Saturday, January 27, 2018

தமிழக மீனவர்களை அட்சுறுத்தும் இலங்கை சட்டம், நடுவண் அரசு தடுக்க வைகோ வலியுறுத்தல்!

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், படகுகள் உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும், இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நமது மீனவர்களைக் கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைப்பதும் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கின்றது.

தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசுக்கு ஓராயிரம் முறை கோரிக்கை வைத்து, பல்வேறு அறப்போராட்டங்களை மீனவர் சமூகம் நடத்திவிட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர்கள் நலனில் சிறிதும் அக்கறை  கொள்ளவில்லை. இலங்கை அரசுக்கு ஒருமுறையேனும் கடுமையான எச்சரிக்கை விடுக்கவில்லை. 

அதனால் துணிவுபெற்ற இலங்கை அரசு, தமிழக மீனவர்களுக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கின்றது.

அதன்படி, எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் மீனவர்களைக் கைது செய்து, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, 20 இலட்சம் முதல் 7 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்தல், படகுகளைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று  கூறுகின்றது.

தமிழக மீனவர்களை மீன் பிடித் தொழிலுக்கே வரவிடாமல் அச்சுறுத்தி, அவர்களைத் தொழிலில் இருந்து அகற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, இலங்கை அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

பன்னாட்டு விதிகளுக்கு எதிராக இலங்கை இப்படி ஒரு கருப்புச் சட்டத்தைக் கொண்டு வரப்போகின்றது; இந்திய அரசு அதைத் தடுக்க வேண்டும் என்று, 2016, டிசம்பர் 8 ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டேன். 

பின்னர் 2016 டிசம்பர் 15 ஆம் தேதி டெல்லி சென்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்தேன். 

அப்போது தமிழகத்தின் பண்பாட்டு மரபான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன்; இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்கள், எல்லை தாண்டி வந்து நமது மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்களக் கடற்படையின் அக்கிரமம் குறித்து எடுத்துரைத்தேன்; இலங்கை நாடாளுமன்றத்தில் நமது மீனவர்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப் போகின்றார்கள்; இச்சட்டம் தமிழக மீனவர்களின் நலனுக்கு எதிரானது; எனவே, இந்திய அரசு உடனடியாக தலையிட்டு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை மடல் அளித்தேன். 

இதே கோரிக்கையை வலியுறுத்தி 2016 டிசம்பர் 16 ஆம் தேதி அன்று இராமநாதபுரத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதன் பின்னர் 2017 மே 11 ஆம் தேதி இலங்கையில் நடந்த விசாக நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தபோது, இச்சட்டம் குறித்து இலங்கை அரசுத் தலைவர்களிடம் எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் இந்திய அரசின் அலட்சியப் போக்கால் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிரான கொடிய சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 

அப்போதும் கடந்த 2017 ஜூலை 8ஆம் தேதி, பிரதமர் மோடி அவர்கள் இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி அறிக்கை தந்தேன்.

இந்திய அரசு தமிழக மீனவர்களைக் கைவிட்டதால்,  இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த கருப்புச் சட்டம் நிறைவேறி இருக்கின்றது. 

தமிழகச் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல், கச்சத் தீவைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்ட இந்திய அரசு, அந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை, மீன்பிடி வலைகளை உலர்த்தும் உரிமை இருக்கின்றது என்பதை மறந்துவிட்டது. 

தமிழக மீனவர்களை இந்தியர்களாக மத்திய பா.ஜ.க. அரசு கருதவில்லையா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் பறித்துத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப் பெற அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என 
மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர், வைகோ 26.01.2018 அன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment