Sunday, June 18, 2017

கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சுக்கு வைகோ கண்டனம்!

கோவை - காந்திபுரத்தில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தாக்குதலில் அலுவலக ஜன்னல் மற்றும் அங்கே நிறுத்தப்பட்டிருந்த காரின் ஒரு பகுதியும் சேதம் அடைந்துள்ளன.

அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அண்மைக் காலமாக தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியது.

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.பி. பவனில் நுழைந்து இந்துத்துவா கும்பல் ஒன்று கடந்த வாரத்தில் தாக்குதல் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டது.

அதுபோல தற்போது தமிழகத்தில் கோவையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக் குழு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் 17-06-2017 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment