கொரோனா பொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை 17 தொழிற்பேட்டைகளில் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்நிறுவனங்களை உடனடியாகச் செயல்படுவதற்கு பல்வேறு நெருக்கடிகள்ஏற்பட்டு இருக்கின்றன.
25 விழுக்காடு பணியாளர்களுடன் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளை இயக்கலாம் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, கொரோனா பரவல் உள்ள சிவப்பு மண்டலத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல தடை விதித்துள்ளது. 55 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்களையும், பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உடனடியாக இயங்குவதற்கு உள்ள தடைகள் குறித்து தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு (25.05.2020) அளித்தப் பேட்டியில், சென்னை திருமுடிவாக்கம் தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் செல்வம், “பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து இங்கு பணியில் இருந்த 1500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுவிட்டனர். தென் மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த தொழிலாளர்க்ள பணிக்கு இன்னும் திரும்ப முடியவில்லை. எனவே தொழிலாளர் பற்றாக்குறையில் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்க முடியவில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.
இதே நிலைமைதான் சென்னையைச் சுற்றி உள்ள அனைத்துத் தொழிற்பேட்டைகளிலும் நிலவுகிறது என்று வில்லிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பாகல் எம்.படேல் கூறி உள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்குப் புறப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் தவிக்கின்றோம் என்று கவலை தெரிவித்துள்ளார்.
பொது முடக்கம் காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பணி ஆணைகள் கிடைக்காததால், உற்பத்தியை தொடக்கவும் முடியவில்லை. வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்குக் கூட பணி ஆணைகள் வரவில்லை. மத்திய அரசு அறிவித்திருக்கும் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள், சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகள் உடனடியாகச் செயல்படுவதற்கு பயன் அளிக்கவில்லை என்று அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஏ.என்.சுஜேஷ் கூறி இருக்கிறார்.
உற்பத்தி இல்லாமல் தொழிற்சாலைகள் முடங்கிக் கிடக்கின்ற நிலையில், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, தொழிற்சாலைகளுக்கு ஏப்ரல், மே மாத ஊதியம் வழங்கவும், தொழில் முனைவோர்களால் முடியவில்லை.
மத்திய நிதி அமைச்சர் அறிவிப்புகளால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உடனடியாக செயல்படுவதற்கு வழி இல்லை என்பதைப் பல்வேறு தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு அளித்த நேர்காணல் மூலம் உறுதி ஆகிறது.
மத்திய நிதித்துறை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன் வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட திட்டம் மூலம் ரூ.3 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. 9.25 விழுக்காடு வட்டியில் உத்தரவாதத்துடன் கடன் அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் நடைமுறையில் வங்கிகளின் ஏராளமான நிபந்தனைகள் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோருக்கு சலிப்பையும், எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நா ட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 28 விழுக்காடாக இருக்கிறது. மேலும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளின் உற்பத்தி, நாட்டின் ஏற்றுமதியில் 40 விழுக்காடு அளவுக்கு பங்கு வகிக்கிறது. வேளாண் தொழிலுக்கு அடுத்ததாக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிப்பதில் இத்தொழில் நிறுவனங்கள்தான் முன்னிலையில் உள்ளன.
எனவே பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களையும், நெருக்கடிகளையும் களைந்து, மீண்டும் உற்பத்தியைத் தொடங்கிட மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 26-05-2020 தெரிவித்துள்ளார்.