12
கடந்த 2001-ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பு வகித்த காலத்தில், தமிழ்நாட்டில் எண்ணுhர் காமராஜர் துறைமுகம், இந்தியாவின் முதன்மை மற்றும் தனித்துவம் பெற்ற துணைத் துறைமுகமாக உருவாக்கப்பட்டது. இங்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல் மின்நிலையங்களுங்களுக்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்திட இரு முனையங்கள் அமைக்கப்பட்டன. மேலும் கடல்சார் திரவ முனையம், மோட்டார் வாகன ஏற்றுமதி முனையம், பெட்டக முனையம் மற்றும் பல சரக்கு முனையம் போன்றவை காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு முனையங்கள் அமைப்பதற்கான திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மோட்டார் வாகனத் தொழிலில் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கும், இங்குள்ள மோட்டார் வாகனப் பெரு நிறுவனங்களின்
வளர்ச்சிக்கும் எண்ணுhர் காமராஜர்
துறைமுகம் முக்கியப் பங்கு வகித்து வருகின்றது. அடிப்படைக் கட்டமைப்புகளுடன் காமராஜர்
துறைமுகம் இந்திய கப்பல் போக்குவரத்துத் துறையின்கீழ் வளர்ச்சி பெற்று வருகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் காமராஜர் துறைமுகம் ஈவுத்தொகை, சேவை வரி, கட்டுமானப் பணியாளர் தீர்வை, வருமான வரி போன்றவற்றின் மூலம் மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி இருக்கின்றது. நூறு நிரந்தரப் பணியாளர்களும், 15 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களும் காமராஜர் துறைமுகத்தின் வளர்ச்சிக்காகக் கடினமாக உழைக்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசு காமராஜர் துறைமுகத்தின் மூலதனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது.

தமிழகத்தின் தொழில்துறை மேம்பாட்டிற்கும், மின்சார வாரியத்திற்குத் தேவையான நிலக்கரி கையாளும் வகையிலும் சிறப்பாக இயங்கி வரும் எண்ணுhர் காமராஜர் துறைமுகத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 13
மாநிலங்களுக்கு இடையிலான அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காண ஒரே நிரந்தர நடுவர் மன்றம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவு ஒன்றை, மார்ச்சு 14, 2017 இல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினை (திருத்தம்) 2017” என்ற இந்த சட்ட முன்வடிவு மாநில அரசுகளின் கருத்தறியாமல் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது.தமிழகம் கர்நாடகம் இடையிலான காவிரிப் பிரச்சினையில் தீர்வு காண காவிரி நடுவர் மன்றம் 1990-இல் அமைக்கப்பட்டது. அதுபோன்று கிருஷ்ணா நதி, ரவி, பியாஸ், மகதாயி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளுக்காக தனித்தனி நடுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள மொத்தம் எட்டு தீர்ப்பு ஆயங்களில் மூன்று தீர்ப்பு ஆயங்கள் மட்டும்
தீர்ப்பு அளித்து மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்நிலையில் மத்திய அரசு அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து, ஒரே நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மத்திய அரசின் ஒரே நிரந்தரத் தீர்ப்பு ஆயம் அமைக்கும் முடிவினால் காவிரி
நடுவர் மன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. முதன்முதலில் 1970-இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் வைத்த கோரிக்கையை 20 ஆண்டு காலம் கழித்து 1990-இல்தான், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த கடுமையான உத்தரவையடுத்து மத்திய அரசு ஏற்றது. 
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 17 ஆண்டுகள் கழித்து, 2017 பிப்ரவரி 5-இல்தான் வழங்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளை மத்திய அரசு உருவாக்கி இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, மத்திய பா.ஜ.க. அரசு, மேற்கண்ட அமைப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தமிழ்நாடு காவிரியில் உரிய நீரைப் பெற முடியாமல் காவிரிப் படுகை
மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகின.

இந்நிலையில் மத்திய அரசு, நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பு ஆயம் அமைக்கும் திட்டத்தால் தமிழகம், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமது உரிமையை நிலைநாட்ட முடியாமல் போகும் நிலை ஏற்படும். எனவே, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒரே நிரந்தரத் தீர்ப்புஆயம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண். 14
வட தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமான பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகி அங்கு 90 கி.மீ. பாய்கின்றது.
ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. தூரம் பாய்ந்து வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புல்லூரில் தமிழ்நாட்டிற்குள் நுழைகின்றது. ஆந்திராவில் பாலாறு பாயும் 33 கி.மீ. தூரத்தில் அம்மாநில அரசு ஏற்கனவே 22 தடுப்பு அணைகளைக் கட்டி உள்ளது. ஏற்கனவே, பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரம் கட்டி இருந்த தடுப்பு அணைகளை 12 அடியாக உயர்த்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து
தமிழக எல்லையில் பாலாற்றின் குறுக்கே மூன்று தடுப்பு அணைகள் அமைக்கும் பணியில்
ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது. கங்குந்தி, பொகிலிரேவு மற்றும் கணேசபுரம்-கங்குந்தி இடையிலும் புதிய தடுப்பு அணைகள்
கட்ட ஏற்பாடு செய்துள்ளது. இதனால் பாலாற்றில் நீர்வரத்து அறவே நின்று விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை,
திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில்
விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, குடிநீர்
ஆதாரமும் பறிபோகும் நிலை உருவாகி உள்ளது.
பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநில நீர்பாசனத் துறையின் சார்பில் கொசஸ்தலை ஆற்றின் துணை நதியான குசா ஆற்றின் குறுக்கே
சித்தூர் மாவட்டத்தில் நிலவாயல், கர்வெட்
நகர் மண்டல் ஆகிய இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி வருகின்றது.

பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பு அணைகள் கட்டும் திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் கேரள மாநில அரசு பவானி ஆறு, அமராவதி மற்றும் பாம்பாற்றின் குறுக்கே அணைகள்
கட்ட முயற்சிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று இக்கூட்டம்
வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 15
மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட தமிழ் இயக்கங்கள் சென்னை மெரினா கடற்கரையில் மே 21-ஆம் தேதி அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறை தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்ற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் டைசன் மற்றும் இளமாறன், அருண்குமார் ஆகியோர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்றதற்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை தமிழக அரசு கைது செய்தது அநீதியாகும். அதுமட்டும்அன்றி, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தைத் தமிழக அரசு ஏவி இருப்பது ஜனநாயகத்தின் ஆனி வேரையே அறுக்கும் செயல் ஆகும். அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படைக் கருத்துரிமையைப் பறிக்கும் வகையில் மிசா, பொடா மற்றும் தடா சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழக அரசு கருத்து உரிமையை நசுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தைத்
திரும்பப் பெற வேண்டும்; அவர்கள்
மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று
இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 16
கடந்த 2012-ஆம் ஆண்டில் தமிழக அரசு, தமிழ்நாடு முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி அமர்த்தியது. வாரத்திற்கு மூன்றரை நாட்கள், மாதத்திற்கு 12 நாட்கள் பணிபுரிய மாத ஊதியமாக ரூ. 5,000 நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2014-இல் ஊதியத்தில் ரூ. 2000 உயர்த்தி ரூ. 7,000 ஆக வழங்கப்பட்டது. பகுதி நேர ஆசிரியர்கள் தங்களைப் பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்யக் கோரி போராடி வருகின்றார்கள்.
தமிழக அரசு மனிதாபிமான முறையில் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையைக் கனிவுடன்
ஏற்று, அவர்களின் கோரிக்கையை
நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 17
மரபு அணு மாற்றுப் பயிர்களுக்கு எழுந்துள்ள கடுமையான எதிர்ப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு, மரபு அணு மாற்று கடுகு பயிர் சாகுபடி செய்வதற்கு மே 11, 2017-இல் மரபு அணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் துறைக்குப் பரிந்துரை அனுப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து மரபு அணு மாற்று கடுகு சாகுபடிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மரபு அணு மாற்றுப் பயிர்களால் உண்டாகும் கேடுகள், மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மரபு அணு மாற்றுப் பயிர்களை உருவாக்கும் தனியார் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சந்தையாக இந்தியாவை மாற்றுவது மட்டும் அன்றி, இந்தியாவின் மரபுவகை மண்ணுக்கு ஏற்ற உணவுப் பயிர்கள் உற்பத்தியை அழிக்கும் வகையில் மரபு அணு மாற்றுக் கடுகு சாகுபடிக்கு
அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது. 
2010-ஆம் ஆண்டு மரபு அணு மாற்று கத்திரிக்காய் உற்பத்திக்கு ஆய்வு நடத்த காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதி வழங்கியபோது கடும் எதிர்ப்புத் தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி, தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் உணவுப் பொருட்களில் முதல்முறையாக மரபு அணு மாற்று கடுகு சாகுபடிக்கு அனுமதி அளித்து இருப்பது கண்டனத்திற்கு உரியது. மரபு அணு மாற்று கடுகு உள்ளிட்ட எந்த மரபு அணு உணவுப் பொருட்கள் உற்பத்திக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது என மதிமுக தலைமை நிலையமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment