Tuesday, March 17, 2020

மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்களுடன் வைகோ தலைமையில் விவசாயிகள் குழுவினர் சந்திப்பு!

இன்று (17.03.2020) மாலை 04.30 மணி அளவில், புதுடெல்லி சிரம் சக்தி பவனில் இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான வைகோ, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில், இந்திய அளவில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள், உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாரத் கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், இமாச்சல் பிரதேச கிசான் சபை தலைவர் ரஜினிஷ் சர்மா ஆகியோர் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்களை சந்தித்து உயர் மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
தற்போது நிறைவேற்றப்பட்டு வரும் உயர்மின் கோபுரங்கள் திட்டங்களுக்கு 2013ஆம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின் அடிப்படையில் சந்தை மதிப்பில் இழப்பீடு, ஆதார தொகை, மாத வாடகையும், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மாத வாடகை தர வேண்டும்; எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து உயர் மின் கோபுரங்கள் திட்டங்களையும் சாலையோரமாக புதைவடம் மூலமாக நிறைவேற்றவும் கோரிக்கை விடுத்தனர்.
அகில இந்திய அளவில் பலம் வாய்ந்த பாரத் கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் அவர்களும், இமாச்சல் பிரதேச சபை தலைவர் ரஜினிஷ் சர்மா, தமிழகத்தில் இருந்து கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வே.பொன்னையன், அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டர், ஏர்முனை இளைஞர் அணியின் மாநில துணைத்தலைவர் மு. சுரேஷ், கருமத்தம்பட்டி தங்கவேல், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் முத்து விசுவநாதன், கொள்கை பரப்புச் செயலாளர் தாராபுரம் சிவகுமார், காங்கேயம் வட்டார தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 17-03-2020 அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment