Saturday, March 28, 2020

அழிவு ஏற்படுத்தும் கொரோனா நோயை எதிர்த்து சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் மனிதநேயத்துடன் கடமையாற்ற வேண்டும்! வைகோ வேண்டுகோள்!

கோவிட் 19 கொரோனா அழிவை நேயைத் தடுக்க உலகத்தின் அனைத்து நாடுகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன. இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் மோரிஸ் ஜான்சன் தன்னை கொரோனா நோய் தாக்கிவிட்டது என்று அறிவித்து, தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு சேவை செய்கிறார்.
இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லசுக்கும் கொரோனா தாக்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டு தலைவர்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஐந்து இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் பேர்
இந்நோயால் பதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர்.

வரும் நாட்களில் இந்தியாவில் இந்நோயின் தாக்குதல் கடுமையாகக்கூடும் என்றும் ஒருசில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அனைவரையும், குறிப்பாக அன்றாடங்காய்ச்சிகள், தினக்கூலி செய்வோர், கட்டிடத் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில் அனைவரும் மனிதாபிமானத்தோடு செயல்பட முன்வர வேண்டும்.
கோயம்பேடு போன்ற பெரிய சந்தைகளில் காய்கறிகளைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதனை ஐந்து மடங்கு, ஆறு மடங்கு விலையில் ஒரு சிலர் விற்பனை செய்து, கொள்ளை லாபம் அடிக்கின்ற செய்தி மனதுக்கு மிகவும் வேதனையைத் தருகின்றது. அதனால்தான் பொதுமக்கள் மொத்த வியாபாரம் நடக்கும் சந்தைகளுக்குச் செல்கிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டமாகி விடுகிறது. அதனால்தான் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மனித உயிர்களைக் காப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறைப் பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மாத ஊதியத்தை இருமடங்காக உயர்த்தித் தர அரசு முன்வர வேண்டும். நோய் தடுப்புச் சாதனங்களும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நம்மையும், நமது சக மனிதர்களையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வோடு அனைத்துத் தரப்பினரும் கடமையாற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 28-03-2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment