Sunday, September 10, 2017

செப்டம்பர் 15 தஞ்சையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு-வைகோ அழைப்பு!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 109ஆவது பிறந்தநாள்விழா மாநாடு செப்டம்பர் 15 அன்று தஞ்சை தரணியில் எப்போதும்போல் சீரும் சிறப்புடனும் நடைபெற இருக்கிறது. ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. நூற்றாண்டு கண்டு இருக்கிற திராவிட இயக்கம் எந்த சமூக நீதிக்காக உருவானதோ, அதன் இலட்சியங்களுக்கு இன்று பெரும் சவால் எழுந்துள்ளது. இந்திய நாட்டிற்கே சமூக நீதிக் கோட்பாட்டிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தது தமிழ்நாடு என்பது வரலாற்று உண்மையாகும்.

ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மற்றும் பழங்குடி பட்டியல் இன மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய இடத்தைப் பெறுவதற்கு வகுப்புரிமை ஆணையை செயல்படுத்தியது நீதிக்கட்சி ஆட்சி ஆகும்.

1928 இல் நீதிக்கட்சி அரசு நடைமுறைப்படுத்திய இடஒதுக்கீட்டுக் கொள்கைதான் படிப்படியாக வளர்ச்சியுற்று இந்தியா முழுவதும் செயல்படுத்துகிற நிலைமை உருவானது. 1950 ஜனவரி 26 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அரசியல் சட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்காக உருவாக்கிய சட்டப் பிரிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்த சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யார் இடஒதுக்கீட்டு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடினார். அரசியல் அமைப்புச் சட்டத்தில் 15 ஆவது பிரிவின் கீழ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றமும் அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு ஆணை செல்லாது என்பதை உறுதி செய்தது.

1950 இல் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக சமூக நீதியைப் பாதுகாக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று போராடினார்கள்.

திராவிட இயக்கம் நடத்திய போராட்டம்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்து சமூக நீதியைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டது. அதே நிலைமை இன்று மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வின் மூலம் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி மறுக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது. நீட் நுழைவுத் தேர்வின் மூலம் மத்திய அரசு நமது மாணவர்களின் கல்வி உரிமையை பறித்தது மட்டுமல்ல, கூட்டாட்சி தத்துவதிற்கு எதிராக மாநில உரிமைகளையும் நசுக்கி வருகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் மாநில சுயாட்சியைப் பாதுகாக்க வலிமையான குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு தஞ்சை மாநாடு அடித்தளம் அமைக்கும்.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக இந்துத்துவா மதவெறிக் கூட்டம் ஏவி விடுகிற காவி பயங்கரவாதத்தை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய கடமை திராவிட இயக்கத்துக்கு இருக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கட்டிக் காப்பாற்றிய திராவிட இயக்க இலட்சியங்களுக்கு மதவெறிக் கூட்டம் விடுக்கின்ற சவாலை சந்திக்க வேண்டிய நிலையில், தஞ்சை மாநாடு நடைபெறுகிறது.

காலங்காலமாக நாம் அனுபவித்து வந்த காவிரி நதிநீர் உரிமையை தட்டிப் பறிப்பதற்கு மோடி அரசு கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்து வருகிறது. காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்கி அழிக்கும் வகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் எரிவாயு திட்டங்களை செயல்படுத்த மோடி அரசு தமிழக அரசின் ஒத்துழைப்போடு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் செப்டம்பர் 15 இல் தஞ்சையில் நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்தநாள் விழா மாநாடு திசை வழியைத் தீர்மானிக்க இருக்கிறது.

தஞ்சைத் தரணியில் நடைபெறும் மாநாட்டிற்கு தமிழர்களே வாருங்கள்! கழகத் தோழர்களே குடும்பம் குடும்பமாக வாருங்கள்! தமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும் அணி அணியாகத் திரண்டு வாருங்கள்! என்று அன்புடன் அழைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி சார்பில் பரப்புரை வாகனப் பயணம் செப்டம்பர் 11 அன்று தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் இருந்தும், பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சியில் இருந்தும், அன்னை மாரிம்மாள் மதுவிலக்கு அறப்போராட்டத்திற்கு அகரம் எழுதிய கலிங்கப்பட்டியில் இருந்தும் தொடங்குகிறது. ஈரோட்டில் கழகப் பொருளாளர் அ.கணேசமூர்த்தி, காஞ்சிபுரத்தில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கலிங்கப்பட்டியில் அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் சே.செவந்தியப்பன் ஆகியோர் தஞ்சை மாநாடு வாகனப் பரப்புரை பயணத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். கழக மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் ஒருங்கிணைப்பாளராக பரப்புரைப் பயணத்தை வழிநடத்துகிறார்.

தஞ்சை மாநாட்டுச் செய்தி தமிழ் மக்களிடையே சென்றடையும் வகையில் நடைபெற இருக்கிற இந்த வாகனப் பரப்புரைப் பயணம் வெற்றிகரமாக நடைபெற கழகத் தோழர்கள் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது 10-09-2017 அறிக்கையில் அனைவரையும் மாநாட்டிற்கு தஞ்சைக்கு அழைக்கிறார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment