Wednesday, March 25, 2020

உயிர்காக்கும் கருவிகளை ஆயத்தம் செய்ய வேண்டும்; அடித்தட்டு மக்களுக்கு அரசு உதவித்தொகை தர வேண்டும்!

கொவிட் 19 கொரோனா நுண்கிருமித் தொற்று, காற்றை விட வேகமாகப் பரவி, ஏழு கண்டங்களிலும் உள்ள 175 நாடுகளுக்கும் மேல் ஊடுருவி விட்டது. கிட்டத்தட்ட 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு விட்டார்கள். 17500 க்கும் பேருக்கும்  மேல் உயிர் இழந்து விட்டனர். உலகமே அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றது. அச்சம் எல்லோரையும் பீடித்து இருக்கின்றது. 

இரண்டு நாள்களில். அமெரிக்காவில் மட்டும் 400 பேருக்கு மேல் இறந்து விட்டனர். கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவை விட, இத்தாலியில் கூடுதலான மக்கள் இறந்து விட்டனர். அருகில் உள்ள ஸ்பெயின், ~பிரான்ஸ் நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டன. இதுவே இந்தியாவுக்கு உள்ளே ஊடுருவினால், நிலைமை என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எனவே, அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதைக் குறை சொல்வதற்கு இல்லை. 

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் 

என்று, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் உரைத்து இருக்கின்றார். 

முன்கூட்டியே ஆபத்தைத் தடுக்காவிடில், நெருப்பில் சிக்கிய வைக்கோல் போலக் கருகும் ஆபத்து நேரிடும் என்று எச்சரித்து உள்ளார். 

அதுபோல, இந்தியாவிலும் மிகப்பெரிய பாதிப்புக்கான வாய்ப்பு இருக்கிறது டாக்டர்கள் மருத்துவர்கள்  எச்சரிக்கை விடுத்து இருக்கின்றார். 

மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவம். தூய்மைப் பணியாளர்கள், ஊடகங்களில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் களப்பணி ஆற்றி வருகின்றார்கள். விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். 

இத்தகைய சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட ஏழை, எளிய மக்கள். வீடு இல்லாத நடைபாதை வாசிகள் நிலைதான் மிகவும் பரிதாபகரமானது. அன்றாடங் காய்ச்சிகள் நிலையும் அதுபோலத்தான் இருக்கின்றது. விவசாயக் கூலித் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டு விட்டது. 

எனவே, அத்தகைய ஏழை எளிய குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும், உடனடியாக ருபாய் 3000 அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். ரேசன் கார்டுகள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தாமல், அடையாள அட்டைகளைச் சரிபார்த்து வழங்கலாம்,  

மத்திய மாநில அரசுகள், மனிதாபிமானத்தோடு செயல்பட்டு வருகின்ற  நிலையில், அத்தகைய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். கூட்டம் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.  

~பிரான்ஸ் நாட்டில் வீட்டைவிட்டு வெளியே வந்தால், 10,000 ~பிராங்க் அபராதம் என அரசு எச்சரித்து இருக்கின்றது. மருத்துவத்தில், அறிவியலில் சாதனைகள் புரிந்த நாடுகளிலேயே உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தக் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார்கள். அது போன்ற கட்டுப்பாடுகளை, பொதுமக்கள்  தமக்குத் தாமே விதித்துக் கொள்ள வேண்டும். 

களப்பணி ஆற்றி வருகின்ற தொண்டு நிறுவனங்களுக்கு மறுமலர்ச்சி திமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

கிரிமி நாசினிகள், கை உறைகள், சானிட்டைசர்கள் போன்ற தொற்றுத் தடுப்புக் கருவிகளை. போர்க்கால அடிப்படையில் தயாரிக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டும். மருத்துவமனைகளில் உயிர்காக்கும் கருவிகள் தட்டுப்பாடு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

நாடு முழுமையும் உள்ள சிறைக்கூடங்களில், சிறுசிறு குற்றங்களுக்காக, விசாரணை இன்றி அடைக்கப்பட்டு உள்ளவர்களை, உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கொவிட் 19 கொரோனா தொற்று நோய் என்ற பேரழிவில் இருந்து மனித இனத்தைக் காப்பதற்கு, மக்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவதே முதன்மையான கடமை ஆகும்.

இதுவரை எதிர்பாராத ஒரு இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள, அரசு பெரும்பணத்தைச் செலவிட்டு வருகின்றது. என்னுடைய ஒரு மாத ஊதியத்தை, முதல் அமைச்சர் நிதிக்கு வழங்குகின்றேன் என‌ மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 24-03-2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment