அகில இந்திய குடிமைப் பணிகள் (ஐ.ஏ.எஸ்.) தேர்வில் தமிழ் நாட்டில் முதலிடமும், அகில இந்தியாவில் 21 ஆவது இடமும் பெற்ற பிரதாப் முருகனுக்கு வைகோ நேரில் பாராட்டு!
நடந்து முடிந்த அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்.) தேர்வில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த பிரதாப் முருகன் தமிழ்நாட்டில் முதலிடமும், அகில இந்தியாவில் 21 ஆவது இடமும் பெற்றது தமிழ்நாட்டிற்கே பெருமையாகும் என்று சென்னையில் அவர் வசிக்கும் இல்லத்திற்கு வைகோ அவர்கள் 2-6-2017 அன்று நேரில் சென்று பொன்னாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.
பிரதாப் முருகன் அவர்கள் வத்திராயிருப்பிலும் பின்னர் பாளையங்கோட்டையிலும் பள்ளிப் படிப்பை முடித்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் வேதியியல் பொறியாளர் பட்டம் பெற்று, புது டில்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி கல்விக் கூடத்தில் பயின்று, தேர்வில் கலந்துகொண்ட முதல் முறையிலேயே சிறப்பான வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதல் இடத்துக்கு வந்துள்ளார். 22 வயதில் இந்த சாதனை நிகழ்த்தி உள்ள பிரதாப் முருகன் அவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தேர்ந்தெடுத்த பாடம் அரசியலும் பன்னாட்டு உறவுகளும் ஆகும். நேர்காணல் தேர்வில் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அற்புதமாக பதில் அளித்து தேர்வாளர்களின் பாராட்டைப் பெற்று இருக்கிறார்.
தமிழகத்தின் எதிர்கால நலனுக்கும், நேர்மையான நிர்வாகத்திற்கும் தன்னை அர்ப்பணிப்பேன் என்று வைகோ அவர்களிடம் கூறினார்.
ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து முனைப்புடன் கல்வி பயின்று உயர்ந்த வெற்றியைப் பெற்றுள்ள இளைஞரான நீங்கள் நிர்வாகத்துறையில் உன்னதமான இடத்தை அடைந்து பெருமைக்குரிய சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று வைகோ அவர்கள் பாராட்டுத் தெரிவித்தார்.
தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார். தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் டி.சி.இராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment