இரண்டு உலகப் போர்களில் ஏற்பட்ட அழிவைவிட பேரழிவு ஏற்பட்டுவிடுமோ? என்று அஞ்சுகின்ற வகையில், கோவிட் 19 கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோய் உலகெங்கும் பரவி வருகிறது.
ஸ்பெயின் நாட்டு இளவரசி இறந்துவிட்டார் என்ற செய்தியை இன்று காலையில் தொலைக்காட்சிகளில் காண நேர்ந்தது.
இங்கிலாந்து பிரதமரும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு, நான் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.
எனவே அரண்மனை வாசிகளிலிருந்து குடிசைவாசிகள் வரை யாராலும் தடுக்க முடியாத நோயாக கொரோனா இருந்துகொண்டு இருக்கிறது.
அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக விவசாயிகள் மிக மிக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதிலும் இந்த ஆண்டு நீர் வசதி கிடைத்தும், தக்க நேரத்தில் பயிரிடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும் சில இடங்களில் விதைக்க முடியாமலும், விளைந்திருக்கின்ற பயிர்களில் இருக்கும் களைகளைப் பறிக்க முடியாமலும், அறுவடை செய்ய முடியாமலும், விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமலும் விவசாயிகள் அவதிப்படுகிறார்கள். ஆக கண் இருந்தும் இல்லாத நிலைமைக்கு அவர்கள் ஆளாகிவிட்டார்கள்.
அதைப் போன்று உரங்கள், பூச்சி மருந்துகள் கிடைப்பது இல்லை. நாங்கள் என்ன செய்வது? என்று விவசாயிகள் தேம்புகிறார்கள்.
இந்த அவலநிலை குறித்து தமிழக அரசின் வேளாண்மைத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களிடம் நான் பேசியபோது, “கவலையே படவேண்டாம். உரங்கள், பூச்சி மருந்துகள் கொடுப்பதற்கு அனைத்து இடங்களுக்கும் நாங்கள் அறிவுறுத்தல் செய்திருக்கிறோம். ஏஜென்சிகள் எடுத்திருக்கின்ற தனியார் வழங்குவதற்கும் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம். ஆக, விவசாயிகள் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் என்னை அணுகலாம்” என்று கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருந்தேன். நேற்றைக்கு தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான கடிதத்தை அனுப்பிவிட்டேன். அக்கடிதம் அவரிடம் சென்று சேர்ந்துவிட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 29-03-2020 தெரிவித்துள்ளார்.