Monday, January 15, 2018

ஞாநி மறைவுக்கு வைகோ இரங்கல்!

தலைசிறந்த எழுத்தாளரும் நடுநிலை தவறாத தொலைநோக்கு சமூகப் பார்வையுடன் கருத்துகளைத் தரும் விமர்சகருமான மரியாதைக்குரிய ஞாநி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க இயலாத அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

‘தீம் தரிகிட’ இதழின் ஆசிரியராக இருந்து அரிய கட்டுரைகளை வழங்கிய ஞாநி அவர்கள், இன்றைய கணினி யுகத்தில் நடுநிலை தவறாது தன்னுடைய எண்ணங்களை ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் முக்கிய ஏடுகளான கல்கி, ஆனந்த விகடன், குமுதம் இதழ்களிலும் படைப்புகளாகத் தந்தார்.

‘பலூன்’ உள்ளிட்ட நாடகங்களை எழுதினார்.


‘பழைய பேப்பர்’, ‘மறுபடியும்’ ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளைத் தீட்டினார். 



தினமணி கதிர் ஏட்டின் வாசகர்களின் கேள்விகளுக்கு ‘மனிதன் பதில்கள்’ என்ற தலைப்பில் சுவையான சூடான விடைகளைத் தந்தார். 

இந்தியா டுடே இதழில் ‘கண்டதைச் சொல்லுகிறேன்’ என்ற கட்டுரைகளையும், முதலில் ஆனந்த விகடனிலும் பின்னர் கல்கி இதழிலும் ‘ஓ பக்கங்கள்’ என்ற தலைப்பில் அவர் சமுதாயத்தின் மனச்சாட்சியை உலுக்குகிற விதத்தில், சமூக அரசியல் கல்வி வாழ்வியல் குறித்து எழுதி வந்தது வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது.


எதற்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை ஏடுகளில் எழுதவும் தொலைக்கhட்சி ஊடக விவாதங்களில் கேள்வியும் பதிலுமாகத் தருவதும் ஞாநி அவர்களின் இயல்பான ஆற்றல் ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக அவருடன் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றேன்.பல நேரங்களில் மணிக்கணக்கில் உரையாடி இருக்கிறேன். என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். 


இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இதழியலுக்கும் தொலைக்காட்சி ஊடகத் துறைக்கும் அரிய சேவை ஆற்ற வேண்டிய அன்புச் சகோதரர் ஞாநி சங்கரன் அவர்களின் மறைவு, பத்திரிகைத் துறைக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய இழப்பாகவே எண்ணி வருந்துகிறேன்.


‘கேணி இலக்கிய சந்திப்பு’ என்ற பெயரில் இலக்கிய நண்பர்களை தமது இல்லத்திற்கு வரவழைத்து சந்திக்கச் செய்து கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி வந்தார்.


ஆண்டுதோறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தனது ‘ஞானபானு பதிப்பக’த்தின் சார்பில் தனி அரங்கு அமைத்து நாள்தோறும் மக்களைச் சந்தித்து அரசியல் குறித்து மக்களின் கருத்துக்களைக் கேட்டு வந்தார். இம்முறையும் நான்கு நாட்களாகப் புத்தகக் கண்கhட்சியில் வலம் வந்தார். 

நான்கு ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுக்குச் சிகிச்சை பெற்று வந்தாலும் நேற்று வரையிலும் தமக்குப் பிடித்தமான புத்தகங்களுடன் சென்னை புத்தகக் கண்கhட்சியில் தனது நண்பர்கள் பலரைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறார்.


அவரது திடீர் மறைவினால் அதிர்ச்சியில் கலங்கி கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை மிகவும் நேசிக்கும் பத்திரிகை ஊடகத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் இன்று 15-01-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment