Thursday, June 8, 2017

சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் கருத்து உரிமையை ஒடுக்கி விட முடியாது-வைகோ!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அண்மைக்காலமாக இந்திய அரசியலில் தலைதூக்கி வருகின்ற சகிப்பு இன்மையின் வெளிப்பாடாகவே இந்தத் தாக்குதல் அமைந்து இருக்கின்றது. நன்கு திட்டமிட்டுத்தான் யெச்சூரியைத் தாக்கி இருக்கின்றார்கள்.

மராட்டியத்திலும் கர்நாடகத்திலும் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வந்த முற்போக்குச் சிந்தனையாளர்கள் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகிய மூவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்தக் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. உறுதியான நடவடிக்கைகளும் இல்லை. 

இதன் விளைவாகவே இத்தகைய வன்முறையாளர்கள் துணிச்சல் பெறுகின்றார்கள்.

இந்தியத் தலைநகரில் முதன்மையான ஒரு எதிர்க்கட்சியின் அலுவலகத்திற்கு உள்ளேயே புகுந்து தாக்குகின்ற அளவுக்கு முன்னேறி இருக்கின்றார்கள்.
பசுப்பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் வட இந்தியா முழுமையும் வன்முறையாளர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
இத்தகைய வன்முறைப் போக்குகள் இதுவரை இந்திய அரசியல் காணாத ஒன்று. அடக்குமுறையால் அரசியல் கருத்து உரிமையை ஒடுக்கி விட முடியாது.

சீதாராம் யெச்சூரி மீதான தாக்குதலை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவரைத் தாக்கியவர்களது பின்னணி குறித்து ஆராய வேண்டும். புன்புலமாக இருந்து இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ,
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

என இன்றைய 08-06-2017 மதிமுக தலைமை நிலையமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment