Sunday, March 29, 2020

கொரோனா நோயால் விவசாயிகள் பாதிப்பு: அரசு வாக்குறுதி! வைகோ அறிக்கை!

இரண்டு உலகப் போர்களில் ஏற்பட்ட அழிவைவிட பேரழிவு ஏற்பட்டுவிடுமோ? என்று அஞ்சுகின்ற வகையில், கோவிட் 19 கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோய் உலகெங்கும் பரவி வருகிறது.
ஸ்பெயின் நாட்டு இளவரசி இறந்துவிட்டார் என்ற செய்தியை இன்று காலையில் தொலைக்காட்சிகளில் காண நேர்ந்தது.
இங்கிலாந்து பிரதமரும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு, நான் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.
எனவே அரண்மனை வாசிகளிலிருந்து குடிசைவாசிகள் வரை யாராலும் தடுக்க முடியாத நோயாக கொரோனா இருந்துகொண்டு இருக்கிறது.
அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக விவசாயிகள் மிக மிக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதிலும் இந்த ஆண்டு நீர் வசதி கிடைத்தும், தக்க நேரத்தில் பயிரிடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும் சில இடங்களில் விதைக்க முடியாமலும், விளைந்திருக்கின்ற பயிர்களில் இருக்கும் களைகளைப் பறிக்க முடியாமலும், அறுவடை செய்ய முடியாமலும், விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமலும் விவசாயிகள் அவதிப்படுகிறார்கள். ஆக கண் இருந்தும் இல்லாத நிலைமைக்கு அவர்கள் ஆளாகிவிட்டார்கள்.
அதைப் போன்று உரங்கள், பூச்சி மருந்துகள் கிடைப்பது இல்லை. நாங்கள் என்ன செய்வது? என்று விவசாயிகள் தேம்புகிறார்கள்.
இந்த அவலநிலை குறித்து தமிழக அரசின் வேளாண்மைத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களிடம் நான் பேசியபோது, “கவலையே படவேண்டாம். உரங்கள், பூச்சி மருந்துகள் கொடுப்பதற்கு அனைத்து இடங்களுக்கும் நாங்கள் அறிவுறுத்தல் செய்திருக்கிறோம். ஏஜென்சிகள் எடுத்திருக்கின்ற தனியார் வழங்குவதற்கும் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம். ஆக, விவசாயிகள் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் என்னை அணுகலாம்” என்று கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருந்தேன். நேற்றைக்கு தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான கடிதத்தை அனுப்பிவிட்டேன். அக்கடிதம் அவரிடம் சென்று சேர்ந்துவிட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 29-03-2020 தெரிவித்துள்ளார்.

Saturday, March 28, 2020

அழிவு ஏற்படுத்தும் கொரோனா நோயை எதிர்த்து சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் மனிதநேயத்துடன் கடமையாற்ற வேண்டும்! வைகோ வேண்டுகோள்!

கோவிட் 19 கொரோனா அழிவை நேயைத் தடுக்க உலகத்தின் அனைத்து நாடுகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன. இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் மோரிஸ் ஜான்சன் தன்னை கொரோனா நோய் தாக்கிவிட்டது என்று அறிவித்து, தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு சேவை செய்கிறார்.
இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லசுக்கும் கொரோனா தாக்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டு தலைவர்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஐந்து இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் பேர்
இந்நோயால் பதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர்.

வரும் நாட்களில் இந்தியாவில் இந்நோயின் தாக்குதல் கடுமையாகக்கூடும் என்றும் ஒருசில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அனைவரையும், குறிப்பாக அன்றாடங்காய்ச்சிகள், தினக்கூலி செய்வோர், கட்டிடத் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில் அனைவரும் மனிதாபிமானத்தோடு செயல்பட முன்வர வேண்டும்.
கோயம்பேடு போன்ற பெரிய சந்தைகளில் காய்கறிகளைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதனை ஐந்து மடங்கு, ஆறு மடங்கு விலையில் ஒரு சிலர் விற்பனை செய்து, கொள்ளை லாபம் அடிக்கின்ற செய்தி மனதுக்கு மிகவும் வேதனையைத் தருகின்றது. அதனால்தான் பொதுமக்கள் மொத்த வியாபாரம் நடக்கும் சந்தைகளுக்குச் செல்கிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டமாகி விடுகிறது. அதனால்தான் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மனித உயிர்களைக் காப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறைப் பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மாத ஊதியத்தை இருமடங்காக உயர்த்தித் தர அரசு முன்வர வேண்டும். நோய் தடுப்புச் சாதனங்களும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நம்மையும், நமது சக மனிதர்களையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வோடு அனைத்துத் தரப்பினரும் கடமையாற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 28-03-2020 தெரிவித்துள்ளார்.

Friday, March 27, 2020

வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தமிழர்களுக்கு உதவுங்கள் - வைகோ கோரிக்கை!

தமிழ் பெருமக்களே,
கொரோனா என்றாலே நடு நடுங்க வைக்கின்ற இந்தக் கொடிய தொற்று நோய் அனைத்து மட்டத்திலும் வேகமாகப் பரவி வருகின்றது. உலகம் முழுவதும் இதுவரை ஐந்து இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 24 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள்.
அறிவியலில் நாங்கள்தான் முதல் இடம் என்று சொல்லிக்கொண்டு இருந்த அமெரிக்காதான் இப்பொழுது இந்த நோயின் பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கின்றது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏராளமானவர்கள் இறந்து விட்டார்கள்,
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும்? இது இன்னும் வீரியமாகுமா? அல்லது தணியுமா? என்பது ஒரு வார காலத்திற்குப் பிறகுதான் தெரிவிக்க முடியும் என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
தமிழ்நாட்டைவிட்டு 20 நாட்களுக்கு முன்பு வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள்.
ஒரு லாரி ஓட்டுநர், ஐதராபாத்தில் இருந்து கதறுவதைக் காணொளியில் கண்டேன். சாப்பாடு இல்லாமல் நாங்கள் பட்டினி கிடக்கின்றோம். எங்களை அடிக்கிறார்கள். எங்களுக்கு நாதியே இல்லையா? என்று கேட்கிறார்கள்.
வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் உட்பட்டோரைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்பாட்டின் பேரில், தமிழ்நாடு தலைமைச் செயலாளரும், மற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 27-03-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, March 26, 2020

கொரோனோ நிவாரண நிதியாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஒரு கோடி!

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கொரானா நோய்த்தடுப்பு பணிகளுக்காக ஈரோடு மாவட்டத்தில் 55 #லட்சம் ரூபாய்க்கும், திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு 30 லட்சம் ரூபாய்க்கும்,நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 15 லட்சம் ரூபாய்க்கும் நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள மொத்தமாக ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.

பொதுமக்களுக்கு வைகோ வேண்டுகோள்!

நான்கு இலட்சம் மக்களைப் பாதித்து, 20000 உயிர்களைக் கொள்ளை கொண்டு, ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் உறைய வைத்து இருக்கின்ற, கொவிட் 19 கொரோனா நுண்கிருமித் தொற்று, அறிவியலில் சாதனைகள் படைத்த நாடுகளையே, எப்படி இந்த நோயை எதிர்கொள்வது எனத் தடுமாறித் திணற வைத்து விட்டது. 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், ஏப்ரல் - மே மாதங்களில் 13 கோடி முதல் 25 கோடிப் பேரைத் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.


தமிழ்நாட்டில், குறைந்தது 60000 பேர் முதல் ஆகக்கூடுதலாக 1 இலட்சம் பேர் தீவிர நோயாளிகள் ஆகும் ஆபத்து இருக்கின்றது என்பதையும் தெரிவித்து உள்ளனர்.

21 நாள்கள் ஊரடங்குச் சட்டத்தை பிரதமர் அறிவித்து இருக்கின்றார். அதற்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கைகூப்பிக் கேட்டுள்ளார். ஆனால், இந்த அபாயகரமான எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, பொதுமக்கள் தெருக்களில் உலவுவதும், கூட்டம் கூடுவதும் பேராபத்தில் முடியும். அத்தியாவசியக் கடமைகளைச் செய்யும் மருத்துவத் துறைப் பணியாளர்கள், காய்கறிகள், பால், உணவுப் பொருட்களை வினியோகம் செய்வதற்கும் இடையூறு ஏற்பட்டு விடுகின்றது. பிற உயிர்களைக் காப்பாற்ற மட்டும் அல்ல, தங்கள் உயிர்களையும், மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர்களின் உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ளக் கருதியாவது, ஒவ்வொருவரும் கண்டிப்பாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். .

இந்தப் பிரச்சினையில், காவல்துறை இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டே தீரும்.

அத்தியாவசியப் பால், உணவு, காய்கறிகள் போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்களைக் கொண்டு செல்வோர், மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்றோருக்குத் தொல்லை ஏற்படாமல் காவல்துறை பார்த்துக் கொள்ள வேண்டும்.

அன்றாட வேலை செய்து, அதில் கிடைக்கின்ற வருமானத்தில் வாழ்க்கை நடத்துவோருக்கு, அரசாங்கம் உதவிகளை அறிவித்து இருந்தாலும், ரேசன் பொருட்கள், நிவாரணத் தொகை, இன்னும் ஓரிரு நாள்களுக்குள் போய்ச் சேரவில்லை என்றால், அவர்கள் பட்டினி கிடப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

ரேசன் அட்டைகள் இல்லாதவர்களுக்கும் மனிதாபிமானத்தோடு, அரசாங்கம் நிவாரணப் பொருட்களையும், உதவித் தொகையையும் வழங்க வேண்டும்.

சிறு குறு தொழில் முனைவோர், கடனுக்கு ஊர்திகள் வாங்கியோருக்கும், மாதத் தவணை செலுத்தும் காலக்கெடுவை மூன்று மாதங்கள் நிறுத்தி வைக்க வேண்டும்.

அரசாங்கம் தனது கடமையைச் செய்வதற்குத் தடங்கலாக, பொதுமக்கள் தெருக்களுக்கு வரக்கூடாது.

அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உதவியாக, நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந், ஒரு கோடி ரூபாய் வழங்குகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 26-03-2020 தெர்வித்துள்ளார்.

Wednesday, March 25, 2020

கொரோனா தொற்று அறியும் கருவி குஜராத் நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு இந்திய அரசு வழிவகுக்கின்றதா? வைகோ கேள்வி!

இந்திய அரசின் நல்வாழ்வுத்துறை, கடந்த சனிக்கிழமை அன்று, கொவிட் 19 நோய்த் தொற்றைக் கண்டு அறிவதற்காக, ஆய்வகங்கள் பயன்படுத்த வேண்டிய கருவிகளின் தரம் குறித்த வரையறை ஒன்றை அறிவித்து இருக்கின்றது. அதன்படி, அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் (United States Food and Drug Association -USFDA) அல்லது ஐரோப்பிய தரச் சான்று பெற்ற கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், தற்போது நம் நாட்டில் உள்ள ஆய்வகங்களில் பெரும்பாலும் சீனா அல்லது தென்கொரியாவில் வாங்கப்பட்ட கருவிகளை பயன்பாட்டில் உள்ளன.. இன்று நிலவுகின்ற நெருக்கடியான சூழலில், அரசு வலியுறுத்துவது போல, அமெரிக்கா அல்லது ஐரோப்பியத் தரச்சான்றிதழை எப்படிப் பெற முடியும்?

நடுவண் அரசின் அறிவிப்பின்படி, புணேயில் இயங்கி வருகின்ற இந்திய அரசின் நுண்ம நச்சு ஆய்வு நிறுவனம் (National Institute of Virolgy-NIV) கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.  

உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், இத்தகைய சோதனைக் கருவிகள் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது. எனவே, யாரும் ஏற்றுமதி செய்ய மாட்டார்கள். நமது தேவைகளுக்கு ஏற்ற கருவிகள் இப்போது கிடைக்காது. 

இந்தநிலையில், இந்திய ஆய்வகங்கள், நடுவண் அரசின் தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெறுவதில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டால், அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடும். 

சீனா, தென்கொரியாவில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாது. 

அமெரிக்கா, ஐரோப்பியச் சான்றிதழ்தான் தேவை என்றால், இதற்கு முன்பு, இந்திய நிறுவனங்கள் இயங்க, இந்திய அரசு உரிமம் கொடுத்தது, கேலிக்கூத்து ஆகிவிடும். 

அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறைகளின்படி, தற்போது இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வருகின்ற கோசாரா டயக்னாஸ்டிக்ஸ் என்ற  ஒரேயொரு நிறுவனம்தான், மேற்கண்ட சான்றிதழைப் பெற்று இருக்கின்றது. 

அந்த நிறுவனத்தை மட்டுமே ஏகபோக உரிமையாளராக ஆக்குவதற்கு இந்திய அரசு முயற்சிக்கின்றதா? 

எனவே, இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டை முடக்குகின்ற, புதிய விதிமுறைகளை, நடுவண் அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 23-03-2020 தெரிவித்துள்ளார்.

உயிர்காக்கும் கருவிகளை ஆயத்தம் செய்ய வேண்டும்; அடித்தட்டு மக்களுக்கு அரசு உதவித்தொகை தர வேண்டும்!

கொவிட் 19 கொரோனா நுண்கிருமித் தொற்று, காற்றை விட வேகமாகப் பரவி, ஏழு கண்டங்களிலும் உள்ள 175 நாடுகளுக்கும் மேல் ஊடுருவி விட்டது. கிட்டத்தட்ட 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு விட்டார்கள். 17500 க்கும் பேருக்கும்  மேல் உயிர் இழந்து விட்டனர். உலகமே அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றது. அச்சம் எல்லோரையும் பீடித்து இருக்கின்றது. 

இரண்டு நாள்களில். அமெரிக்காவில் மட்டும் 400 பேருக்கு மேல் இறந்து விட்டனர். கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவை விட, இத்தாலியில் கூடுதலான மக்கள் இறந்து விட்டனர். அருகில் உள்ள ஸ்பெயின், ~பிரான்ஸ் நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டன. இதுவே இந்தியாவுக்கு உள்ளே ஊடுருவினால், நிலைமை என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எனவே, அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதைக் குறை சொல்வதற்கு இல்லை. 

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் 

என்று, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் உரைத்து இருக்கின்றார். 

முன்கூட்டியே ஆபத்தைத் தடுக்காவிடில், நெருப்பில் சிக்கிய வைக்கோல் போலக் கருகும் ஆபத்து நேரிடும் என்று எச்சரித்து உள்ளார். 

அதுபோல, இந்தியாவிலும் மிகப்பெரிய பாதிப்புக்கான வாய்ப்பு இருக்கிறது டாக்டர்கள் மருத்துவர்கள்  எச்சரிக்கை விடுத்து இருக்கின்றார். 

மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவம். தூய்மைப் பணியாளர்கள், ஊடகங்களில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் களப்பணி ஆற்றி வருகின்றார்கள். விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். 

இத்தகைய சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட ஏழை, எளிய மக்கள். வீடு இல்லாத நடைபாதை வாசிகள் நிலைதான் மிகவும் பரிதாபகரமானது. அன்றாடங் காய்ச்சிகள் நிலையும் அதுபோலத்தான் இருக்கின்றது. விவசாயக் கூலித் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டு விட்டது. 

எனவே, அத்தகைய ஏழை எளிய குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும், உடனடியாக ருபாய் 3000 அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். ரேசன் கார்டுகள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தாமல், அடையாள அட்டைகளைச் சரிபார்த்து வழங்கலாம்,  

மத்திய மாநில அரசுகள், மனிதாபிமானத்தோடு செயல்பட்டு வருகின்ற  நிலையில், அத்தகைய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். கூட்டம் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.  

~பிரான்ஸ் நாட்டில் வீட்டைவிட்டு வெளியே வந்தால், 10,000 ~பிராங்க் அபராதம் என அரசு எச்சரித்து இருக்கின்றது. மருத்துவத்தில், அறிவியலில் சாதனைகள் புரிந்த நாடுகளிலேயே உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தக் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார்கள். அது போன்ற கட்டுப்பாடுகளை, பொதுமக்கள்  தமக்குத் தாமே விதித்துக் கொள்ள வேண்டும். 

களப்பணி ஆற்றி வருகின்ற தொண்டு நிறுவனங்களுக்கு மறுமலர்ச்சி திமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

கிரிமி நாசினிகள், கை உறைகள், சானிட்டைசர்கள் போன்ற தொற்றுத் தடுப்புக் கருவிகளை. போர்க்கால அடிப்படையில் தயாரிக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டும். மருத்துவமனைகளில் உயிர்காக்கும் கருவிகள் தட்டுப்பாடு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

நாடு முழுமையும் உள்ள சிறைக்கூடங்களில், சிறுசிறு குற்றங்களுக்காக, விசாரணை இன்றி அடைக்கப்பட்டு உள்ளவர்களை, உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கொவிட் 19 கொரோனா தொற்று நோய் என்ற பேரழிவில் இருந்து மனித இனத்தைக் காப்பதற்கு, மக்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவதே முதன்மையான கடமை ஆகும்.

இதுவரை எதிர்பாராத ஒரு இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள, அரசு பெரும்பணத்தைச் செலவிட்டு வருகின்றது. என்னுடைய ஒரு மாத ஊதியத்தை, முதல் அமைச்சர் நிதிக்கு வழங்குகின்றேன் என‌ மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 24-03-2020 தெரிவித்துள்ளார்.

Sunday, March 22, 2020

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்விகள், அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 2503

கீழ்காணும் கேள்விகளுக்கு, நீர்வளத்துறை (Jal shakti) அமைச்சசர் விளக்கம் தருவாரா?

(அ) நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துவதற்காக வரையப்பட்ட, அடல் நிலத்தடி நீர்வளத்  (Atal Bhujal Yojana-ABY) திட்டத்தின் முதன்மைக் கூறுகள் என்ன?

(ஆ) இந்தத் திட்டத்தின்கீழ் மாநிலங்களில் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு?

(இ) இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் விவசாயம், பாசனம் மற்றும் வீடுகளின் தேவைகளுக்காக, கிராமங்கள் அளவிலான, பெண்களும் இடம் பெறுகின்ற குழுக்கள் அமைத்தல், நீர் செயல் திட்டம் Water Action Plan) வகுக்கப்படுமா?

(ஈ) புதிய தொழில் நுட்பங்கள், மாவட்டங்களில் ஆகக்கூடுதலான அளவில் நீர்ப் பயன்பாட்டு முறைகளை வகுப்பதற்கான திட்டங்கள் குறித்த விவரங்களைத் தருக.

நீர்வளத்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா அளித்துள்ள விளக்கம்

(அ) அடல் நிலத்தடி நீர்வளத் திட்டத்தில், சமூகப் பங்களிப்புடன் கூடிய, நிலையான நீர் மேலாண்மை நடுவண் திட்டங்களுக்கு, ரூ 6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 க்கு 50 என்ற அளவில், இந்திய அரசும், உலக வங்கியும் பங்கு அளிக்கின்றன.

இந்தத் திட்டத்தில் இரண்டு முதன்மைக் கூறுகள் உள்ளன.

1.இந்தத் திட்டத்தில் பங்கேற்கின்ற மாநிலங்களில் உள்ள நீர்வள நிறுவனங்களை வலிமைப்படுத்துதல், கொள் அளவுத் திறன் உயர்த்துதல், நிலத்தடி நீர்வளத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள்.

2. நிலத்தடி நீர்வளத்தைச் சிறந்த முறையில் கையாள்வதற்காக, நீண்ட காலத் திட்டங்களை வகுக்கின்ற அரசுகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல்.

கேள்வி ஆ வுக்கான விளக்கம்:

வருகின்ற 2020 ஏப்ரல் முதல் நாளில் இருந்துதான் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகின்றது. எனவே, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகை குறித்த கேள்வி எழவில்லை.

(இ) அடல் நிலத்தடி நீர்வளத் திட்டத்தின் கீழ், சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கின்ற, பெண்களும் இடம் பெறுகின்ற நீர் பயனாளிகள் சங்கம் (Water User Association) அமைத்து, நிலத்தடி நீர்வளத்தைக் கண்காணிக்கவும், நீர் இருப்பு குறித்த தரவுகளைப் பரப்பவும், நீர்ப் பங்கீட்டுத் திட்டங்களை வகுக்கவும், கிராம ஊராட்சிகள் அளவிலான நீர் பயன்பாட்டுத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தவும், நீர் பாதுகாப்புத் திட்டங்களை வரையவும், பன்னாட்டு மின்தொழில்நுட்ப ஆணையம் (Inetrnational Electrotechnical Commission-IEC) வகுத்துள்ள நிலத்தடி நீர்வள மேலாண்மைச் செயல்பாடுகளின் அடிப்படையில் இயங்கவும் வழி வகுக்கின்றது.

(ஈ) அடல் திட்டத்தின் கீழ், நிலத்தடி நீர்வளம் குறித்த தகவல்களைக் கணினிமயம் ஆக்குதல், நிலத்தடி நீர்வளம் குறித்த தரவுகளைத் தொடர்ந்து பராமரித்தல், களப்பணிகள் மற்றும் நிதி முன்னேற்றம் குறித்த தகவல்களுடன் விரிவான தகவல் மேலாண்மை அமைப்பு (Management Information System-MIS) உருவாக்குதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 21.03.2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டப் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிர் இழப்பு; உரிய நிவாரணம் வழங்கிடுக! வைகோ கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று (மார்ச் 20) நடைபெற்ற கொடிய  வெடி விபத்தில் சிக்கி திருவேங்கடம் வட்டத்தைச்  சேர்ந்த இராணி, ஜெயபாரதி, பத்ரகாளி, தாமரைச்செல்வி, தங்கம்மாள், வேலுத்தாய், குளக்கட்டாகுறிச்சியைச் சேர்ந்த காளியம்மாள் உள்ளிட்ட ஏழு பெண்களும், சங்குபட்டியைச் சேர்ந்த முருகையா என்பவரும், இன்று காலையில் முக்கூட்டுமலையைச் சேர்ந்த ஒருவர் என ஒன்பதுபேர் பரிதாபமாக உயிர் இழந்த செய்தி அறிந்து பெரும் துயர் அடைந்தேன்.

படுகாயம் அடைந்த ஒன்பது பேரில் இருவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மூவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ள தகவல் மனதை வாட்டுகிறது.

அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த இவர்களின் இறப்பால் ஏற்பட்டுள்ள  துயரம், அக்குடும்பங்களால் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் துயரம் ஆகும். தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர் இழந்த குடும்பங்களுக்குத் தேவையான இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பதோடு, சிகிச்சையில் இருப்போருக்குத் தக்க நிவாரண உதவி வழங்குவதோடு தரமான மருத்துவச் சிகிச்சை அளித்திட தனிக்கவனம் கொண்டு செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், இந்த பட்டாசு ஆலையில் உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மீறி கூடுதல் இலாப நோக்கத்தில், ஆடம்பர ரகப்  பட்டாசுகளை  உற்பத்தி செய்ததன் விளைவே இக்கோர விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதி மக்களிடம் நிலவும் கருத்தில் உள்ள உண்மைத் தன்மை குறித்து பாரபட்சமற்ற முறையில் நீதி விசாரணை நடத்திட உத்தரவிடுமாறும்  அதில், நிர்வாகத் தவறுகள் நடந்து இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 21-03-2020 தெரிவித்துள்ளார்.

Friday, March 20, 2020

கொரோனா: மருத்துவக் கருவிகளுக்கான முன்னேற்பாடுகள் செய்க! வைகோ கோரிக்கை!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களுக்கு இன்று அளித்து உள்ள கோரிக்கை விண்ணப்பம்:-
“கொவிட் 19 நோய்த்தொற்று பரவியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில், உயிர் காக்கும் காற்றோட்டக் கருவி (வென்டிலேட்டர்) மற்றும் அடிப்படைத் தேவையான மருத்துவக் கருவிகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
அதேபோலப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, பிரித்தானிய முடியரசு ஒன்றியம் ஆகிய நாடுகள், மருத்துவக் கருவிகளை ஆக்குகின்ற, மருத்துவ வசதிகளை வழங்குகின்ற நிறுவனங்களுடன் பேசி, தங்களுக்கு வேண்டிய கருவிகளை உடனே பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
எனவே, நமது நாட்டில், இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள, மக்களுக்கு உரிய மருத்துவம் கிடைத்திட, போதுமான கருவிகள் இருக்கின்றனவா என்பது குறித்து, அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும்.
குறுகிய காலத்திற்குள், மருத்துவக் கருவிகளை, எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான வாய்ப்புகளையும் உற்று நோக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.”
வைகோ அவர்கள் இவ்வாறு அந்த விண்ணப்பத்தில் தெரிவித்து இருக்கிறார் என மதிமுக தலைமை நிலையம் 20-03-2020 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிகாற்றுகளின் பயன்பாடு, குழாய்கள் வழியாக நகர்ப்புறங்களில் வீடுகளுக்கு வழங்குதல் குறித்து வைகோ கேள்விகள், அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 2838
கீழ்காணும் கேள்விகளுக்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிகாற்றுத் துறை அமைச்சர் விளக்கம் அளிப்பாரா?
(அ) இயற்கை எரிகாற்றுகளின் பயன்பாட்டை உயர்த்துவதற்கு, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்.
(இ) இந்தியாவில் எத்தனை நகரங்களில், குழாய்கள் வழியாக வீடுகளுக்குத் தரப்படுகின்றது?
அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்
அ, ஆ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்!
இயற்கைச் சூழலைக் கெடுக்காத படிம எரிகாற்றுகள், நாட்டின் எரிபொருள் தேவையில் பெரும்பங்கு வகிக்கின்றன. அவற்றின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது. உள்நாட்டில் கூடுதலாகப் பெறுவது, எரிகாற்றுத் தொகுப்புகளை உருவாக்குவது, அயல்நாடுகளில் இருந்து நீர்ம எரிகாற்றுகளை இறக்கும் தளங்களில் இருந்தே, குழாய்கள் வழியாக வீடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகளை ஆக்குவது போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளுக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் இரண்டு இலட்சம் கோடி செலவிடப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
இ, ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
2006 ஆம் ஆண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிகாற்று ஒழுங்குமுறைச்சட்டத்தின்படி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிகாற்று ஒழுங்குமுறை ஆணையம் (Petroleum, Natural Gas Regulatory Borad-NPNGFB), நகரங்களில் பொது வழங்கலுக்கான கட்டமைப்புகளை ஆக்குவதற்கும் (City Gas Distribution -CGS), நாடு முழுமையும் எரிகாற்றுக் குழாய்களை ஒருங்கிணைப்பதற்குமான பணிகளைச் செய்து வருகின்றது. இயற்கை எரிகாற்று கிடைக்கின்ற புதிய இடங்களைக் கண்டு அறிந்து, அவற்றை வெளிக்கொணர்வதற்கான பணிகளை மேற்கொள்கின்றது.
இதுவரையிலும், 27 மாநிலங்கள், மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகளில் 230 நிலப்பகுதிகளில் உள்ள 400 மாவட்டங்களுக்கான, நகரங்களுக்கான வழங்கலுக்காக, 10 முறை ஏலச்சுற்றுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன என்ற தகவலை மதிமுக தலமை நிலையம் தாயகம் இன்று 20-03-2020 தெரிவித்துள்ளது.

Thursday, March 19, 2020

கூட்டாகச் செயல்படுவோம்; கொரோனாவை வெற்றி கொள்வோம் வைகோ அறிக்கை!

உலக வரலாறு காணாத அளவில், கொவிட் 19-கொரோனா கிருமித்தொற்று வேகமாகப் பரவுகின்ற செய்திகள், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அனைத்து நாடுகளின் அரசுகளும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என விழிப்பு உணர்வுப் பரப்பு உரைகள், அறிவிப்புகள், தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன.
கடந்த நூற்றாண்டுகளில் பரவிய கொள்ளை நோய்களைப் போல் அல்லாமல், கொரோனா தொற்று நுண்மி, உடனடியாகக் கண்டு அறியப்பட்டு இருப்பதும், உலகம் முழுமையும் உள்ள மருத்துவர்கள், ஆய்வு அறிஞர்கள், அதற்கான எதிர்ப்பு மருந்தை ஆக்குகின்ற பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டு இருப்பதும், ஆறுதல் அளிக்கின்றது.
இந்த நிலையில், அரசுகள் மேற்கொள்கின்ற பாதுகாப்பு முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமானால், கட்டாயம் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. நோய் அறிகுறிகள் தென்பட்டால், உரிய சோதனைகளை மேற்கொள்ளுங்கள். எந்தக் காரணம் கொண்டும், பரபரப்போ, பதற்றமோ அடைய வேண்டாம்; வதந்திகளைப் பரப்பி, மற்றவர்களை அச்சுறுத்த வேண்டாம். கூட்டமாகக் கூடி நிற்பதையும், பயணங்களையும் தவிர்ப்பீர்.
இன்று ஏற்பட்டு இருக்கின்ற சூழ்நிலை, மனிதகுலத்திற்கு இயற்கை விடுத்து இருக்கின்ற எச்சரிக்கை என்றே கருத வேண்டும். எனவே, சுற்றுப்புறச் சூழல் தூய்மையைப் பேணுங்கள்; உடல் நலப் பாதுகாப்பு குறித்து அரசு விடுக்கின்ற எச்சரிக்கைகளைப் புறந் தள்ளாதீர்கள். கைகளை நன்றாகக் கழுவுங்கள்; காய்ச்சல், இருமல் வந்தால், மருத்துவரை அணுகுங்கள்.
அடுத்து சில நாள்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டம் ஆகும். அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுவோம்; இடையூறுகளை வெற்றிகரமாகக் கடந்து செல்வோம் என மதிமுஅ பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 19-03-2020 தெரிவித்துள்ளார்.

பட்டிசேரியில் கேரளம் புதிய அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துங்கள் மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!

19.3.2020 மாநிலங்கள் அவையின் சுழிய நேரத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை :-
தமிழக அரசிடமோ, காவிரி தீர்ப்பு ஆயத்திடமோ இசைவு எதுவும் பெறாமல், கேரள அரசு, பட்டிசேரி என்ற இடத்தில் ஒரு தடுப்பு அணை கட்டிக் கொண்டு இருக்கின்றது. முன்பு அதன் உயரம் 15 அடிகள்தான். இப்போது, 30 மீட்டர் உயரத்திற்குக் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இதனால், பாம்பாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டின் அமராவதி அணைக்கு வர வேண்டிய நீர் தடைப்பட்டுப் போகும்.
அமராவதி அணையின் பாசனப் பரப்பு 48,500 ஏக்கர் மற்றும் புதிய பாசனப் பரப்பு 21,500 ஏக்கர் ஆகும். பழைய ஆயக்கட்டுதாரர்களுக்கு 12.66 டிஎம்சி மற்றும் புதிய ஆயக்கட்டுதாரர்களுக்கு 4.97 டிஎம்சி நீர் தேவை. மேலும், கரூர் பகுதியின் குடிநீர் தேவைக்காக 0.514 டிஎம்சி மற்றும் தொழில் பணிகளுக்காக 0.492 டிஎம்சி நீர் தேவை. எனவே, ஒட்டுமொத்தமாக, ஓர் ஆண்டுக்கு, 18.64 டிஎம்சி நீர் தேவை.
காவிரி தீர்ப்பு ஆயம், செங்கலாறு அணையில் இருந்து 0.800 நீர் மட்டுமே கேரளத்திற்கு ஒதுக்கி இருக்கின்றது. ஆனால் அவர்கள் பட்டிசேரியில், 2 டிஎம்சி கொள் அளவிற்கு அணையைக் கட்டுகின்றார்கள்.
1966 முதல் 2019 டிசம்பர் வரை, இதுவரையிலும் அமராவதி அணைக்குப் போதிய நீர் வரவில்லை.
இந்த நிலையில், கேரள அரசு புதிய கட்டுமானால், தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில், கரும்பு மற்றும் ஏனைய பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, காவிரி தீர்ப்பு ஆயம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, கேரளம் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு வைகோ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 19-03-2020 அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய சிஜிஎச்எஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 1357
கீழ்காணும் கேள்விகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) நடுவண் அரசின் உடல் நலத்திட்டத்தின் கீழ் (Central Government Health Schemes-CGHS) நாடு முழுமையும் எத்தனை மருந்தகங்கள், நல மையங்கள் உள்ளன. மாநில வாரியான பட்டியல் தருக.
(ஆ) புதிய மருந்தகங்களை அமைப்பதற்கான விதிமுறைகள் என்ன?
(இ) இந்தத் திட்டத்தின், தமிழ்நாட்டில், எத்தனை தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன?
(ஈ) பெருகி வரும் தேவைகளுக்கு ஏற்ப, தமிழ்நாட்டில் புதிய மருந்தகங்களை அரசு நிறுவுமா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக.
இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே அளித்த விளக்கம்
(அ) நாடு முழுமையும் உள்ள, எதிர்முறை (அலோபதி) மருத்துவ மையங்கள் எண்ணிக்கை குறித்த விவர அட்டவணை, இணைப்பாகத் தரப்பட்டு இருக்கின்றது.
(ஆ) புதிய மருந்தகங்களை நிறுவிடுவதற்கான அளவுகோல்
1, அந்த ஊரில் ஏற்கனவே இத்தகைய மையம் இருந்தால், குறைந்தது புதிதாக 2000 அட்டைதாரர்கள் (பணியில் இருக்கின்ற அரசு ஊழியர்கள், ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்கள்) இருந்தால் மட்டுமே புதிய கிளை நிறுவிட முடியும்.
2. இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற ஊரில், அதை நீட்டிக்க, விரிவுபடுத்த, குறைந்தது 6000 பேர் அட்டை வைத்து இருக்க வேண்டும்.
3. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில், 33 மருத்துவமனைகளும், 6 ஆய்வகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம், இணைப்பு அட்டவணை இரண்டில் தரப்பட்டுள்ளது.
4. தமிழ்நாட்டில் புதிய மருந்தகங்களை அமைப்பது குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள்
1. சிஎஸ்ஐ கல்யாணி பொது மருத்துவமனை, மயிலாப்பூர்,
2. சிஎஸ்ஐ ரெய்னி மருத்துவமனை, சென்னை 21
3. மியோட் மருத்துவமனை, மணப்பாக்கம், சென்னை
4. நோபிள் மருத்துவமனை, புரசைவாக்கம், சென்னை
5. சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை, அண்ணாநகர், சென்னை
6. சுகம் மருத்துவமனை, திருவொற்றியூர், சென்னை
7. ~பிரண்டியர் லை~ப்லைன் மருத்துவமனை, முகப்பேர் மேற்கு, சென்னை
8. பார்வதி ஆர்த்தோ மருத்துவமனை, குரோம்பேட்டை சென்னை
9. காவேரி புற்றுநோய் மருத்துவமனை, மயிலாப்பூர், சென்னை
10. கே.கே.ஆர் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை, கீழ்பாக்கம், சென்னை
11. டிரினிடி அக்யு கேர் மருத்துவமனை, கீழ்பாக்கம், சென்னை
12. பில்ரோத் மருத்துவமனை, செனாய் நகர், சென்னை
13. இந்து மிஷன் மருத்துவமனை, தாம்பரம் மேற்கு, சென்னை
14. அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை, நந்தனம், சென்னை
15. மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி
16. புதுவை மருத்துவ அறிவியல் மையம், கணபதிசெட்டிகுளம், புதுச்சேரி
17. மகாலெட்சுமி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல், சென்னை.

சிறப்பு கண் மருத்துவமனைகள்
1 முதல் 4 வரை. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, பெரம்பூர், தாம்பரம், போரூர்
5. உதி கண் மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை
6. உமா கண் மருத்துவமனை, அண்ணா நகர், சென்னை
7. அரவிந்த் கண் மருத்துவமனை, தவளகுப்பம்,புதுச்சேரி
8. டிஆர்ஆர் கண் மருத்துவமனை, பூவிருந்தவல்லி, சென்னை
9. ஜோதி கண் மருத்துவமனை, புதுச்சேரி -1
10. இராதா திரிநேத்ராலயா, தியாகராய நகர், சென்னை
11. டாக்டர் அரவிந்த் கண் மருத்துவமனை, முகப்பேர் மேற்கு, சென்னை
12. நிர்மல் கண் மருத்துவமனை, தாம்பரம் மேற்கு, சென்னை
13.ராஜன் கண் மருத்துவமனை, தியாகராய நகர், சென்னை
14. டாக்டர் அகர்வால் மருத்துவ மையம், ராஜிவ்காந்தி சதுக்கம், புதுச்சேரி

பல் மருத்துவமனைகள்
1. டாக்டர் குப்தா பல் சிறப்பு மருத்துவமனை, புரசைவாக்கம், சென்னை
2. டாக்டர் ரிமோ பல் சிறப்பு மருத்துவமனை, ஆவடி, சென்னை
நோய் முதல் நாடும் ஆய்வகங்கள் (Diagnostic Centre)
1. பிராம்ப்ட் பிரிசைஸ் ஆய்வகம், ஆவடி, சென்னை
2. ஆண்டர்சன் ஆய்வகம், புரசைவாக்கம், சென்னை
3. ஆர்த்தி ஸ்கேன்ஸ், வடபழநி, சென்னை
4. சங்கரா ஆய்வகம், அபிராமபுரம், சென்னை
5. விஆர்ஆர் ஆய்வகம், தியாகராய நகர், சென்னை
6. பாரத் ஸ்கேன்ஸ், இராயப்பேட்டை, சென்னை.


மேற்கண்டவாறு அறிக்கையை மதிமுக தலைமை நிலையம் தாயகம் 19-03-2020 வெளியிட்டுள்ளது.

Wednesday, March 18, 2020

விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு!

திருநெல்வேலி பைந்தமிழ் மன்றத்தின் சார்பில் சென்னையில் 2020 மார்ச் 28 ஆம் நாள் மதுரை நாடாளுன்ற உறுப்பினர், எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு இயற்றமிழ் வித்தகர் விருது வழங்குதல் மற்றும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்குசிறப்பு விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இவ்விழா ஒத்தி வைக்கப் படுகின்றது என நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் தலைவர் வைகோ 18-03-2020 தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் வைகோ, கணேசமூர்த்தி கோரிக்கை!

கொங்கு மண்டலத்தில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் விளைநிலங்களில் பெட்ரோலியம் எண்ணெய் குழாய்கள் பதிக்கக்கூடாது; நெடுஞ்சாலைகளை ஒட்டியே கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை இன்று 18.3.2020 நாடாளுமன்ற வாளாகத்திற்குள் சந்தித்து விண்ணப்பம் அளித்தனர்.
இந்த விண்ணப்பத்தில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சுப்பராயன் அவர்களும், நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.சின்ராஜ் அவர்களும் கையெழுத்து இட்டுள்ளனர் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 18-03-2020 அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய ரயில்வே தடங்கள் அமைக்கும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? வைகோ, சண்முகம் ஆகியோரின் கேள்விகளுக்கு, அமைச்சர் பியுஸ் கோயல் விளக்கம்!

கீழ்காணும் கேள்விகளுக்கு, ரயில்வே அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) இந்தியா முழுமையும் புதிய தொடரித் தடங்கள் அமைப்பதற்கான பல திட்டங்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளனவா?
(ஆ) அவ்வாறு இருப்பின், திட்டவாரியான விவரங்களைத் தருக.
(இ) மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்றப் போதிய நிதி ஒதுக்கப்படுமா? எப்போது நிறைவு பெறும்?
ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல் விளக்கம்
கேள்வி இ குறித்த விளக்க அறிக்கை, இந்த அவையின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அ, ஆ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
தற்போது, இந்தியா முழுமையும் 49,069 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய தடங்கள் அமைக்கின்ற 498 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை, திட்டம் வகுத்தல், நிதி ஒதுக்குதல், நிறைவேற்றுதல் எனப் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அவற்றுள், 8979 கிலோ மீட்டர் தொலைவிற்கான பணிகள், 2019 மார்ச் மாதம் நிறைவு பெற்று விட்டன.
ரயில்வே திட்டங்கள், மாநில வாரியாக அல்லாமல், கோட்ட வாரியாக நிறைவேற்றப்படுகின்றன. மேற்கண்ட 498 திட்டங்களுள் 22 திட்டங்கள், 2519 கிலோ மீட்டர் தொலைவிற்கு, ரூபாய் 21 ஆயிரத்து 579 கோடி செலவில் நிறைவேற்றப்படுகின்றன. 730 கிலோ மீட்டர் தொலைவிற்கான பணிகள் நிறைவு அடைந்துள்ளன. மற்றவை, பெரும்பகுதி அல்லது ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேற்கண்ட திட்டப் பணிகள் குறித்த முழுவிவரங்களும், இந்திய ரயில்வேயின் கீழ்காணும் இணையதளத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
(www.indianrailways.gov.in>Ministry of Railways>Railway Board>About Indian Railwas>RailwayBorad Directorates>Finance(Budget).
கேள்வி இ க்கான விளக்கம்:
புதிய தடங்கள் அமைத்தல், இரட்டைத் தடங்கள் மற்றும் அகன்ற வழிப் பாதையாக ஆக்குதல் ஆகிய திட்டங்களுக்கு, 2009-14 காலகட்டத்தில், ஓராண்டுக்கு ரூ.11,527 கோடி ஒதுக்கப்பட்டது. 2014-19 காலகட்டத்தில், ஓராண்டுக்கு 26,026 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இது, 126 விழுக்காடு உயர்வு ஆகும்.
மேற்கண்ட திட்டங்களுக்காக, 2019-20 ஆண்டுகளில் ரூ 38,803 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதான், இதுவரையிலும் ஆகக்கூடுதலான ஒதுக்கீடு ஆகும்.
தமிழ்நாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:
உள்கட்டமைப்புப் பணிகள், பாதுகாப்பு வசதிகளுக்காக, 2014-19 காலகட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக ரூ. 1979 கோடி ஒதுக்கப்பட்டது.
2019-20 ஆம் ஆண்டுக்கு, ரூ 2410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செலவினங்கள், ரூ 2812 கோடியாக இருக்கும்.
ரயில்வே திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. நிலம் கையகப்படுத்துதல், காடுகள் பாதுகாப்புத்துறையிடம் இருந்து தடை இன்மைச் சான்று பெறுதல், புதிய வழித்தடங்களில் நிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும், ஏற்கனவே உள்ள வசதிகளை இடம் மாற்றுதல், சட்டப் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு துறைகளிடம் இசைவு பெறுதல், நிலச்சரிவு, பெருமழை, வெள்ளம், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், நீதிமன்றங்களின் தடை ஆணைகள், ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், பருவநிலை மாற்றங்களால் பணிப் பாதிப்பு போன்ற காரணிகளால், பணிகள் தடைபடுகின்றன.
எனவே, திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு, கால வரையறை எதுவும் தீர்மானிக்க இயலாது என தெரிவித்துள்ளதாக மதிமுக தலைமை நிலையம் தாயகம் 18-03-2020 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 17, 2020

மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்களுடன் வைகோ தலைமையில் விவசாயிகள் குழுவினர் சந்திப்பு!

இன்று (17.03.2020) மாலை 04.30 மணி அளவில், புதுடெல்லி சிரம் சக்தி பவனில் இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான வைகோ, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில், இந்திய அளவில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள், உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாரத் கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், இமாச்சல் பிரதேச கிசான் சபை தலைவர் ரஜினிஷ் சர்மா ஆகியோர் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்களை சந்தித்து உயர் மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
தற்போது நிறைவேற்றப்பட்டு வரும் உயர்மின் கோபுரங்கள் திட்டங்களுக்கு 2013ஆம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின் அடிப்படையில் சந்தை மதிப்பில் இழப்பீடு, ஆதார தொகை, மாத வாடகையும், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மாத வாடகை தர வேண்டும்; எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து உயர் மின் கோபுரங்கள் திட்டங்களையும் சாலையோரமாக புதைவடம் மூலமாக நிறைவேற்றவும் கோரிக்கை விடுத்தனர்.
அகில இந்திய அளவில் பலம் வாய்ந்த பாரத் கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் அவர்களும், இமாச்சல் பிரதேச சபை தலைவர் ரஜினிஷ் சர்மா, தமிழகத்தில் இருந்து கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வே.பொன்னையன், அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டர், ஏர்முனை இளைஞர் அணியின் மாநில துணைத்தலைவர் மு. சுரேஷ், கருமத்தம்பட்டி தங்கவேல், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் முத்து விசுவநாதன், கொள்கை பரப்புச் செயலாளர் தாராபுரம் சிவகுமார், காங்கேயம் வட்டார தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 17-03-2020 அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமற்கிருத மொழிச் சட்டம், ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்து விடும் மாநிலங்கள் அவையில் வைகோ எச்சரிக்கை!

3 புதிய சமற்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்டமுன்வரைவின் மீது, 16.03.2020 அன்று, மாநிலங்கள் அவையில் வைகோ முன்வைத்த கருத்துகள்
அவைத் துணைத்தலைவர் அவர்களே,
இந்தி எதிர்ப்புக் களத்தில் கூர் தீட்டப்பட்டவன் என்ற முறையில், சமற்கிருத மொழிச் சட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒழித்துக்கட்டுகின்ற ஒரே நோக்கத்துடன், இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்.
இது, பெருங்கேடு விளைவிக்கின்ற அழிவுச் சட்டம் என்றே கூறலாம். நாடு முழுமையும் சமற்கிருதமயம் ஆக்கி, வேறு எந்த மொழிக்கும் இங்கே இடம் எல்லை என ஆக்க முனைகின்ற முயற்சி, இந்தியாவைத் துண்டுதுண்டாக ஆக்கி விடும்.
இந்தப் பல்கலைக்கழகங்கள், தேர்வுகள் நடத்துவது, தர மதிப்பு மற்றும் ஏனைய வழிகளில் பட்டயச் சான்றிதழ்கள் தரலாம்; பட்டங்கள் வழங்கலாம்; கல்வி தொடர்பான ஏனைய சான்றிதழ்களைத் தரலாம்.
அந்த ஏனைய வழிமுறைகள் என்ன? அதுதான் குருகுலக் கல்வி.
2019 ஏப்ரல் மாதம், உஜ்ஜைன் நகரில் நடந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுமையும், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், குருகுலக் கல்வியைப் பரப்ப வேண்டும் என்பதே, அந்தத் தீர்மானத்தின் கருத்து.
இதற்காக, எவ்வளவு தொகையை ஒதுக்கி இருக்கின்றார்கள்? அதைக் கேட்டால், நடுநிலையான இந்த அவையின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைவார்கள்.
அதாவது, இந்தியாவின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் இந்த அரசு ஒதுக்கி இருக்கின்ற ஒட்டுமொத்தத் தொகையை விட 22 மடங்கு கூடுதல் பணத்தை, சமற்கிருதம் என்ற ஒரே மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கி இருக்கின்றார்கள்.
இந்த அவையில் இருக்கின்ற, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, ஒடியா, பஞ்சாபி மற்றும் ஏனைய மொழிகளைப் பேசுவோர், இதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் சமற்கிருதமும், இந்தியும், தென்னிந்திய மொழிகளை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்து விடும்.
கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்; எனக்கு சமற்கிருத மொழியை எழுத, பேச, படிக்கத் தெரியும் என ஒரு சான்றிதழை, ஒரு மாணவன் கொடுத்தால் போதும்; அந்த மாணவன் பத்து அல்லது 12 ஆம் வகுப்பில் நேரடியாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார். அவர்கள், இயற்பியல், வேதியியல், வரலாறு, புவிஇயல் என வேறு எந்தப் பாடத்தையும் படிக்க வேண்டியது இல்லை. நம்ப முடிகின்றதா?
சமற்கிருத மொழியை வளர்ப்பதற்காக, 643.24 கோடி செலவில் தேசிய சமற்கிருதக் கல்லூரியைத் (Rashtriya Sanskrit Sansthan) தொடங்கினார்கள். ஆனால், எங்கள் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்திற்குக் கடந்த ஆண்டு வழங்கியது வெறும் 4 கோடி 65 இலட்சம்தான். கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கிய ஒட்டுமொத்தத் தொகை வெறும் 21 கோடிதான்.
சமற்கிருத மொழியைப் பரப்புவதற்கான திட்டங்களை வகுப்பதற்காக, 2015 ஆம் ஆண்டு, மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமியைத் தலைவராகக் கொண்டு, 13 பேர் கொண்ட ஒரு குழுவை அறிவித்தார்.
அந்தக் குழு, 2016 பிப்ரவரி 17 ஆம் நாள், தங்களுடைய ஆய்வு அறிக்கையை வழங்கியது.
சமற்கிருத மொழியை வளர்ப்பதற்கான தொலைநோக்குத் திட்ட வரைவு (Vision, Road Map for development of Sanskrit) என்பது அதன் தலைப்பு.
நான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன். உங்களுடைய குரு மனு, சாதிகளை அறிமுகப்படுத்தி, மனிதர்களுக்கு இடையே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவினையை ஏற்படுத்தியவர். எங்களுடைய ஆசான் திருவள்ளுவர். ஈடு இணை அற்ற ஒரு பொதுமறையை இந்த உலகத்திற்குத் தந்தவர். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவர்.
உலகின் தொன்மையான மொழி தமிழ்தான். அதுவே, அனைத்து மொழிகளுக்கும் தாய்.
இந்தச் சட்ட முன்வரைவு, இந்த அவையால் ஏற்கப்பட்டுச் சட்டம் ஆனால், அது இந்திய ஒற்றுமையை உடைத்துத் துண்டுதுண்டாக்கி விடும்; மக்கள் ஆட்சிக் கோட்பாட்டை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிடும் என எச்சரிக்கின்றேன். எனவே, ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றேன்.
அனைத்து மாநில அரசுகளும், இந்தச் சட்டத்தை எதிர்த்து, சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 17-03-2020 தெரிவித்துள்ளது.

Monday, March 16, 2020

தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுக்குழு ஒத்திவைப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28-ஆவது பொதுக்குழு 21.03.2020 சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரானா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கழகப் பொதுக்குழு ஒத்தி வைக்கப்படுகிறது.
பொதுக்குழு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கயில் 16-03-2020 தெரிவித்த்துள்ளார்.

இந்தியாவில் நிலப்பத்திரங்கள், எந்த அளவிற்குக் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளது? வைகோ, சண்முகம் ஆகியோரது கேள்விகளுக்கு, அமைச்சர் அளித்துள்ள விளக்கம்!

கேள்வி எண் 1905
கீழ்காணும் கேள்விகளுக்கு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) இந்திய நிலப்பதிவு ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டம் (Digital India Land Records Modernisation Programme- DILRMP) , 2020 ஜனவரி முதல் நாள் வரையிலும், எத்தனை விழுக்காடு நிறைவு பெற்று இருக்கின்றது?
(ஆ) இந்தத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்.
(இ) இப்போது இந்தத் திட்டத்தின் நிலை என்ன? மாநில வாரியாக ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்ட பட்டியல் தருக.
(ஈ) இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, கடந்த ஐந்து ஆண்டுகளில் போதுமானதாக இருந்ததா?
அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்துள்ள விளக்கம்
(அ) 2020 ஜனவரி 1 ஆம் நாள் நிலவரப்படி, இந்தியாவில் உள்ள 6 இலட்சத்து 55 ஆயிரத்து 959 கிராமங்களில், 5 இலட்சத்து 91 ஆயிரத்து 221 கிராமங்களில் நிலப்பத்திரங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு விட்டன. 90 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்தியா முழுமையும், 1 கோடியே 23 இலட்சத்து 94 ஆயிரத்து 956 நில வரைபடங்கள் (Cadastral Maps-காணிப்படங்கள்) உள்ளன. அவற்றுள், 66 இலட்சத்து 60 ஆயிரத்து 226 வரைபடங்கள் (54 விழுக்காடு) கணினிமயம் ஆக்கப்பட்டுவிட்டன. நாடு முழுமையும் உள்ள 5155 பத்திரப்பதிவு அலுவலகங்களில், 4479 அலுவலகங்களில், பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயம் ஆக்கப்பட்டு உள்ளன. 87 விழுக்காடு.
(ஆ) இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில், கலக்கம், எரிச்சல் ஏற்படுத்துகின்ற, உணர்வுகளின் அடிப்படையிலான பிரச்சினைகள் எழுகின்றன. ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து கணினிமயமாக்குவது, காலத்தை விழுங்கும் பெரும்பணி. ஏனைய திட்டங்களைப் போல் அல்லாமல், இந்தத் திட்டம் கருக்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள், கூறுகளை ஆக்கும் பணிகள் முழுமை அடைவதற்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கின்றது.
இந்தப் பணிகளை, கீழ்காணும் இதர பணிகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும்.
1. மாநிலங்களுக்கு, நடுவண் அரசு நிதி வழங்க வேண்டும்.
2. அந்தந்த மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு, திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
எனினும், போதுமான அளவு அடிப்படையான பணிகளை நிறைவு செய்து இருக்கின்றோம். உரிமைகளின் பதிவிற்காக (Record of Rights RoR), ஆவணங்களைக் கணினிமயம் ஆக்குதல், பத்திரப்பதிவு அலுவலகங்கள் மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்துகின்ற பணிகள் பெரும்பகுதி நிறைவு பெற்றுள்ளன.
அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும், மணிப்பூர் மாநிலத்தின் ஒரு பகுதியிலும், இந்தத் திட்டப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. இங்கே, நிலங்களின் உரிமை, சமூகக் குழுக்களிடம் இருக்கின்றது. அதனால், போதுமான அளவு நிலப்பத்திர ஆவணங்கள் அரசிடம் இல்லை. மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில், சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, நிலப்பத்திர ஆவணங்களை கணினிமயம் ஆக்க வேண்டியதன் தேவை குறித்து விளக்கம் அளித்து இருக்கின்றோம். அதன்பிறகு, இந்தத் திட்டத்திற்கான களப்பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
கேள்வி இ க்கான விளக்கம்.
இணைப்பு அட்டவணை 1 மற்றும் 2 இல், விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
கேள்வி ஈ க்கான விளக்கம்
இந்தத் திட்டத்திற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி விவரம்
ஆண்டு/ திட்ட மதிப்பீடு/ திருத்தப்பட்ட மதிப்பீடு/ வழங்கப்பட்டநிதி
2015-16 / 97.77 கோடி / 40.00 கோடி / 39.98 கோடி
2016-17 / 150.00 / 140.64 / 138.53
2017-18 / 150.00 / 100.00 / 97.74
2018-19 / 250.00 / 145.00 / 68.09
2019-20 / 150.00 / 50.00 / 35.83
(28.02.2020 வரை)

தேவைகளுக்கு ஏற்பவும், மாநில அரசுகள், நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும், இந்த நிதி ஒதுக்கப்படுகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நிதி ஒதுக்குவதில் எந்தக் குறைபாடும் எழவில்லை என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 16-03-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 15, 2020

தென்றல் நிசார் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

வடசென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் அவர்கள் மகள் மதிகா - இர்ஷாத் திருமணத்தில் தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அயல்நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்விகளுக்கு, அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்துள்ள விரிவான விளக்கம்!

கேள்வி எண் 206
கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல்உறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) அயல்நாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலாளர்கள், பணி இடங்களில் துன்புறுத்தப்படுகின்றார்களா? தண்டிக்கப் படுகின்றார்களா?
(ஆ) அவ்வாறு இருந்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து, அரசுக்குக் கிடைத்த தகவல்கள் என்ன?
(இ) அந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் தவறி இருப்பதற்குக் காரணம் என்ன?
(ஈ) வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலாளர்களை, சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் தொழிலாளர்களைத் துன்புறுத்துகின்றவர்களிடம் இருந்து பாதுகாக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்.
மேற்கண்ட நான்கு கேள்விகளுக்கும் பொதுவான விளக்கமாக, ஒரு அட்டணை இணைப்பு தரப்பட்டுள்ளது.
1. பணி இடங்களில் துன்புறுத்தல்கள், சட்டமீறல்கள் குறித்து,
அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், துணைத்தூதரகங்கள்,
இந்தியத் தொழிலாளர்களிடம் இருந்து தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளைப் பெற்று வருகின்றன.
மதிப்புக்குறைவாக நடத்துதல், பணி ஒப்பந்த மீறல்கள், பொருந்தாத பணிகளைச் செய்யும்படிக் கட்டாயப்படுத்துதல், பேசியபடி ஊதியம் தரமால் குறைத்துக் கொடுத்தல், தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்காதது, மருத்துவ வசதிகள் இன்மை, பணி இடங்களில் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு, உரிய இழப்பு ஈடு தராமல் இருப்பது போன்ற குறைபாடுகள் நிலவுகின்றன.
2. கடந்த மூன்று ஆண்டுகளில், வளைகுடா நாடுகளில் பணி ஆற்றுகின்ற இந்தியத் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட குற்றச்சாட்டுகள்.
2017 2018 2019
1. பஹ்ரைன் 792 734 836
2. கட்டார் 3328 3244 2896
3. சௌதி அரேபியா 5076 8271 7973
4. ஓமன் 4144 3594 2984
5. குவைத் 4481 3287 5286
6. அமீரகம் 3756 2153 2888

3. இந்தியத் தூதரகங்கள், துணைத் தூதரகங்களில் ஒரு குற்றசாட்டு பதிவு ஆனவுடன், அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகள் உடனே தொடங்கப்படுகின்றன. தேவைப்படுகின்ற இடங்களில், சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள, அந்தந்த நாட்டு நீதிமன்றங்களையும் தூதரகம் நாடுகின்றது.
4. வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களை, அயல்நாட்டு நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து பாதுகாக்க, உழைப்புச் சுரண்டலைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அது தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல், குறைகளைத் தீர்க்க நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
(அ) நாடு கடத்தப்படுகின்ற வேளைகளில், அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு, புறப்படுவதற்கு முன் நோக்கு நிலை பயிற்சி (Pre Departure Orientation Trainin PDOT) பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஊடகங்களின் வழியாக உள்ளூர் மொழிகளில் விழிப்பு உணர்வுப் பரப்பு உரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
(ஆ) மேடட் (Mobile Application app for Desired Assistance During Travel- MADAD) என்ற அலைபேசி செயலி வழியாக, தொழிலாளர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். அது தொடர்பாக, தூதரகம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளலாம்.
(இ) தொழிலாளர்களின் உறவினர்களும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாம். அதற்காக, Pravasi Bharatiya Sahayata Kendra -PBSK என்ற இணையப் பக்கம் உள்ளது. இதற்காக வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, இந்தக் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைளை குடியேற்றச் சட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் (Jurisdictional Protectors of Emigrants-PoEs) மேற்கொள்கின்றனர்.
(ஈ) புதுதில்லியில் உள்ள மேற்கண்ட மையத்தில், 24 மணி நேரமும் இயங்குகின்ற, இந்திய மொழிகளில் விளக்கம் தருகின்றார்கள். வழிகாட்டுதல்களும், அயல்நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலார்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் கையாளப்படுகின்றன. இத்தகைய மையங்கள், துபை, ஷார்ஜா, ரியாத், ஜெட்டா, கோலா லம்பூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, Kshetriya Pravasi Sahayata Kendra KPSK மையங்கள், கொச்சி, ஹைதராபாத், சென்னை, லக்னோ, புது தில்லியில் அமைக்கப்பட்டுள்ளன.
(உ) இந்தியத் தூதரகங்கள் தொழிலாளர்கள் பங்கேற்கின்ற, திறந்தவெளிக் கூட்டங்களை நடத்துகின்றன. அங்கே, தொழிலாளர்கள் தங்களுடைய குறைகள் குறித்துப் பேசலாம், கருத்துகளைத் தெரிவிக்கலாம். இந்தியத் தூதரகங்களில் 24 மணி நேரமும் இயங்குகின்ற இலவச அலைபேசி அழைப்பு வசதிகளும் உள்ளன.
(ஊ) மேற்கண்ட பணிகளுக்காக, இந்திய சமூக நல நிதி Indian Community Welfare Fund ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினருக்கும் உதவுகின்ற வகையில், இந்த நிதிக்கான சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. மூன்று முதன்மையான குறிக்கோள்- இக்கட்டான நிலையில் உள்ள இந்தியர்களுக்கு உதவுதல், சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், தூதரகப் பணிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிற்காக, மேற்கண்ட நிதி செலவிடப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களுக்கான குறைகள் தீர்க்கப்படுகின்ற வரையிலும், அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தங்கிக் கொள்ளலாம்.
(எ) வளைகுடா ஒருங்கிணைப்புக் குழு (Gulf Co-operation Council Countries) உள்ள ஆறு நாடுகளுடன், தொழிலாளர்கள் மற்றும் மனித ஆற்றல் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு மற்றும் உடன்படிக்கைகள் (Labour and Manpower Cooperation MoUs/Agreements) செய்துகொள்ளப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் வழியாக, தொழிலாளர்களின் குறைகளைப் பேசித் தீர்ப்பதற்கும், கூட்டுப் பணிக்குழு அமைத்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூடிப்பேசுவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, அமைச்சர் ஜெய்சங்கர் விரிவாக விளக்கம் அளித்து உள்ளார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 15-03-2020 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இனமான பேராசிரியர் படத் திறப்பு நிகழ்ச்சி

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் 15-03-2020 நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு புகழஞ்சலி உரை நிகழ்த்தினார்.

Saturday, March 14, 2020

வேளாண் கடன் உச்சவரம்பை ரூ. 5 இலட்சமாக உயர்த்துக! வைகோ கோரிக்கை!

கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதன் காரணமாக கரும்பு உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. கடும் வறட்சி. உற்பதிச் செலவினம் அதிகரிப்பு, கட்டுபடியான கொள்முதல் விலை இல்லாத துயரம் போன்றவற்றால் நாட்டில் கரும்பு உற்பத்திப் பரப்பும் குறைந்துகொண்டே வருவது கவலை அளிக்கிறது.
இதனால் தேசிய அளவில் சர்க்கரை உற்பத்தி பெருமளவில் சரிந்து வருகிறது. 2018-19 ஆம் ஆண்டில் 331.61 இலட்சம் டன் சர்க்கரை உற்பத்தி ஆன நிலையில், 2019 இல் 268 இலட்சம் டன் மட்டுமே சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. சுமார் 40 விழுக்காடு சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2011-12 ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 23 இலட்சம் டன்னாக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் வெறும் 8.50 இலட்சம் டன்னாக குறைந்துவிட்டது.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 1500 கோடி ரூபாயை வழங்காமல் கடந்த 4 ஆண்டுகளாக அலைக்கழிப்பதால் கரும்பு சாகுபடி செய்யும் எண்ணத்தையே விவசாயிகள் இழந்து வருகின்றனர்.
கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் தற்போது அளிக்கும் வேளாண் கடன் போதுமானது அல்ல.
ஏனெனில் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. 10 ஏக்கர் சாகுபடி செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு 5 இலட்சம் ரூபாய் கடன் வழங்கினால்தான் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் வட்டி மானியம் கிடைக்கும். ஆனால் கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து 15 ஆண்டுகளாக கரும்பு சாகுபடிக்கு அதிகபட்சக் கடன் தொகை ரூ 3 இலட்சம் மட்டுமே வழங்குகின்றன.
அதே போன்று நெற்பயிர் சாகுபடிக்கும் ஏக்கர் ஒன்றிற்கு 29,800 என்றும், அதிகபட்ச கடன் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ரிசர்வ் வங்கி வேளாண் கடன் அளவு அதிகபட்சமாக 3 இலட்சம் வரைதான் அளிக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளதால், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் 2 விழுக்காடு வட்டி மானியத்தை விவசாயிகள் பெற முடியவில்லை.
எனவே கரும்பு மற்றும் நெற் பயிருக்கு கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் வேளாண் கடன் தொகையை 3 இலட்சத்திலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 14-03-2020 தெரிவித்துள்ளார்.

Friday, March 13, 2020

உரங்களுக்கான அரசின் மானியக் கொள்கை என்ன? வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம் கீழ்காணும் கேள்விகளுக்கு, உரத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

கேள்வி எண்: 1804
(அ) விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள், மருந்துகள், தேவையான நேரங்களில், போதுமான அளவு கிடைக்க வழி செய்யப்பட்டு இருக்கின்றதா? மானியம் வழங்கப்படுகின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்;
(இ) கடந்த 6 மாதங்களில், உரத்தட்டுப்பாடு குறித்து, ஏதேனும் குறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளனவா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்:
(ஈ) ஊட்டச்சத்து உரங்களுக்கு மானியம் வழங்குகின்ற கொள்கையின்படி , (Nutrient Based Subsidy Policy) பாஸ்பேட், பொட்டாஷ், யூரியா போன்ற உரங்களுக்கு, எவ்வளவு மானியம் வழங்கப்பட்டு இருக்கின்றது?
(உ) ஏழை உழவர்கள் மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு (Marginal farmers), மானிய விலை உரங்கள், போதிய அளவில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கின்றதா?
அமைச்சர் சதானந்த கவுடா அளித்துள்ள விளக்கம்
அ, ஆ மற்றும் உ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
அரசு வகுத்துள்ள கட்டுப்பாட்டின்படி, சேர்ம உரங்கள் (யூரியா), 45 கிலோ எடையுள்ள ஒரு மூடை, 242 ரூபாய்க்குத் விற்கப்படுகின்றது. வரிகள், வேம்புப்பூச்சுக்கான (Neem coating) செலவுகள் தனி. இவற்றை, உழவர்களின் எல்லை வரை கொண்டு சேர்ப்பதற்கான செலவுக்கும், உர நிறுவனங்களின் நிகர சந்தை மதிப்பிற்கும் ஆன இடைவெளி, உர நிறுவனங்களுக்கும், இறக்குமதி செய்வோருக்கும் மானியமாக வழங்கப்படுகின்றது.
அதன்படி, அனைத்து விவசாயிகளுக்கும், மானிய விலையில் உரங்கள் கிடைக்கின்றன.
ஊட்டச்சத்து இடுபொருள்களுக்கு மானியம் வழங்குகின்ற கொள்கையின்படி, 1.4.2010 முதல், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ், உரங்களுக்கும் மானியம் வழங்கப்படுகின்றது.
இக்கொள்கையின்படி, ஒரு குறிப்பிட்ட அளவு மானியம், ஆண்டுதோறும் தீர்மானிக்கின்றபடி, பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களின் இடுபொருள்களுக்கு ஏற்றவாறு வழங்கப்படுகின்றது.
உர நிறுவனங்கள், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில் விற்பதை, அரசு கண்காணிக்கின்றது. அந்த உரங்களை வாங்குகின்ற ஏழை உழவர்களும், விளிம்புநிலை விவசாயிகளும், மானியத் திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனர்.
கட்டாயத் தேவைப் பொருட்கள் சட்டம் 1955 (Essential Commodities Act 1955), உரங்கள் கட்டுப்பாட்டு ஆணை 1985 (Notified Fertilizer Control Order), உரங்கள் நகர்வு கட்டுப்பாடு ஆணை (Fertilizer Movement Control Order 1973) அகியவற்றின்கீழ், உரங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.
உரங்கள் உரிய விலையில் விற்கப்படுவதைக் கண்காணிக்கவும், அரசு ஆணைகளை மீறுகின்றவர்களைத் தண்டிக்கவும், மேற்கண்ட சட்டங்கள் வழியாக, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
கேள்வி இ க்கான விளக்கம்: இல்லை
கேள்வி ஈ க்கான விளக்கம்: கடந்த மூன்று ஆண்டுகளில், பாஸ்பேட்,பொட்டாஷ் உரங்களுக்கு வழங்கப்பட்ட மானியம்:
யூரியா பாஸ்பேட் பொட்டாஷ்
1 2016-17 51,256.59 கோடி 18,842.87 கோடி
2. 2017-18 46953.70 கோடி 22,237.00 கோடி
3. 2018-19 49344.86 கோடி 24,080.35 கோடி

இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 13-03-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி படுகொலைக்குக் காரணமான சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!

தில்லி படுகொலைகள் குறித்து, மாநிலங்கள் அவையில் நேற்று (12.3.2020) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:
“அவையின் துணைத்தலைவர் அவர்களே,
இந்த விவாதத்தில் உரை ஆற்றுகின்ற வாய்ப்பினை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
தாங்க முடியாத வேதனையோடு, தில்லியில் நிகழ்ந்த, ஈவு இரக்கம் அற்ற, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களால், உயிர்களை இழந்த இந்துக்கள், இஸ்லாமியர்களின் துயரங்களில் நான் பங்கு கொள்கின்றேன். அவர்களுக்கு என் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இருண்ட வானத்தில் ஓர் ஒளிக்கீற்றாக, இந்தப் படுகொலைகள் நிகழ்ந்த வேளையில், வடகிழக்கு தில்லியில் இரத்தம் ஆறாக ஓடியபோது, ஒருசாரார், மற்றொரு பிரிவைச் சேர்ந்த மக்களை கட்டி அணைத்துக்கொண்டார். இந்துக்கள் இஸ்லாமியர்களை அரவணைத்து, புகல் இடம் அளித்துப் பாதுகாத்தார்கள். உணவு அளித்தார்கள். அதேபோல, இஸ்லாமியர்கள் இந்துக்களுக்குப் புகல் இடம் அளித்துப் பாதுகாத்தார்கள்.
அந்த வகையில், இந்த நாட்டின் மனிதப் பண்புகள், பெருந்தன்மை, பொதுநல உணர்வுகள், பட்டுப் போகாமல், அடிநீரோட்டம் போல ஓடுகின்றது.
மாற்றாருக்குப் புகல் இடம் அளித்துப் பாதுகாத்த அனைவருக்கும், நான் தலைவணங்கிப் போற்றுகின்றேன். தாங்கள் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் உறைந்து கிடந்த மக்களை அரவணைத்துக் கொண்டார்களே, அதுதான், இந்த நாட்டின் பெருந்தன்மை.
நேரம் கருதி, 2020 மார்ச் 2 ஆம் நாளுக்கு முந்தைய நிகழ்வுகளுக்குச் செல்ல நான் விரும்பவில்லை.
புகழ்பெற்ற இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த, பிப்ரவரி 24 ஆம் நாள், 53 வயதான ஒருவரும் அவரது பதின்பருவ மகனும் வெறிக்கூட்டத்தால் தாக்கப்பட்ட செய்தியைப் படிக்கவே முடியவில்லை. அந்தச் சிறுவனைக் கொடூரமாக வதைத்து, தடிகளால் மண்டையைத் தாக்கி உடைத்துக் கொன்றார்கள். இதுபோன்ற எத்தனையோ தாக்குதல் நிகழ்வுகள் ஏடுகளில் வெளிவந்துள்ளன.
வடகிழக்கு தில்லியில், வாறுகாலில் மேலும் நான்கு உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன; அவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை; காணாமல் போன மேலும் ஐந்து பேர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை; இதுவரையிலும் 55 பேர் உயிர் இழந்தனர் என்ற செய்திகள் வேதனை அளிக்கின்றன.
2020 மார்ச் 3 ஆம் நாள், உடன்பிறந்த ஒருவனின் தேடல், பிணக்கிடங்கில் போய் முடிந்தது. என்ற செய்தியைப் அதிர்ச்சி அடைந்தேன்.
நண்பர்களே, உளவுத்துறை அதிகாரி அங்கிட் சர்மா, மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு இருக்கின்றார். இந்த நாட்டின் மதிப்பைப் காப்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த அந்த அந்த அதிகாரியின் வீரத்திற்கு, நான் தலைவணங்குகின்றேன்.
பிறந்து 18 நாள்களே ஆன குழந்தை உட்பட, 8 பெண்குழந்தைகளுக்குத் தந்தையான, 35 வயது முடாசிர் கான் கொலையால், அந்தக் குடும்பத்தினர் இரத்தக்கண்ணீர் வடிக்கின்றார்கள். வடகிழக்கு தில்லியில், காதம்பரி பகுதியில், பிப்ரவரி 25 ஆம் நாள் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நாடு, உலகின் மிகப்பெரிய மக்கள் ஆட்சி நாடு என நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆம்; அது உண்மைதான். அதே வேளையில், ஐ.நா.மன்றத்தின் பொதுச்செயலாளரும், போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரும், மனித உரிமைகள் காவலருமான அந்தோணியோ குட்டரெஸ் தெரிவித்து இருக்கின்ற கவலை, நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கின்றது.
அது மட்டும் அல்ல; ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் அம்மையார், தில்லிப் படுகொலைகளால் அதிர்ச்சி அடைந்து, வேதனை தெரிவித்ததுடன் நில்லாது, இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கின்றார். இதுகுறித்து, ஜெனீவாவில் உள்ள இந்திய அரசின் நிலை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து இருக்கின்றார்.
இது, இந்திய வரலாறு இதுவரை காணாத காட்சி.
இத்தனைக்கும் காரணமான அந்தப் பாவி (வில்லன்) யார்?
குடிஉரிமை திருத்தச் சட்டம்.
இரண்டாவது வில்லன், குடிமக்கள் பதிவு ஏடு.
மூன்றாவது, கேடுகெட்ட வில்லன் மக்கள் தொகைக் கணக்குப் பதிவு.
எனவே, வெறுப்புக்கு, அதனால் விளைந்த மதவெறிக் கலவரங்களுக்கு, கேடுகளுக்கு, வேதனைகளுக்கு, உடனடித் தீர்வு என்ன?
குடிஉரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறுங்கள்
குடிமக்கள் பதிவு ஏட்டை நீக்குங்கள்
மக்கள்தொகைக் கணக்குப் பதிவைத் திரும்பப் பெறுங்கள்.”
இவ்வாறு வைகோ அவர்கள் உரையாற்றினார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 13-03-2020 அறிக்கை வெளியிட்டுள்ளது.