விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று (மார்ச் 20) நடைபெற்ற கொடிய வெடி விபத்தில் சிக்கி திருவேங்கடம் வட்டத்தைச் சேர்ந்த இராணி, ஜெயபாரதி, பத்ரகாளி, தாமரைச்செல்வி, தங்கம்மாள், வேலுத்தாய், குளக்கட்டாகுறிச்சியைச் சேர்ந்த காளியம்மாள் உள்ளிட்ட ஏழு பெண்களும், சங்குபட்டியைச் சேர்ந்த முருகையா என்பவரும், இன்று காலையில் முக்கூட்டுமலையைச் சேர்ந்த ஒருவர் என ஒன்பதுபேர் பரிதாபமாக உயிர் இழந்த செய்தி அறிந்து பெரும் துயர் அடைந்தேன்.
படுகாயம் அடைந்த ஒன்பது பேரில் இருவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மூவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ள தகவல் மனதை வாட்டுகிறது.
அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த இவர்களின் இறப்பால் ஏற்பட்டுள்ள துயரம், அக்குடும்பங்களால் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் துயரம் ஆகும். தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர் இழந்த குடும்பங்களுக்குத் தேவையான இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பதோடு, சிகிச்சையில் இருப்போருக்குத் தக்க நிவாரண உதவி வழங்குவதோடு தரமான மருத்துவச் சிகிச்சை அளித்திட தனிக்கவனம் கொண்டு செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இந்த பட்டாசு ஆலையில் உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மீறி கூடுதல் இலாப நோக்கத்தில், ஆடம்பர ரகப் பட்டாசுகளை உற்பத்தி செய்ததன் விளைவே இக்கோர விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதி மக்களிடம் நிலவும் கருத்தில் உள்ள உண்மைத் தன்மை குறித்து பாரபட்சமற்ற முறையில் நீதி விசாரணை நடத்திட உத்தரவிடுமாறும் அதில், நிர்வாகத் தவறுகள் நடந்து இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 21-03-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment