3 புதிய சமற்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்டமுன்வரைவின் மீது, 16.03.2020 அன்று, மாநிலங்கள் அவையில் வைகோ முன்வைத்த கருத்துகள்
அவைத் துணைத்தலைவர் அவர்களே,
இந்தி எதிர்ப்புக் களத்தில் கூர் தீட்டப்பட்டவன் என்ற முறையில், சமற்கிருத மொழிச் சட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒழித்துக்கட்டுகின்ற ஒரே நோக்கத்துடன், இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்.
இது, பெருங்கேடு விளைவிக்கின்ற அழிவுச் சட்டம் என்றே கூறலாம். நாடு முழுமையும் சமற்கிருதமயம் ஆக்கி, வேறு எந்த மொழிக்கும் இங்கே இடம் எல்லை என ஆக்க முனைகின்ற முயற்சி, இந்தியாவைத் துண்டுதுண்டாக ஆக்கி விடும்.
இந்தப் பல்கலைக்கழகங்கள், தேர்வுகள் நடத்துவது, தர மதிப்பு மற்றும் ஏனைய வழிகளில் பட்டயச் சான்றிதழ்கள் தரலாம்; பட்டங்கள் வழங்கலாம்; கல்வி தொடர்பான ஏனைய சான்றிதழ்களைத் தரலாம்.
அந்த ஏனைய வழிமுறைகள் என்ன? அதுதான் குருகுலக் கல்வி.
2019 ஏப்ரல் மாதம், உஜ்ஜைன் நகரில் நடந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுமையும், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், குருகுலக் கல்வியைப் பரப்ப வேண்டும் என்பதே, அந்தத் தீர்மானத்தின் கருத்து.
இதற்காக, எவ்வளவு தொகையை ஒதுக்கி இருக்கின்றார்கள்? அதைக் கேட்டால், நடுநிலையான இந்த அவையின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைவார்கள்.
அதாவது, இந்தியாவின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் இந்த அரசு ஒதுக்கி இருக்கின்ற ஒட்டுமொத்தத் தொகையை விட 22 மடங்கு கூடுதல் பணத்தை, சமற்கிருதம் என்ற ஒரே மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கி இருக்கின்றார்கள்.
இந்த அவையில் இருக்கின்ற, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, ஒடியா, பஞ்சாபி மற்றும் ஏனைய மொழிகளைப் பேசுவோர், இதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் சமற்கிருதமும், இந்தியும், தென்னிந்திய மொழிகளை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்து விடும்.
கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்; எனக்கு சமற்கிருத மொழியை எழுத, பேச, படிக்கத் தெரியும் என ஒரு சான்றிதழை, ஒரு மாணவன் கொடுத்தால் போதும்; அந்த மாணவன் பத்து அல்லது 12 ஆம் வகுப்பில் நேரடியாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார். அவர்கள், இயற்பியல், வேதியியல், வரலாறு, புவிஇயல் என வேறு எந்தப் பாடத்தையும் படிக்க வேண்டியது இல்லை. நம்ப முடிகின்றதா?
சமற்கிருத மொழியை வளர்ப்பதற்காக, 643.24 கோடி செலவில் தேசிய சமற்கிருதக் கல்லூரியைத் (Rashtriya Sanskrit Sansthan) தொடங்கினார்கள். ஆனால், எங்கள் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்திற்குக் கடந்த ஆண்டு வழங்கியது வெறும் 4 கோடி 65 இலட்சம்தான். கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கிய ஒட்டுமொத்தத் தொகை வெறும் 21 கோடிதான்.
சமற்கிருத மொழியைப் பரப்புவதற்கான திட்டங்களை வகுப்பதற்காக, 2015 ஆம் ஆண்டு, மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமியைத் தலைவராகக் கொண்டு, 13 பேர் கொண்ட ஒரு குழுவை அறிவித்தார்.
அந்தக் குழு, 2016 பிப்ரவரி 17 ஆம் நாள், தங்களுடைய ஆய்வு அறிக்கையை வழங்கியது.
சமற்கிருத மொழியை வளர்ப்பதற்கான தொலைநோக்குத் திட்ட வரைவு (Vision, Road Map for development of Sanskrit) என்பது அதன் தலைப்பு.
நான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன். உங்களுடைய குரு மனு, சாதிகளை அறிமுகப்படுத்தி, மனிதர்களுக்கு இடையே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவினையை ஏற்படுத்தியவர். எங்களுடைய ஆசான் திருவள்ளுவர். ஈடு இணை அற்ற ஒரு பொதுமறையை இந்த உலகத்திற்குத் தந்தவர். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவர்.
உலகின் தொன்மையான மொழி தமிழ்தான். அதுவே, அனைத்து மொழிகளுக்கும் தாய்.
இந்தச் சட்ட முன்வரைவு, இந்த அவையால் ஏற்கப்பட்டுச் சட்டம் ஆனால், அது இந்திய ஒற்றுமையை உடைத்துத் துண்டுதுண்டாக்கி விடும்; மக்கள் ஆட்சிக் கோட்பாட்டை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிடும் என எச்சரிக்கின்றேன். எனவே, ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றேன்.
அனைத்து மாநில அரசுகளும், இந்தச் சட்டத்தை எதிர்த்து, சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 17-03-2020 தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment