தில்லி படுகொலைகள் குறித்து, மாநிலங்கள் அவையில் நேற்று (12.3.2020) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:
“அவையின் துணைத்தலைவர் அவர்களே,
இந்த விவாதத்தில் உரை ஆற்றுகின்ற வாய்ப்பினை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
தாங்க முடியாத வேதனையோடு, தில்லியில் நிகழ்ந்த, ஈவு இரக்கம் அற்ற, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களால், உயிர்களை இழந்த இந்துக்கள், இஸ்லாமியர்களின் துயரங்களில் நான் பங்கு கொள்கின்றேன். அவர்களுக்கு என் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இருண்ட வானத்தில் ஓர் ஒளிக்கீற்றாக, இந்தப் படுகொலைகள் நிகழ்ந்த வேளையில், வடகிழக்கு தில்லியில் இரத்தம் ஆறாக ஓடியபோது, ஒருசாரார், மற்றொரு பிரிவைச் சேர்ந்த மக்களை கட்டி அணைத்துக்கொண்டார். இந்துக்கள் இஸ்லாமியர்களை அரவணைத்து, புகல் இடம் அளித்துப் பாதுகாத்தார்கள். உணவு அளித்தார்கள். அதேபோல, இஸ்லாமியர்கள் இந்துக்களுக்குப் புகல் இடம் அளித்துப் பாதுகாத்தார்கள்.
அந்த வகையில், இந்த நாட்டின் மனிதப் பண்புகள், பெருந்தன்மை, பொதுநல உணர்வுகள், பட்டுப் போகாமல், அடிநீரோட்டம் போல ஓடுகின்றது.
மாற்றாருக்குப் புகல் இடம் அளித்துப் பாதுகாத்த அனைவருக்கும், நான் தலைவணங்கிப் போற்றுகின்றேன். தாங்கள் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் உறைந்து கிடந்த மக்களை அரவணைத்துக் கொண்டார்களே, அதுதான், இந்த நாட்டின் பெருந்தன்மை.
நேரம் கருதி, 2020 மார்ச் 2 ஆம் நாளுக்கு முந்தைய நிகழ்வுகளுக்குச் செல்ல நான் விரும்பவில்லை.
புகழ்பெற்ற இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த, பிப்ரவரி 24 ஆம் நாள், 53 வயதான ஒருவரும் அவரது பதின்பருவ மகனும் வெறிக்கூட்டத்தால் தாக்கப்பட்ட செய்தியைப் படிக்கவே முடியவில்லை. அந்தச் சிறுவனைக் கொடூரமாக வதைத்து, தடிகளால் மண்டையைத் தாக்கி உடைத்துக் கொன்றார்கள். இதுபோன்ற எத்தனையோ தாக்குதல் நிகழ்வுகள் ஏடுகளில் வெளிவந்துள்ளன.
வடகிழக்கு தில்லியில், வாறுகாலில் மேலும் நான்கு உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன; அவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை; காணாமல் போன மேலும் ஐந்து பேர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை; இதுவரையிலும் 55 பேர் உயிர் இழந்தனர் என்ற செய்திகள் வேதனை அளிக்கின்றன.
2020 மார்ச் 3 ஆம் நாள், உடன்பிறந்த ஒருவனின் தேடல், பிணக்கிடங்கில் போய் முடிந்தது. என்ற செய்தியைப் அதிர்ச்சி அடைந்தேன்.
நண்பர்களே, உளவுத்துறை அதிகாரி அங்கிட் சர்மா, மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு இருக்கின்றார். இந்த நாட்டின் மதிப்பைப் காப்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த அந்த அந்த அதிகாரியின் வீரத்திற்கு, நான் தலைவணங்குகின்றேன்.
பிறந்து 18 நாள்களே ஆன குழந்தை உட்பட, 8 பெண்குழந்தைகளுக்குத் தந்தையான, 35 வயது முடாசிர் கான் கொலையால், அந்தக் குடும்பத்தினர் இரத்தக்கண்ணீர் வடிக்கின்றார்கள். வடகிழக்கு தில்லியில், காதம்பரி பகுதியில், பிப்ரவரி 25 ஆம் நாள் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நாடு, உலகின் மிகப்பெரிய மக்கள் ஆட்சி நாடு என நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆம்; அது உண்மைதான். அதே வேளையில், ஐ.நா.மன்றத்தின் பொதுச்செயலாளரும், போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரும், மனித உரிமைகள் காவலருமான அந்தோணியோ குட்டரெஸ் தெரிவித்து இருக்கின்ற கவலை, நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கின்றது.
அது மட்டும் அல்ல; ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் அம்மையார், தில்லிப் படுகொலைகளால் அதிர்ச்சி அடைந்து, வேதனை தெரிவித்ததுடன் நில்லாது, இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கின்றார். இதுகுறித்து, ஜெனீவாவில் உள்ள இந்திய அரசின் நிலை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து இருக்கின்றார்.
இது, இந்திய வரலாறு இதுவரை காணாத காட்சி.
இத்தனைக்கும் காரணமான அந்தப் பாவி (வில்லன்) யார்?
குடிஉரிமை திருத்தச் சட்டம்.
இரண்டாவது வில்லன், குடிமக்கள் பதிவு ஏடு.
மூன்றாவது, கேடுகெட்ட வில்லன் மக்கள் தொகைக் கணக்குப் பதிவு.
எனவே, வெறுப்புக்கு, அதனால் விளைந்த மதவெறிக் கலவரங்களுக்கு, கேடுகளுக்கு, வேதனைகளுக்கு, உடனடித் தீர்வு என்ன?
குடிஉரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறுங்கள்
குடிமக்கள் பதிவு ஏட்டை நீக்குங்கள்
மக்கள்தொகைக் கணக்குப் பதிவைத் திரும்பப் பெறுங்கள்.”
இவ்வாறு வைகோ அவர்கள் உரையாற்றினார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 13-03-2020 அறிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment