தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி, 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,276 பள்ளிகளில், 8 இலட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது. இத்தேர்வை 8,26,119 பேர் எழுதுகிறார்கள். இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
மாணவ கண்மணிகளை உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக இப்பொதுத்தேர்வுகள் விளங்குகின்றன. மாணவர்களின் நலன் கருதி பள்ளிப் பொதுத்தேர்வுகளை அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைத்து நடத்திட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று பதற்றமும், அச்சமும் இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்களின் முழுத்திறனையும் ஆற்றலையும் வெளிக்கொணரும் சாதனங்கள் தேர்வுகள் மட்டுமே அல்ல. பயிலும் திறனை ஓரளவு தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புதான் தேர்வு.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த எவ்வித அழுத்தத்தையும் தர வேண்டாம். வாழ்வில் வெற்றிபெற ஓராயிரம் வழிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுங்கள்.
தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகளோ, இதர அமைப்புகளோ, திருவிழா கொண்டாடுகிற குழுவினரோ ஒலிப்பெருக்கியை சத்தமாக இயக்கிடுவதை முற்றாகத் தவிர்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டையும், சமூகத்தையும் நல்ல முறையில் வழிநடத்தப் போகும் வருங்கால தலைமுறையினரான என் இனிய மாணவச் செல்வங்களுக்கு என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 01-03-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment