Wednesday, March 11, 2020

தமிழ்நாட்டில் எத்தனை புதிய வான் ஊர்தி நிலையங்கள்? வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண். 1442
கீழ்காணும் கேள்விகளுக்கு, வான் ஊர்தி போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) உடான் திட்டத்தின் கீழ் 100 வான் ஊர்தி நிலையங்களை மேம்படுத்த அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதற்கான காலக்கெடு, குறிப்பாகத் தமிழகத்தில் பணிகள் நடைபெறுகின்ற பணிகள் குறித்த தகவல்களைத் தருக.
(இ) மேற்கண்ட பணிகளுக்கு, 2020-21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய தொகை எவ்வளவு? அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு செலவு செய்யத் திட்டம்?
(ஈ) மேற்கண்ட திட்டங்களில், தனியார்-பொதுமக்கள் கூட்டு (Public Private Partnership- PPP) உண்டா? அதுகுறித்த விவரங்களைத் தருக.
அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அளித்த விளக்கம்
அ, ஆ ஆகிய கேள்விகளுக்கு, விளக்கம்
நிலப்பரப்பு இணைப்புத் திட்டத்தின் கீழ் (Regional Connectivity Scheme-RCS; Ude Desh ka Aam Nagarik-UDAN) 100 இடங்களில் வான்ஊர்தி நிலையங்கள், உலங்குஊர்தி இறங்கு தளங்கள், நீர்நிலைகளில் வான்ஊர்தி இறங்கு தளங்கள் அமைப்பதற்கு, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது.
2016 அக்டோபர் மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், இந்திய வான் ஊர்திகள்ஆணையம் (AAI), இதுவரையிலும், 3 சுற்றுகள் மின் ஏலம் (e-bidding) நடத்தி இருக்கின்றது. இந்தத் திட்டங்களை நிறைவேற்ற, 10 ஆண்டுகள் கால வரையறை வகுக்கப்பட்டு இருக்கின்றது. அடுத்தடுத்த சுற்று ஏலங்களில், ஆணையத்தால் தேர்வு செய்யப்படுகின்ற மேலும் பல வான்ஊர்தித் தளங்கள், இந்தத் திட்டத்தில் இணைக்கப்படும்.
தமிழ்நாட்டில், நெய்வேலி, இராமநாதபுரம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, வான் ஊர்தி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.
இ, ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
இந்தத் திட்டத்தின் கீழ் பறக்கின்ற வான் ஊர்திகளுக்கு விதிக்கப்படுகின்ற வரிகளின் மூலமாகவே, இந்தத் திட்டங்களுக்கான நிதி திரட்டப்படும்.
செயல் இழந்து கிடக்கின்ற, பகுதி மட்டுமே இயங்குகின்ற, மாநில அரசுகள், இந்திய வான் ஊர்தி ஆணையம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்பில் உள்ள, வான் ஊர்தி நிலையங்கள், வான்வழிகள், உலங்கு ஊர்தித் தளங்கள், நீர்நிலை வான்ஊர்தி இறங்கு தளங்களை மேம்படுத்தி, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, ரூ 4500 கோடியை, நடுவண் அமைச்சரவையின் பொருள்முதல் ஆய்வுக்குழு ஒப்புதல் (Cabinet Committee on Economic Affairs) அளித்து இருக்கின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ், வான் ஊர்திகளை, குறைந்த கட்டணத்தில் மக்கள்பயன்பாட்டுக்குக் கொண்டு வருகின்ற முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், தனியார்-பொதுமக்கள் கூட்டுத் திட்டத்தின் கீழ், வான்ஊர்தி நிலையங்களை மேம்படுத்துகின்ற வேறு திட்டம் எதுவும் இல்லை.
#கேள்வி எண்: 1443
(அ) பல்வேறு வான் ஊர்தி நிறுவனங்களில், வான் ஊர்திகளை இயக்குகின்ற, பயணிகளுக்கு உதவுகின்ற பெண்களிடம் இருந்து, பணி இடங்களில் சீண்டல்கள் குறித்து, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்.
(இ) விசாகா குழு அளித்த வழிகாட்டுதல்களின்படி, இதுகுறித்து ஆய்வு செய்யும் குழுக்களை, வான் ஊர்தி நிறுவனங்கள் அமைத்து இருக்கின்றதா?
(ஈ) அவ்வாறு இருப்பின் அதுகுறித்த தகவல்கள்; இல்லை என்றால், அதற்கான காரணங்களைத் தருக.
அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அளித்துள்ள விளக்கம்
அ முதல் ஈ வரையிலான கேள்விகளுக்கு.
பெண்களுக்கு எதிரான சீண்டல்கள் குறித்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும், பணி இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்புச்சட்டம் (2013) இன்படி, ஆய்வு செய்யப்படுதல் வேண்டும். இதுகுறித்து அனைத்து வான்ஊர்தி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.
அந்தச் சட்டத்தின்படி, அனைத்து வான் ஊர்தி நிறுவனங்களும், உள்ளகக் குறைபாடுகள் ஆய்வுக்குழு (Internal Complaints Comittee ICC) அமைக்க வேண்டும். இதுகுறித்த தகவல்களை, வான் ஊர்திகளின் தலைமை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என மேற்படிச் சட்டத்தில் பரிந்துரைகள் எதுவும் இல்லாததால், இதுகுறித்த ஆவணங்களை, வான்ஊர்திகளின் தலைமை இயக்குநர் அலுவலகம் பராமரிப்பது இல்லை என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 11-03-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment