Wednesday, June 28, 2017

நீதி வென்றது. தி.மு.க. மேல்முறையீடு தள்ளுபடி-வைகோ அறிக்கை!

பேரறிஞர் அண்ணா அவர்களின் ஒப்புதலோடு 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘கோவை மாவட்ட திராவிடப் பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், 1959 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. மாவட்டச் சங்கத்தின் முதல் தேர்தல் 1.5.1960 அன்று பல்லடத்தில் நடைபெற்றது. தலைவராக திரு கோவை செழியன், பொதுச்செயலாளராக திருப்பூர் சு.துரைசாமி, பொருளாளராக திரு காட்டூர் கோபால் ஆகியோரும், மற்ற நிர்வாகிகளும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அன்று முதல் இன்றுவரையிலும், தொடர்ந்து அதன் பொதுச்செயலாளராக திரு சு.துரைசாமி அவர்கள் செயலாற்றிக் கொண்டு இருக்கின்றார். மாவட்டப் பிரிவினைக்குப் பிறகு, சங்கத்தின் பெயர் ‘கோவை பெரியார் மாவட்ட திராவிடப் பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்’ என மாற்றப்பட்டது. 1993 முதல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் அமைப்பான, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியுடன் (MLF) இணைந்து செயல்பட்டு வருகின்றது.

தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்கள், 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி கோவை இராமசாமி கவுண்டர்-பூவாத்தாள் திருமண மண்டபத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, திரு சு.துரைசாமி அவர்களையும், அவருடன் இருந்தவர்களையும் சங்கத்தை விட்டு நீக்கிவிட்டதாக பத்திரிகைகளில் அறிவித்தனர்.

சங்கத்தின் சட்ட விதிகளின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 12.5.1992 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்பட்டதால், அடுத்த தேர்தல் 1994 ஆம் ஆண்டுதான் நடைபெற வேண்டும். தொழிற்சங்கச் சட்டத்துக்கு எதிராக அவர்கள் நடந்ததால், திரு சு.துரைசாமி தலைமையில் இயங்கும் சங்கம்தான் உண்மையானது என நாம் ஓர் வழக்கை, கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திருமதி எஸ்.கோமதி ஜெயம் அவர்கள், 10.1.2000 அன்று, ‘திரு சு.துரைசாமி அவர்கள் தலைமையில் இயங்கும் சங்கம்தான் சட்டப்படியான சங்கம் என்று தீர்ப்பு வழங்கியதோடு, திரு சு.பார்த்தசாரதி அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பு வழங்கினார்.

கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, திரு சு.பார்த்தசாரதி அவர்கள், முதல் கோவை கூடுதல் மாவட்ட நீதிபதி செல்வி கே.பி.கே.வாசுகி அவர்கள் முன்பு ஓர் வழக்கைத் தாக்கல் செய்தார். மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களும், 8.4.2002 ஆம் தேதி மேற்படி வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.

மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, திரு சு.பார்த்தசாரதி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மேற்படி வழக்கு உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஏ.நம்பர் 1992/2003 மற்றும் எஸ்.ஏ.நம்பர் 1993/2003 எண்ணிட்டு நிலுவையில் இருந்தது.

மேற்படி வழக்கில் பார்த்தசாரதி தரப்பினருக்கு வெற்றி கிடைக்காது என்பதைத் திடமாக உணர்ந்ததால், குறுக்கு வழியில் சங்கத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு, மேற்படி சங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்த திரு. டி.தாஸ் திரு. வி.பாண்டி ஆகியோருடன் ரகசியமாகக் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டி, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தினர்.

மேற்படி சங்கத்தின் தேர்தல் 2.12.2008 ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த தேர்தல் 2010 டிசம்பர் மாதம் நடைபெற வேண்டும் என்ற நிலையில், கோவை பெரியார் மாவட்ட தி.ப.தொ.மு.சங்கத்தின் தலைவர் திரு மு.தியாகராசன் அவர்கள், 27.3.2010 அன்று மாலை 5.30 மணிவரை சங்கத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டு, அலுவலர்களாக இருந்த திரு தாஸ், திரு பாண்டி ஆகியோரிடம் பேசிவிட்டு மறுநாள் வருவதாக கூறிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஏற்கனவே வகுத்த சதித்திட்டத்தின்படி, திரு தாஸ் திரு பாண்டி ஆகியோர், சங்கத்தில் இருந்து திரு தியாகராஜன் அவர்கள் வெளியே சென்றுவிட்டார் என்று திரு பார்த்தசாரதி அவர்களுக்குத் தகவல் தெரிவித்து அடியாட்களுடன் வரச்சொல்லி, சங்கக் கட்டடத்துக்கு உள்ளே அமர்ந்து கொண்டனர்.

வீடு திரும்பிக் கொண்டு இருந்த திரு தியாகராஜன் அவர்கள், இந்தச் செய்தியை அறிந்தவுடன் சுமார் 6 மணி அளவில் சங்கக் கட்டடத்துக்கு உள்ளே செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இந்தச் செய்திகளை அறிந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு சு.துரைசாமி அவர்கள், திருப்பூரில் இருந்து புறப்பட்டு, சுமார் 7.15 மணிக்கு சங்கக் கட்டடம் அருகே வந்து சேர்ந்தார். செய்தி அறிந்து ஏற்கனவே அங்கு இருந்த ம.தி.மு.க தோழர்கள் நூறு பேருடன் உள்ளே செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து விட்டனர்.

வழக்கிற்காக சங்கத்தின் பொதுச்செயலாளரான திரு சு.துரைசாமி அவர்களுடைய கையெழுத்தையே பொய்யாகப் போட்டு, தேர்தல் சுற்றறிக்கை அனுப்பியதைப் போலவும், 24.3.2010 அன்று ஒரு தேர்தல் நடந்தது போலவும், திட்டமிட்டுச் சதிசெய்ததுடன், 25.3.2010 அன்று சங்கத்திற்கு எந்தவகையிலும் தொடர்பு இல்லாத திரு இராமசாமி என்பவர் ஓர் புகார் கொடுப்பதைப் போலவும், அதற்கு அத்தாட்சியாக காவல்துறை வழங்கிய இரசீதைப் பயன்படுத்தியும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், சங்கத்தின் சட்டவிதிகளைக் கூடத் தாக்கல் செய்யாமல், நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளையும் அதன்பேரில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் மறைத்தும், அதனைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் மேற்குறிப்பிட்ட எண்ணுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதையும் மறைத்துச் செயல்பட்டனர்.

24.3.2010 ஆம் தேதி தேர்ந்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற திரு தாஸ், திரு பாண்டி திரு பார்த்தசாரதி உட்பட, ஒருவர்கூட சங்க சட்ட விதிகளின்படி தேர்தலில் பங்கெடுப்பதற்குத் தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள். சங்க சட்டவிதி 4 இன்படி, ஒருவர் சங்கத்தில் கௌரவ உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்ட 6 மாதத்திற்குப் பின்னரே தேர்தலில் பங்கு பெறமுடியும்.

திரு தாஸ், திரு பாண்டி இருவரும் சங்கத்தின் ஊதியம் பெற்று வந்த பணியாளர்களேதவிர, நிர்வாகிகள் அல்ல. திரு சு.பார்த்தசாரதி அவர்கள், மேற்படி வழக்குகளில் எதிர்வாதியாக இருந்து நீதிமன்றத்தில் எதிரான தீர்ப்புகளைப் பெற்றவர்.

கோவை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் பொய்யான ஆவணங்களையே தாக்கல் செய்து, அதன் பேரில் சங்கத்தின் முழு அதிகாரம் பெற்ற தி.மு.க.வினருக்கு, ம.தி.மு.க.வினர் இடையூறு செய்யக்கூடாது என்பதைப்போல் ஒருதலைபட்சமான உத்தரவைப் பெற்றனர்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர், நமது சங்கத்துக்கு அனுப்பிய கடிதம் 29.3.2010 அன்று கிடைக்கப் பெற்றபோதுதான் இந்த மோசடியான சதித்திட்ட விவரம் திரு சு.துரைசாமி அவர்களுக்குத் தெரிய வந்தது. காவல்துறையினர் புகார் மீது கோவை கோட்ட ஆட்சியர் அவர்கள், 16.4.2010 ஆம் தேதி இப் பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக நோட்டீஸ் கொடுத்தார்.

தி.மு.க.வினரின் அராஜக அத்துமீறிய நடவடிக்கைகளைக் கண்டித்து, கோவையில் பஞ்சாலைகளில் இயங்கிவரும் மத்திய தொழிற்சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி., ஹெச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.டி.பி., சி.ஐ.டி.யூ., பி.எம்.எஸ். ஆகிய அனைத்துச் சங்கங்களும் உண்மை நிலைமைகளை விளக்கி அறிக்கை கொடுத்தனர்.

இந்த நிலையில், அன்றைய துணை முதல்வரும், இன்றைய தி.மு.க. செயல் தலைவருமான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், ஏப்ரல் 2 ஆம் தேதி கோவைக்கு வந்தார்.

திருப்பூர் துரைசாமி அவர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோவை செசன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் காவல்துறை செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக, அன்றைய கோவை மாநகரக் காவல்துறை ஆணையாளரைச் சந்தித்துக் கேட்டபோது, ‘உங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கின்றது; ஆனாலும் அரசாங்கத்தின் மேலிட உத்தரவு, அதை மீறி நான் என்ன செய்ய முடியும்?’ என்று கைவிரித்து விட்டார். அத்துடன், 27.3.2010 ஆம் தேதி பூட்டப்பட்ட சங்கத்தின் சாவியை, 2.4.2010 ஆம் தேதி இரவு 8 மணிக்குத் தி.மு.க.வினரிடம் காவல்துறையினர் கொடுத்து விட்டனர்.

அத்துடன், கோவை செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குத் தொடுத்தனர்.

அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பில், தி.மு.க.வினர் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது; மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் இணைப்பான கோவை பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளான, திருப்பூர் துரைசாமி மற்றும் நிர்வாகிகளிடம் கட்டடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கோவை செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுக்காலமாகத் தொடர்ந்து நடைபெற்று இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கின்றது. எத்தனைச் சூழ்ச்சிகள், சூதுகள் செய்தாலும், இறுதியில் அறம் வெல்லும்; நீதி வெல்லும் என்ற கோட்பாடு நிலை நிறுத்தப்பட்டு விட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது 26-08-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment