மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள, தொன்மைச் சிறப்பு மிக்க இடங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில அரசுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தப் போவதாகவும் கூறி உள்ளார்.
தற்போது இந்தியத் தொல்லியல் அமைப்பின் கீழ், 3 ஆயிரத்து 691 பழமையான சின்னங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் தொன்மையான 120 கோவில்களும், அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது. இந்த நிலையில், “தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை; அவையும், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்,” என்று அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.
இது, மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கின்ற, அரசியல் சட்டத்திற்கு எதிரான முயற்சி ஆகும். இதுகுறித்து, நாடாளுமன்றத்தில், அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்துதான் தீர்மானிக்க முடியும். அதை விடுத்து, நடுவண் அரசின் ஒரு துறை அமைச்சருடைய அறிவிப்பின் மூலம், மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து விட முடியாது.
தமிழகத்தில் திருக்கோவில்கள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அவற்றைப் பாதுகாத்த பெருமை, நீதிக்கட்சி அரசின் சாதனைகளுள் ஒன்று ஆகும்.
சென்னை மாகாணத்தில், பனகல் அரசர் தலைமையில் நீதிக்கட்சி அரசு இயங்கியபோது 1922-ஆம் ஆண்டு ‘இந்து பரிபாலன சட்டம்’ கொண்டு வரப்பட்டது. பின்னர், 1927-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டது. கோவில் சொத்துகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்திட, முறையாகப் பராமரித்திட, ‘ஒரு சிலரின்’ ஆதிக்கத்தின்கீழ் இருந்த ஆலயங்களை மீட்டு, வாரியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. அந்த வகையில், தற்போது, 36 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்களும், 60 மடங்களும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. சிறப்பாக இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்துத்துவ அமைப்புகள் கூச்சல் எழுப்பி வருகின்ற நிலையில், அதற்கு வழிவகை செய்கின்ற உள்நோக்கத்துடன், பா.ஜ.க. அரசு, இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.
தமிழக அரசின் அதிகாரத்தைப் பறிக்கின்ற இந்த முயற்சிக்கு, அண்ணா தி.மு.க. அரசு துணை போகக் கூடாது. மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாள் கோவிலைக் கைப்பற்ற இந்தியத் தொல்லியல் துறை முயற்சித்த போது, அதை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ச்சியான அறப்போராட்டங்களை முன்னெடுத்ததால், அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
அதுபோல, தொன்மையான ஆலயங்களைக் கைப்பற்றி, தமிழகத்தின் பண்பாட்டு மரபுகளைச் சீரழித்து, ‘மதவாத’ நச்சு விதைகளைத் தூவ முயற்சிக்கின்ற வஞ்சகத் திட்டத்தைத் தமிழக மக்கள் முறியடிப்பார்கள் என்பதை, மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 04-03-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment