Friday, September 29, 2017

நெல்லை பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலுக்கு வைகோ கண்டனம்!

நெல்லை மாவட்டம், இராதாபுரம் வட்டம், பணகுடி அருகே இஸ்ரோ மையம் (ISRO CENTRE) அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது குறித்த தகவலின் அடிப்படையில், புதிய தலைமுறை ஊடகவியலாளர்கள் வள்ளியூர் ராஜாகிருஷ்ணன், நெல்லை மாவட்டப் பொறுப்புச் செய்தியாளர் நாகராஜன் கந்தன் மற்றும் தினகரன் செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப ஊடகங்களிலும், நாளேடுகளிலும் அச்செய்தி வெளிவந்துள்ளது.

இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய பணகுடி காவல்துறை ஆய்வாளர் அதில் கவனம் செலுத்தாமல், செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் (இ பி கோ 469, 505, 507, ஐடிபிசி 67) வழக்குப் பதிவு செய்துள்ளார். மகேந்திரகிரி மலையில் இஸ்ரோ மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அப்பால் பாறையில் வெடிச்சத்தம் கேட்டதாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஊடக, பத்திரிகையாளர்கள் செய்தி தந்துள்ளனர்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனுக்களைப் பெற்று, அதன் மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் பணகுடி காவல் ஆய்வாளர் அவர்கள் மேற்கண்ட 3 செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பத்திரிகைகள், ஊடகங்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை பெற்றிருக்கின்றன. அவர்கள் தெரிவிக்கின்ற செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்கின்ற முயற்சியில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, செய்தி அனுப்பிய பத்திரிக்கை, ஊடகப் பணியாளர்களை குறி வைத்து வழக்குப்பதிவு செய்வது பத்திரிக்கை, ஊடகத்துறையின் குரல் வளையை நெறிக்கும் செயலாகும்.

தென் மாவட்டங்களில் செய்தியாளர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று காலை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலத்திற்கு அறவழியில் முற்றுகையிடச் சென்ற பத்திகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வலுக்கட்டாயகமாக வாகனத்தில் திணித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நெல்லை மாவட்டத்தில் நேர்மையான காவல்பணி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் நெல்லைச் சரக காவல் ஆணையர் ஆகியோர் இப்பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு பத்திரிகையாளர்கள் மீது பணகுடி காவல்நிலையத்தில் போடப்பட்டுள்ள வழக்குகளை இரத்து செய்திடுமாறும்; நெல்லைப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறைச் செய்தியாளர்கள் அமைப்புகளின் நிர்வாகிகளை நேரடியாக அழைத்துப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், தாக்குதல் நடத்த காரணமான காவலர்கள் மற்றும் பொய் வழக்குப் புனைந்த பணகுடி காவல் ஆய்வாளர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 29-09-2017 தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment