ஐஐடி மாணவர் சூரஜ் மீது தாக்குதல், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 01-06-2017 அன்று செய்தியாளர்களிடம் வைகோ!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் சென்னை ஐ.ஐ.டி யில் டாக்டரேட் படித்து வருகிறார். இவர் மாட்டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ்சிங் என்ற மாணவர் தாக்கியதில், நெற்றி எலும்பும், கண்ணுக்குக் கீழ் உள்ள எலும்பும் உடைந்து ரத்தம் கொட்டி இருக்கின்றது. உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்றும் மிரட்டி இருக்கிறார். தடுக்க வந்த மாணவரையும் தாக்கி இருக்கின்றனர். மணீஷ் சிங்சின் உடன் இருந்த மாணவர்கள் தடுக்கவிடாமல் கட்டிப் பிடித்துக்கொண்டார்களாம். இதற்கு முன்பும் சில மாணவர்களைத் தாக்கி அச்சுத்தி இருப்பதாகத் தெரிகின்றது.
வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று மாலை இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. நான் பார்க்கச் சென்றபோது அவர் இன்னும் மயக்கம் தெளியவில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள். மாணவர் சூராஜ் தாய்மானார் வேணுகோபால் மற்றும் அவருடன் பயிலும் மாணவர்களிடமும் நடந்தவற்றைக் கேட்டுஅறிந்தேன்.
இதில் வேதனை என்னவெனில், மிகக் கொடூரமாகத் தாக்கிய மணீஷ்சிங், தானும் தாக்கப்பட்டதாகக் கூறி, கையில் கட்டுப் போட்டுக் கொண்டு காட்சி அளிக்கின்றார். ஆனால் அவர் தாக்கப்படவே இல்லை என்றும் இந்த இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக வன்முறையில் ஈடுபட்ட மணீஷ் சிங் பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் என்றும் மாணவர்கள் கூறுகின்றார்கள்.
இந்தியாவிலேயே புகழ் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்று சென்னை ஐஐடி நிறுவனம் ஆகும். அங்கே நடைபெற்ற இந்தக் கொடிய வன்முறைச் சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன். கேரள மாநில முதல்வர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் இதுகுறித்துத் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
எனவே, ஐஐடி நிறுவனத்தினுடைய இயக்குநர் அவர்களும், காவல்துறையினரும் நடுநிலையோடு நடந்தவற்றை விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்ட மாணவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அந்நிறுவனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்கு அச்சமற்ற நிலையை உருவாக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment