காலத்தால் அழியாத இலக்கியங்களைப் படைத்த கவிக்கோ என்ற கவிதைப் பறவை விண்ணில் சிறகடித்துப் பறந்து விட்டது.
உருதுக் கவிஞர்களான பாட்டனும் தந்தையும் வந்த கொடிவழியில் கசல் கவிதைகளை யாத்து, புதுக்கவிதையின் குறியீடு ஆய்வு செய்து முனைவர் பட்டம் உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளையும் பெற்று, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் 29 ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி, இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் பலவற்றைத் தமிழகத்திலும், அலைகடல் தாண்டிய நாடுகள் பலவற்றிலும் நடத்தி, கவி அரங்கங்களைக் கவி இராத்திரிகளாக சின்னத்திரையில் மக்கள் மன்றத்தில் நிறுத்தி, கவிதா மண்டலங்களின் கவிநாயகனாகத் திகழ்ந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்அவர்கள் ஆவார்கள்.
உடல் ஓய்ந்து உயிர் சாய்ந்தாலும், மானத் தமிழர்களின் நெஞ்சத்தில் நிலைபெற்றுவிட்ட மாபெரும் இலட்சியக் கவிஞன் கவிக்கோ, என் இதயத்தில் சிகரம்போல் உயர்ந்து நிற்பதால், தமிழகத்தின் கலீல் கிப்ரான் கவிக்கோ என்றே மேடைகளில் அவரைப் போற்றி வந்தேன்.
அவரது பவள விழாவில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து உரைத்ததும், அலைகடல்களைத் தாண்டியும் பரந்து விரிந்துள்ள அகிலத்தின் அனைத்து நாடுகளிலும் கவிக்கோவின் புகழை உலகம் முழுமையும் பகிர்ந்து கொள்ளும் கருவூலமாகக் காலாகாலத்திற்கும் திகழப் போகின்ற கவிக்கோவின் கவிதைகளை, கவிக்கோ டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியிடுவதைத் தொடங்கி வைக்கின்ற வாய்ப்பை அவர் எனக்கு அளித்ததும் நான் பெற்ற பேறு.
பொடா சிறைவாசத்தில் நான் 19 மாதங்கள் அடைபட்டுக் கிடந்தபோது வேதனையுற்று அவர் தீட்டிய கவிதை எனக்குக் கிடைத்த பட்டயம்.
அந்த மகாகவிஞனின் வானமளாவிடும் எண்ணங்களைச் சுரக்கும் இருதயத்தில் இப்படியொரு இடம் எளியேனுக்குக் கிடைத்ததே என்பதை எண்ணிப் பார்க்கின்றேன்.
இலக்கியம் சார்ந்த பொதுவாழ்வும், இலக்கியத்தைத் தழுவிய வாழ்க்கையும்தான் நிறைவானது. அழகும், வனப்பும், கவித்துவமும் கலந்து வருகின்ற கருத்துகள்தான் மக்களை ஈர்க்கும் என்பதற்குக் கவிக்கோ ஓர் எடுத்துக்காட்டு.
தமிழில் கவிதை என்று சொன்னால், கவிக்கோவைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. அவருடைய கருத்துகள், அவர் தந்த படைப்புகள், கவிதையால் அவர் காட்டிய பாதை, அவர் வாழ்ந்த வாழ்க்கை தமிழகத்தின் கவிதைத் தலைமுறைக்கு என்றைக்கும் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.
வாழ்க கவிக்கோ!
என தனது 2-6-2017 இரங்கல் அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment