Wednesday, January 24, 2018

மரபு மீறிய காஞ்சிமட இளைய பீடாதிபதி செயலுக்கு வைகோ கண்டனம்!

பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா அவர்களின் தந்தையார் மறைந்த பேராசிரியர் ஹரிகரன் எழுதிய ‘தமிழ் - சமஸ்கிருதம் அகராதி’ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (23.01.2018) நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்த காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப் பாடல் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அமர்ந்திருந்த செயல் தமிழ் மொழியையும், தமிழர்களையும் அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்திய செயலாகும்.

கடவுள் நம்பிக்கையில் மாறுபட்ட கருத்துள்ள தந்தை பெரியார் அவர்கள்கூட தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். நாட்டுப் பாடல் இசைக்கப்பட்டபோது அதுபோன்றே எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். இப்படிப்பட்ட மரபுகளையும், நாகரிகப் பண்புகளையும் முறியடிக்கும் வகையில் காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி நடந்துகொண்ட செயலை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நடந்துவிட்ட தவறுக்கு வருத்தம் தெரிவித்து தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் மதிப்பதாக காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 24-01-2018 அன்று தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment